
ஒருமுறை, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார், சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ஓமந்துார் ராமசாமி ரெட்டியார்.
சிகிச்சைக்காக, பொது மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் ரத்தினவேலு சுப்ரமணியத்தை அவரது இல்லத்துக்கு அழைத்து வந்தனர். ராமசாமியின் உடலை பரிசோதிக்க ஆரம்பித்தார், டாக்டர்.
உடனே குறுக்கிட்டு, 'நீங்கள், சிகிச்சையைத் துவங்கும் முன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும்...' என்று கூறினார், முதல்வர்.
சிகிச்சை அளிக்க வேண்டிய நோயாளியை கண்முன் படுக்க வைத்திருக்கும் போது, இப்படி ஒரு நிபந்தனையா என, டாக்டருக்கு குழப்பம். இருப்பினும், ஒப்பந்த அறிக்கையை வாங்கி படித்தார்.
அதில், 'எனக்கு சிகிச்சை அளித்த பின்னர், நீங்களோ, உங்கள் உறவினர்களோ யாரும் என்னிடம் சிபாரிசுக்கு வரக்கூடாது. பதவி உயர்வு சலுகையை எதிர்பார்க்கக் கூடாது. என்னிடம் அரசியல் குறித்து எதுவும் பேசக் கூடாது...' என்ற, மூன்று நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு டாக்டர் சம்மதித்த பிறகே, சிகிச்சை பெற ஒப்புக்கொண்டார், ஓமந்துாரார்.
சுதந்திர போராட்ட காலத்தில், 'ஹர்த்தால்' என்ற வார்த்தை அடிக்கடி அடிபட்டது. பொதுமக்கள், அன்னிய அரசாங்கத்திடம் தங்கள் கண்டனத்தையும், வெறுப்பையும் வெளிப்படுத்த, தாங்கள் நடத்தும் கடை, அலுவலகங்களை மூடுவதை, 'ஹர்த்தால்' என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டது.
இந்திய மக்களை என்றுமே அடிமைகளாக வைத்திருக்க கொண்டு வரப்பட்ட, ரவுலட் சட்டத்தை எதிர்த்து, காந்திஜி ஆரம்பித்த இயக்கத்தை ஆதரித்து, நாடெங்கிலும் கடைகள் அடைத்து, முதன் முறையாக, 'ஹர்த்தால்' கடைப்பிடிக்கப்பட்டது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை, சைமன் கமிஷன் வருகை, பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய தியாகிகள் துாக்கிலிடப்பட்ட சம்பவங்களையொட்டி நாடெங்கும், 'ஹர்த்தால்' கடைப்பிடிக்கப்பட்டது.
முன்பெல்லாம், எல்லாக் கடைகளையும் அடைக்க செய்ய வேண்டும் என்றால், ஒவ்வொரு கடையின் பூட்டிலும், ஒவ்வொரு எலும்புத் துண்டைச் செருகி வைத்து விடுவது வழக்கம். அப்படி எலும்புத் துண்டு இருப்பதை பார்க்கும், கடைக்காரர்கள், அன்று கடையை திறக்க மாட்டார்கள்.
'ஹிட்' என்ற ஹிந்தி வார்த்தை எலும்பையும், 'தால்' என்ற ஹிந்தி வார்த்தை, பூட்டையும் குறிப்பிடுபவன. அதனால் தான், கடை அடைப்புக்கு, 'ஹர்த்தால்' என்ற பெயர் வந்தது.
பின்னர், இந்த எலும்பு சம்பந்தப்பட்ட அனாசார வார்த்தையை உபயோகிக்க விரும்பாமல், 'அந்தந்த காரியத்தை அப்படி அப்படியே போடு...' என்ற பொருள்படும், 'கார் பார் பந்த்' என்ற சொல்லை, ஹர்த்தாலுக்கு பதில் உபயோகிக்க துவங்கினர்.
பொதுவுடமை சித்தாந்தத்தின் தந்தையான ரஷ்ய முன்னாள் அதிபர் லெனின், நாற்காலியில் அமர்ந்தால் அவருடைய கால்கள் தரையைத் தொடாது. அந்த அளவுக்கு அவருடைய கால்கள் குட்டையானவை.
ஒருமுறை, 'நீங்கள் நாற்காலியில் உட்காரும் போது, உங்கள் கால்கள் தரையைத் தொடவில்லையே என்ற மனக்குறை உங்களுக்கு உண்டா?' என்று கேட்டார், லெனினின் நண்பர் ஒருவர்.
'கால்கள் தரையைத் தொடாவிட்டால் என்ன? அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. கைகளால் வானத்தை தொட்டுக் காட்ட முடியும்...' என்றார், கம்பீரமாக லெனின்.
நடுத்தெரு நாராயணன்