sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குற்றம் பார்க்கின்...

/

குற்றம் பார்க்கின்...

குற்றம் பார்க்கின்...

குற்றம் பார்க்கின்...


PUBLISHED ON : செப் 08, 2024

Google News

PUBLISHED ON : செப் 08, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்காவின் மழை நகரம் எனப்படும், சியாட்டல் நகரத்தின், 'ரெட்மண்ட்' பகுதி. இந்தியர்கள் அதிகம் வசிப்பதால், இந்தியாவிலிருந்து மகன் அல்லது மகள் வீட்டிற்கு வரும் பெற்றோர், மாலையில், அருகில் இருக்கும் பூங்காக்களுக்கு வந்து விடுவர்.

அப்படி, 'ப்ரிஸ்டல்' பூங்காவுக்கு வந்தபோது, சுந்தரத்திற்கு அறிமுகமானவர் தான், நாகராஜன்.

பூங்காவில் பேரனை சறுக்கு மரத்தில் ஏற்றி, கீழே நின்று பிடித்தபடி, ''பார்த்து சறுக்குப்பா, சாரங். தாத்தா இருக்கேன், பயப்படாத என்ன?'' என்று, குரல் கொடுத்த சுந்தரத்தை நெருங்கிய நாகராஜன், ''தமிழா?'' என்று, ஆர்வமாய் கேட்டார்.

''ஆமாம்!''

''நினைச்சேன். வெளி தேசத்தில், நம் பாஷை கேட்டா, ஒரு சந்தோஷம். ஆனா, பாருங்க... இங்க வர்ற வயசானவங்க கூட, பேரன் - பேத்திகளுடன் இங்கிலீஷ்ல தான் பேசறாங்க. தாய்மொழியை பெரியவங்களே மதிக்கலேன்னா, அடுத்த தலைமுறை எப்படி மதிக்கும் சொல்லுங்க...'' என்று ஆரம்பித்தார், நாகராஜன்.

ஒரு வாரமாய், அமெரிக்காவையும், தன் மகன் - மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளை பற்றியும் குற்றம், குறைகளை சொல்லிக் கொண்டே இருந்தார்.

இன்றைக்கும் சுந்தரம் அருகில் சென்று, கல் பெஞ்சில் உட்கார்ந்தபடி, ''அமெரிக்காவுல, எங்க பார்த்தாலும் மரங்களா இருக்கு; மனுஷங்களையே காணோம். எல்லாரும் கார்ல போறாங்க.

''நம் ஊர் போல, நாமே தனியா ஒரு இடத்துக்கு, பஸ், மெட்ரோன்னு போய் சுற்றிப் பார்க்க முடியுதா... மகனும், மருமகளும், பாதி நாளைக்கு, 'ஒர்க் ப்ரம் ஹோம்' சொல்லி, ஆளுக்கு ஒரு அறையில் அடைஞ்சுடறாங்க; சாயந்திரம், 5:00 மணி வரை, வெளில வர்றதே கிடையாது.

''கேட்டா, 'மீட்டிங்'காம். இங்க வந்தது முதல், என் பொண்டாட்டி தான் சமையல், பாத்திரம் கழுவறது, துணியை மிஷினில் போடறதுன்னு எல்லாம் செய்யுறா. தட்டுல சாப்பாட்டை போட்டு, ரெண்டு பேருக்கும், அறைக்கு கொண்டு போய் கொடுக்கிறாள்.

''காலையில நறுக்குன்னு நாலு இட்லி, தோசைன்னு சாப்பிடறதில்லை. சீரியலாம், அதைப் பாலில் போட்டு அவசர அவசரமா முழுங்கறாங்க. பள்ளிக்கூடம் விட்டு, பசங்க வந்தா, நீச்சல், ஓவியம், பாட்டு வகுப்புன்னு ஆளுக்கொரு பக்கம் காரை எடுத்துட்டு ஓடி, ராத்திரி, 10:00 மணிக்கு வராங்க.

''எங்ககிட்ட, 'என்ன வேணாலும் சாப்பிடுங்க, எல்லாம் இருக்கு...' என, சொல்றாங்களே தவிர, 'என்னப்பா, சாப்பிட்டியா...' என, ஒரு வார்த்தை கேட்கறதில்லை. 'டிவி'யில எல்லா தமிழ் சேனலும் இருக்கு; ஒரு போனைக் கொடுத்து, 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்ல போய் பாருங்க...' என்கிறான், மகன்.

''மருமக, நம் ஊரு பொண்ணு தான். கிராப் வெட்டி, பேன்ட் - சட்டை போட்டுக்கிட்டு, நெற்றியில் கடுகு சைஸ்ல பொட்டு வச்சுக்கிட்டு, தாலியை கழட்டி வச்சுட்டுப் போறா சார்... இது என்ன அக்கிரமம்?'' என்றார், நாகராஜன்.

சுந்தரம் மவுனமாய் இருக்க, ''உங்க வீட்ல இப்படி இல்லை போல, அதான் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்கன்னு நினைக்கிறேன்,'' என்று, பெயருக்கு ஏற்ற மாதிரி சீறினார், நாகராஜன்.

''என் வீட்லயும் இதே கதை தான். மருமகளுக்கு இரண்டாவது பிரசவம், 'சிசேரியன்' என்பதால், உதவ வந்திருக்கோம். எல்லாம் என் மனைவி தான் செய்யிறாங்க. மகனுக்கு, ஆபீஸ் விஷயமா, ஜெர்மனி, பிரான்ஸ்ன்னு போக வேண்டி இருக்கு,'' என, சிரித்தபடி கூறினார், சுந்தரம்.

