
'ஹீரோ' ஆகிறார், லோகேஷ் கனகராஜ்!
மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என, பல படங்களை இயக்கிய, லோகேஷ் கனகராஜ் இப்போது, ரஜினி நடிப்பில், கூலி படத்தை இயக்கி வருகிறார். மேலும், மாஸ்டர் மற்றும் சிங்கப்பூர் சலுான் போன்ற படங்களில் கவுரவ வேடத்தில் நடித்தவர், அதையடுத்து, ஸ்ருதிஹாசனுடன் இணைந்து, 'இனிமேல்' என்ற வீடியோ ஆல்பத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்து, சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும், புறநானுாறு என்ற படத்தில், இரண்டு, 'ஹீரோ'களில் ஒருவராக நடிக்க போகிறார்.
— சினிமா பொன்னையா
மராத்தி மொழி பயிலும், ராஷ்மிகா மந்தனா!
கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவரான நடிகை, ராஷ்மிகா மந்தனா, தமிழில் விஜயுடன், வாரிசு படத்தில் நடித்த போது, ஆசிரியர் ஒருவரை நியமித்து தமிழ் பேச பயிற்சி எடுத்தார்.
தற்போது, ஹிந்தி படத்தில் நடிக்கும் அவர், அந்த படத்தில் மராத்தி வசனங்கள் இடம் பெறுவதால், அதற்காக ஆசிரியர் ஒருவரை நியமித்து, மராத்தி மொழி வார்த்தைகளை உச்சரித்து பேச பயிற்சி எடுத்து வருகிறார்.
— எலீசா
அஜித் எடுத்த முடிவு!
ஆரம்ப காலத்தில் ஒரே நேரத்தில், இரண்டு, மூன்று படங்களில் நடித்து வந்த, அஜித்குமார், ஒரு கட்டத்தில், ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு தான், அடுத்த படம் என்ற பாணிக்கு மாறினார்.
ஆனால், விடாமுயற்சி படம் எதிர்பார்த்தபடி, வெளியாவதில் காலதாமதம் ஆவதால், இனிமேல் ஒரே படத்தை நம்பி இருக்க கூடாது என்பதற்காக, ஒரே நேரத்தில், இரண்டு படங்களில் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். மேலும், அடுத்தடுத்து புதிய கதைகள் கேட்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார், அஜித்குமார்.
— சி.பொ.,
ரசிகர்களுக்கு, விஜய் போட்ட தடை!
தான் நடிக்கும் படங்களின் போஸ்டர்களை ரசிகர் மன்றம் சார்பில் வெளியிடும்போது, அதில் தன், தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் இடம் பெறக் கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார், விஜய்.
அதேபோல் மற்ற கட்சிகளின் தலைவர்களை இகழும் படியான போஸ்டர்களை வெளியிடக் கூடாது. அரசியலில் நாகரிகத்தை பின்பற்ற வேண்டும் என்றும், ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை
தளபதி நடிகரின் வாரிசு, இயக்குனராக களம் இறங்க தயாரான நிலையில், அவர் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்று ஏற்கனவே, இரண்டு இளவட்ட, 'ஹீரோ'கள் தவிர்த்து விட்டனர். சமீபத்தில் அவர் சொன்ன கதையைக் கேட்ட, புரோட்டா நடிகரும் ரொம்பவே யோசனை செய்துள்ளார்.
இப்படி, 'காமெடி'யன் ஆக இருந்து, 'ஹீரோ' ஆன நடிகர் கூட, தன் கதையில் நடிக்க தயங்குவதால், கடுமையான, 'அப்செட்'டில் இருந்து வருகிறார், தளபதி நடிகரின் வாரிசு.
தாரா நடிகையின் மார்க்கெட், திடீரென்று சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதால், இயக்குனர்கள் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார். குறிப்பாக ஏற்கனவே, 'ஹிட்' கொடுத்தவர்களின் படங்களில் மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ளார்.
மேலும், மார்க்கெட்டை மறுபடியும் துாக்கி நிறுத்தும் முயற்சியாக, படக்கூலியை கணிசமான அளவு குறைத்திருக்கிறார். அதோடு, தன்னை வைத்து மெகா படம் எடுக்க முன்வரும் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் ரீதியாகவும் திரைமறைவில் உதவிக்கரம் நீட்டவும் துவங்கி இருக்கிறார், தாரா நடிகை.
சினி துளிகள்!
ரஜினிகாந்தின் அண்ணனான சத்ய நாராயண ராவ், மாம்பழ திருடி என்ற படத்தில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தன்னிடம் இயக்குனர்கள் கதை சொல்ல வந்தால், அதைக் கேட்டுவிட்டு, ஒரு வாரத்திற்கு பிறகே அதில் நடிப்பது குறித்து ஒப்புதல் அளிக்கிறார், நயன்தாரா.
தான் இயக்கும் முதல் படம், மாஸான ஆக்ஷன் கதையில் உருவாகும் என்கிறார், விஜயின் மகன், ஜேசன் சஞ்சய்.
சிவகார்த்திகேயன் உடன், அமரன் படத்தில் நடித்திருக்கும் தமிழ் நடிகையான சாய் பல்லவி, அந்த படத்தின் ஹிந்தி, 'டப்பிங்'கில், அவரே பேசியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார், கமல்ஹாசன். இந்நிலையில், பிக்பாஸ் சீசன் - 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, சிம்பு, அரவிந்த்சாமி மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
அவ்ளோதான்!

