
வெஸ்டர்ன் யூனியன் கம்பெனிக்காக, ஓர் இயந்திரத்தை வடிவமைத்துக் கொடுத்தார், தாமஸ் ஆல்வா எடிசன். அந்த இயந்திரத்துக்கான விலையை நிர்ணயிப்பதில் சற்றுக் குழப்பம் ஏற்பட்டது.
எடிசனும், அவரது மனைவியும் இதுபற்றி விவாதித்தனர்.
'இயந்திரத்துக்கு 8 லட்ச ரூபாய் கேளுங்கள்...' என்றார், எடிசன் மனைவி.
அந்த காலத்தில், 8 லட்சம் என்பது மிகப்பெரிய தொகை.
இது, பெரிய தொகையாக இருந்தால் என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருந்தார், எடிசன்.
பணம் தருவதற்காக கம்பெனி ஓர் அதிகாரியை அனுப்பி இருந்தது. இயந்திரத்துக்கான விலையை அதிகாரி கேட்டார்.
எடிசன் சில நிமிடங்கள் மவுனமாக, எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
பொறுமையிழந்த அதிகாரி, 'எடிசன், இதோ உங்கள் இயந்திரத்துக்காக, 40 லட்சம் ரூபாய்...' என்று அதற்கான காசோலையை கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்.
பொறுமை காத்த எடிசனுக்கு, ஐந்து மடங்கு லாபம் கிடைத்தது. அவசரப்பட்ட அந்த அதிகாரியால் அவர் சார்ந்த கம்பெனிக்கு, ஐந்து மடங்கு நஷ்டம் ஏற்பட்டது.
சிறையில் அடைபட்டு மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்தார், தத்துவஞானி சாக்ரடீஸ்.
ஒருநாள், பக்கத்து அறையில் இருந்த, கைதி ஒருவர், நரம்பு இசைக்கருவி ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்.
அந்த இசையை வெகுவாக ரசித்தவர், 'இந்த வாத்தியத்தை எப்படி இசைப்பது? எனக்கும் சொல்லிக் கொடுங்கள்...' என்று அந்த கைதியிடம் கேட்டார், சாக்ரடீஸ்.
அந்த கைதிக்கு பயங்கர வியப்பு.
'நீங்களோ மரண தண்டனை பெற்றவர். விரைவில் உயிரிழக்கப் போகும் நீங்கள் இதைக் கற்றுக் கொள்வதால் என்ன பயன்?' என்றார்.
'புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டேன் என்ற திருப்தியுடன் சாகலாம் அல்லவா, அதனால் தான்...' என்றார், சாக்ரடீஸ்.
*****
கல்கத்தாவில் நடந்த ஒரு விழாவில். ராஜாஜி கலந்து கொண்டார். வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர், 'டாக்டர் ராஜாஜி அவர்களே!' என்றார்.
அடுத்து பேசிய ராஜாஜி, 'அருகதை உடையவன் என்று நினைத்து, எனக்கு சில பட்டங்களை ஆழ்ந்த அன்பால், என் பெயரோடு இணைத்துப் பேசினீர்கள். மாண்புமிகு என்று நீங்கள் சொல்லும் போது, அது பதவியை குறிப்பதால், அதை நான் மறுப்பதில்லை.
'ஆனால், டாக்டர் என்றழைக்கும் போது, அதை நான் சங்கடமாக உணர்கிறேன். ஏனெனில், அது, நான் படித்து பெற்ற பட்டமன்று. சில பல்கலைக்கழகங்கள் எனக்கு அந்த கவுரவ பட்டத்தை கொடுத்திருக்கின்றன.
'தன் மகனை நல்ல பிள்ளை என்று சொல்ல, தாய்க்கு உரிமை உண்டு. அதற்காக, அவனை அனைவரும் நல்ல பையன் என்றழைக்க வேண்டிய அவசியமில்லை. என்னை நீங்கள், ராஜகோபாலாச்சாரி என்றே அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...' என்றார், ராஜாஜி.
நடுத்தெரு நாராயணன்