''ஓஹோ... அதான் பேரனைக் கூட்டிட்டு, பூங்காவுக்கு வந்துடறீங்க. சமையல்காரி ஆகவும், பிரசவிச்ச மருமகளுக்கு எடுபிடி ஆயாவாகவும் இருக்காங்க, உங்க மனைவி. அமெரிக்கா வந்து இதெல்லாம் தேவையா சார்?'' என்றார், நாகராஜன்.

புன்னகைத்தபடி, ''சார், சொன்னா தப்பா நினைக்கக் கூடாது. அமெரிக்காவுக்கு, பசங்களை நாம தானே அனுப்பினோம். சின்ன வயசிலிருந்தே அவங்களுக்கு வெளிநாட்டு கனவை உண்டாக்கி, வளர்த்தோம். அப்புறம் அவங்களை குற்றம் சொல்லலாமா?'' என்றார், சுந்தரம்.

''அதுக்காக, இங்க சுதந்திரம் இல்லாமல் இருக்கோமே... வெளியில தனியா ஒரு இடம், நாமளா போய் வர முடியுதா... எல்லாத்துக்கும் அவங்களை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிறது, பிடிக்கவே இல்லை,'' என்றார், நாகராஜன்.

''காலம் மாறிட்டு வருது சார், நம் காலத்தின் வாழ்க்கை முறையே வேற... இங்கே இந்த கொடுமையான குளிரில், புருஷன் - பொண்டாட்டி ரெண்டு பேரும் வேலைக்கு போக வேண்டிய அவசியம். வீட்டில் சும்மா இருக்குறது கஷ்டம்.

''அவங்களும், டாலர்களில் சம்பாதிச்சு, தன் அப்பா - அம்மாவை நல்லா வச்சுக்க தான் நினைக்கிறாங்க. அவங்க இல்லேன்னா, நாம இப்போ அமெரிக்காவுக்கு வர முடிஞ்சிருக்குமா... இங்க வந்ததால், 'நயாகரா பார்த்தேன்; ஹாலிவுட் போனேன்...' என, ஊர்ல போய் சொல்லிக்க தான் முடியுமா...

''அவங்களும், வார இறுதி நாளில், நம்மை எல்லாம், கோவில், வெளியூரில் முக்கியமான இடம்ன்னு எங்காவது கூட்டிட்டுப் போறாங்க.

''இங்கே உள்ள சீதோஷ்ண நிலைக்கு, சமைச்சதை வெளியில வச்சாக் கூட, ஒரு வாரத்துக்கு கெட்டுப் போகாது. அதனால, ஐந்து நாட்களுக்கு திட்டமிட்டு சமைச்சு, ப்ரிஜ்ஜில் வைக்கிறாங்க. இந்திய கலாசாரத்தை குழந்தைகளும் தெரிஞ்சுக்கணும்ன்னு தான் பாட்டு, நடனம்ன்னு ஏன், தமிழ் வகுப்புக்குக் கூட கூட்டிப் போறாங்க.

''ஒண்ணு தெரியுமா, இங்கே வந்ததும், நம் இந்தியர்களுக்கு தாய் நாட்டுப் பாசம் அதிகமாயிடுது. தமிழ்ப் பசங்க நான்கு பேர் கூடினால், ஊர்ல படிச்ச நாட்களை, பார்த்த சினிமாவை, பழகின மனுஷங்களை பற்றி தான் பேசிக்கிறாங்க. இந்திய ஹோட்டலை தேடி, இட்லியும், தோசையும் சாப்பிடப் போறாங்க.

''வேலை செய்யுற இடத்துல, போட்டுக்கிற உடைக்கு இடைஞ்சலா இருக்கும்ன்னு, தாலியை கழட்டி வச்சா, அதுல என்ன தப்பு? அவங்க புருஷனை கழட்டி வைக்கலியே... இந்தியாவில் பல பேரு, வெளிநாட்டு நாகரிக மோகத்துல, 'பாரில்' குடிக்கிறதும், பாப் தலை, ஜீன்ஸ் பேன்ட் போட்டு, 'டேட்டிங்' கலாசாரத்துல வாழறதுமா இருக்காங்க.

''எல்லா இடத்துலேயும், நல்லதை எடுத்துக்கிட்டா பிரச்னை இல்ல. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லையே. மேலும், வயசான காலத்துல, வறட்டுப் பிடிவாதங்களை ஒதுக்கி, விட்டுக் கொடுத்து வாழப் பழகிக்கலாமே, சார்...'' என்றார், சுந்தரம்.

எதுவுமே பேசவில்லை, நாகராஜன்.

ஆனால், அவர் யோசிக்கிறார் என்பதை, சுந்தரம் புரிந்து கொண்ட போது, நாகராஜனின் மொபைல் போனில் யாரோ அழைத்தனர்.

போனை காதில் வைத்தவர், ''என்னடா விசு, எப்படி இருக்க. சென்னை எப்படி இருக்கு?'' என்றார்.

''நீங்க எப்படி இருக்கீங்க?'' என்றான், விசு.

''நானா, ஜோரா இருக்கேன். அமெரிக்கா, சொர்க்க பூமியா இருக்கு. இயற்கை பேசுதுப்பா. மகனும் - மருமகளும், நல்லா கவனிச்சுக்கிறாங்க. ஒரு குறையும் இல்லை...'' என்றார், நாகராஜன்.

ஷைலஜா






      Dinamalar
      Follow us