
இன்றுள்ள மனிதன் முகத்திலிருந்து எந்த வகை உணர்வுகளையும் கண்டுபிடிக்க முடிவதில்லை. எப்போதும் இறுக்கமாகவே வைத்திருக்கிறான். எவன் வெற்றியடைந்து வருகிறான் அல்லது எவன் தோற்றுக் கொண்டிருக்கிறான் என்பதை, கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் பேசும் பேச்சை வைத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தோற்றவன் கூட சிரித்தபடி, முகத்தை வைத்துக் கொள்கிறான். அவனிடம் ஏகப்பட்ட முரண்பாடுகள்.
இந்த உலகத்தை படைத்து, இங்கேயே கொஞ்ச நாள் தங்கியிருந்தார், கடவுள். அப்போது தான், அது எவ்வளவு இடைஞ்சல் என்பது, அவருக்கு புரிந்தது.
தினமும், மனிதர்கள் தேடிவந்து, ஏதாவது புகார் சொல்லியும், எனக்கு அது வேணும், இது வேணும் என, கேட்டபடி இருந்தனர்.
கடவுளுக்கு ஏகப்பட்ட குழப்பம் - சிக்கல்.
அனைவரின் ஆசைகளையும், அவரால் நிறைவேற்ற முடியவில்லை. ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தது.
ஒருநாள், என்ன செய்வது என்று, தன்னுடைய அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை கேட்டார்.
'இதென்ன பிரமாதம்? பேசாமல் இமயமலைக்கு போய் உட்கார்ந்துக்குங்க. யாரும் தொந்தரவு செய்ய மாட்டாங்க...' என்றனர்.
'அங்கேயும் மனிதர்கள் வர ஆரம்பித்து விடுவர்...' என்றார், கடவுள்.
'சரி, அப்படின்னா, சந்திரனில் போய் இருந்துக்கலாம்...' என்றனர்.
'அங்கேயும் மனிதன் வரப்போறான்...' என்றார், கடவுள்.
'துாரமாக உள்ள நட்சத்திர மண்டலத்துக்குப் போயிடலாம்...' என்றனர்.
'இதெல்லாம் நிரந்தர தீர்வு ஆகாது. நிரந்தரமாக, இந்த மனிதனுடைய தொல்லையிலிருந்து நான் விடுபடணும். அதுக்கு வழி சொல்லுங்க...' என்றார், கடவுள்.
அப்போது, கடவுளின் காதில், ஒரு வழியைச் சொன்னார், வயதான பெரியவர்.
கடவுள் முகம் மலர்ந்தது.
'அதுதான் சரி... அப்படியே செய்யலாம்...' என்றார்.
அந்த வயதானவர் சொன்ன ரகசியம் என்ன தெரியுமா?
'மனிதனால் அடைய முடியாத ஒரு இடம் இருக்கு. அது வேற, எங்கேயும் இல்லை. அவனுக்குள்ளேயே இருக்கு. அங்கே போய் மறைஞ்சிக்குங்க. மனுஷனாலே, உங்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது...'
மனிதன் நினைக்காத இடம் அதுதான்...
உள்ளுக்குள் இருக்கும் உண்மையைப் புரிந்து கொள்ளாமல், வெளியில் எங்கேயோ அது இருப்பதாக நினைத்து, விரட்டிக் கொண்டு மனிதன் அலைகிறான் என்பதை விளக்க கூறப்பட்ட கதை இது.
பி. என். பி.,