
தமிழ்நாடு, சென்னை மாகாணமாக இருந்த போது, 1952ல், முதல்வராக இருந்த, ராஜாஜியால் உருவாக்கப்பட்ட பகுதி தான், நந்தனம். அவர் பதவி வகிக்கும் காலத்தில், சென்னை மேம்படுத்தப்பட்டது.
அப்போது, ஒரு பகுதி மேம்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்லாம் அதுபற்றி கலந்து பேசினர். அந்தப் பகுதிக்கு முதல்வர் ராஜாஜியின் பெயரைச் சூட்ட முடிவு செய்தனர். இதுகுறித்து, முதல்வரை சந்தித்துப் பேசினர், அதிகாரிகள்.
அந்த குடியிருப்பு குறித்து பல்வேறு விஷயங்களை கேட்டு அறிந்தார், ராஜாஜி. இறுதியில், 'குடியிருப்பு பகுதிக்கு உங்கள் பெயரை சூட்டுவதற்கு ஒப்புதல் தர வேண்டும்...' என்றனர், அதிகாரிகள்.
இதை கேட்ட, ராஜாஜியின் முகம் மாறிவிட்டது.
'என்னது, என் பெயரா... சுத்த அபத்தமாக இருக்கிறதே... வேறு பெயர் உங்களுக்குத் தோன்றவில்லையா?' என, சிறிது கடுமையாக கேட்டார், ராஜாஜி.
இதைக்கேட்டு திகைத்து, 'ஐயா, நீங்களே ஏதேனும் ஒரு பெயரைச் சொல்லி விடுங்கள்...' என்றனர், அதிகாரிகள்.
'இந்த ஆண்டின் தமிழ்ப்பெயர் என்ன?' என, ராஜாஜி கேட்க, 'நந்தன வருஷம்...' என்றனர், அதிகாரிகள்.
'ம்... சரி. அந்தக் குடியிருப்புக்கு, நந்தனம் என பெயர் சூட்டுங்கள்...' என்றார், ராஜாஜி.
சென்னை மயிலாப்பூரில் தங்கியிருந்த, ஏ.வீரப்பன் அறைக்கு அடிக்கடி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சென்று, சில சமயங்களில் அங்கேயே தங்கி விடுவதும் வழக்கம்.
கவிஞர் எப்போதும் அதிகாலையிலேயே எழுந்து, ஏதாவது ஒரு பாடலை இயற்றி, தானே மெட்டமைத்து, பெஞ்சிலோ, தீப்பெட்டியிலோ தாளம் போட்டுக் கொண்டு பாடுவார்.
ஆனால், அங்கு தங்கி இருக்கும் வேறு சில நண்பர்கள், பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் துாங்கிக் கொண்டிருப்பர். இதை ஒரு நாள் பார்த்த, வீரப்பன் தமாஷாக, 'துாங்காதீங்க தம்பிகளா துாங்காதீங்க நல்ல பொழுதையெல்லாம் துாங்கிக் கெடுத்து இப்படி சோம்பேறி ஆகாதீங்க...' என, யதார்த்தமாக கூறினார்.
இதை கேட்டுக் கொண்டிருந்த கவிஞர், 'நண்பா, ஒரு பாட்டுக்கு பல்லவி கிடைக்காம திண்டாடிக்கிட்டு இருந்தேன். அருமையான பல்லவியைக் கொடுத்துட்டீங்க...' என்று கூறி, அப்போதே பாடலை எழுதி, அதற்கு மெட்டமைத்து தாளம் போட்டுக் கொண்டே பாடினார்.
அது தான், எம்.ஜி.ஆரின், நாடோடி மன்னன் படத்தில் இடம் பெற்ற அன்றைக்கும், இன்றைக்கும் ஏன் என்றைக்கும் அழியாத மிகப் பிரபலமான, 'துாங்காதே தம்பி துாங்காதே...' பாடல்.
நடுத்தெரு நாராயணன்