
'கிளாடியேட்டர்' என்றால், பல விதமான சண்டைக் கலைகளில் தேர்ந்தவர்கள் என்று அர்த்தம். இவர்கள் போரில் ஈடுபடுவது இல்லை. மன்னரை மகிழ்விக்க மைதானத்தில் மோதிக் கொள்வர்.
இதைக் கொடுமையாகவும் நடத்துவது வழக்கம். கிளாடியேட்டரை சிங்கத்தோடு மோதவிட்டு ரசித்தனர், ரோமானிய மன்னர்கள்.
இருவரில் ஒருவர் செத்து விழும் வரை, மோதல் நடக்கும். மன்னர் தான், 'ரெப்ரி!'
அவருடைய கட்டை விரல் உயர்த்தப்பட்டால், 'நீ வெற்றி அடைந்து விட்டாய்...' என, அர்த்தம். கட்டை விரல் நிலத்தை நோக்கி தாழ்ந்தால், 'எதிராளியின் தலையை சீவி விடு...' என, அர்த்தம்.
உலகில், அநேகமாக எல்லா மன்னர்களிடமும் விதவிதமான, கிளாடியேட்டர்கள் உண்டு.
விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரிடம், பிரத்யேகமாக, 1,000 மல்யுத்த வீரர்கள் இருந்தனர். தினமும் பிற்பகலில், மைதானத்தில், மல்யுத்தம் நடக்கும். சங்கிலியின் முனையில் முட்கள் பதிக்கப்பட்ட இரும்பு உருண்டைகளோடு மோதுவர், வீரர்கள்.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்தவர்களான, பேயஸ் மற்றும் நுானிஸ் எழுதிய, 'விஜயநகர சாம்ராஜ்யம்' புத்தகத்தில் இதுபற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
ஆ ன்மிக சக்கரவர்த்தி வாரியார் சுவாமிகள், சொற்பொழிவு செய்யும் போது, இடையிடையே இளைஞர்களைப் பார்த்து கேள்வி கேட்பார்.
ஒருமுறை முருகப் பெருமானின் பெருமை பற்றி சொற்பொழிவாற்றிய போது, 'தம்பி, முருகப் பெருமானின் அப்பா பெயர் என்ன?' என, ஒரு இளைஞனிடம் கேட்டார், வாரியார்.
அந்த இளைஞன், முதல் நாள் இரவு தான், திருவிளையாடல் திரைப்படம் பார்த்திருந்தான். அந்த நினைவோடு, சிவனாக நடித்த, சிவாஜியை மனதில் கொண்டு, 'முருகப் பெருமானின் அப்பா பெயர் சிவாஜி...' என்றான்.
கூட்டத்தில் அனைவரும் சிரித்து விட்டனர்.
ஆனால், 'இந்தப் பையன் நல்ல முறையில் பதில் சொல்லி இருக்கிறான். அவன் பதிலில் இந்திய கலாசாரம் தெரிகிறது. எப்படி நம் தேசப்பிதா காந்தியை, காந்திஜி என்றும், நேருவை, நேருஜி என்றும் கூறி பெருமைப்படுத்துகிறோம்.
'அதுபோல, முருகன் அப்பா சிவாவை, சிவாஜி என்று சொல்லி இருக்கிறான்...' என்று, வாரியார் சுவாமிகள் சமயோசிதமாக கூறியதும், கூட்டம் நெடுநேரம் கை தட்டியது. இளைஞனின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.
ஷா ஜஹான், தாஜ்மஹாலை கட்டி முடிக்க, 22 ஆண்டுகள் பிடித்தது. கட்டி முடித்த பின், அதற்காக அமைக்கப்பட்ட சாரங்களை கழற்றியாக வேண்டும்.
'இந்த வேலையை முடிக்க எவ்வளவு நாள் ஆகும்?' என, அரசு அதிகாரியிடம் கேட்டார், ஷாஜஹான்.
'ஆறு மாதமாகும்...' என்றார், அந்த அதிகாரி.
சிறிது நேரம் யோசித்தவர், 'பொதுமக்கள் வந்து சாரங்களை கழற்றி, அதிலுள்ள மரம், கீற்று ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்...' என, அறிவித்தார்.
அவ்வளவு தான். பொதுமக்கள் திரண்டு வந்தனர். ஒரே நாளில் சாரம் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது.
- நடுத்தெரு நாராயணன்