
சிவநாதனின் ஒரே மகன், வாசு எழுந்து பாத்ரூம் போயிருக்க, அவன் படுக்கையில், 'பெட்ஷீட்' கூட மடித்து வைக்காமல் கலைந்து கிடந்தது.
டவலால் முகத்தை துடைத்தபடி வாசு வெளியே வர, ''வாசு, என்ன பழக்கம் இது. போர்த்தியிருந்த போர்வையை மடிக்காமல் போற. வந்து மடிச்சு வை,'' என்றார், சிவநாதன்.
''போங்கப்பா, எனக்கு டியூஷன் போகணும். 'லேட்' ஆயிடுச்சு. நீங்க சும்மா தானே நிக்கிறீங்க, மடிச்சு வைங்க,'' என்று கூறி சென்றான், வாசு.
''என்னங்க, 'டாங்க்' நிரம்பிடுச்சு. மோட்டாரை, 'ஆப்' பண்ணுங்க,'' என்று, சிவநாதனின் மனைவி உள்ளிருந்து குரல் தந்தாள்.
''அம்மாவுக்கும், மகனுக்கும் என்னை வேலை வாங்கறதே பிழைப்பாகப் போயிடுச்சு.''
''இப்ப என்னப்பா பெரிய வேலை செஞ்சிட்டீங்க. சாயந்திரம் ஆபீஸ் விட்டு வந்ததும் என் அலமாரியை, 'க்ளீன்' பண்ணி வைக்கணும் சரியா?'' என்றான், வாசு.
''ஏய் என்கிட்டே உதைபடப் போற,'' என்று செல்லமாக அவர் விரட்ட, அவர் முதுகில் தட்டிவிட்டு ஓடினான், ஒன்பதாவது படிக்கும், வாசு.
''உன் மகனுக்கு கொஞ்சம் கூட, அப்பாங்கிற பயமே கிடையாது. நான் சொல்றது எதையாவது காது கொடுத்து கேட்கிறானா?''
''சின்ன வயசிலிருந்து செல்லம் கொடுத்து வளர்த்தீங்க இல்லையா? அப்படிதான் இருப்பான்,'' என்றாள், சிவநாதனின் மனைவி.
மொபைல்போன் ஒலிக்க, எடுத்துப் பார்த்து, ''கிராமத்தில் இருந்து என் அப்பா தான் கூப்பிடறாரு,'' என்றார், சிவநாதன்.
''சொல்லுங்கப்பா நல்லாயிருக்கீங்களா? அம்மா எப்படி இருக்காங்க?''
''சிவா, உன் தங்கை ஊரிலிருந்து வந்து ஒரு வாரம் இருந்துட்டு கிளம்பறா. வத்தல், வடகம் போடணுமாம். அம்மாவை நாலு நாள் அவளோடு கூப்பிட்டு போறா. நான் அங்கே வந்து, உன்னோடு நாலு நாள் இருந்துட்டு வரலாம்ன்னு இருக்கேன்,'' என்றார், சிவநாதனின் அப்பா.
''சரி, வாங்கப்பா,'' என்று சொல்லி, மொபைல் போனை, 'கட்' செய்தார், சிவநாதன்.
மாலை பள்ளியிலிருந்து வந்த மகன் வாசுவிடம், ''இங்கே பாரு வாசு, நாளைக்கு தாத்தா ஊரிலிருந்து வர்றாரு. அவருக்கு முன்னால், என்கிட்ட நல்லவிதமாக நடந்துக்கணும் புரியுதா. நாங்கெல்லாம் அந்தக் காலத்தில் அப்பான்னா அவ்வளவு மரியாதையாக இருந்தோம்...
''அவங்க முன்னால் உட்கார்ந்து கூட பேச மாட்டோம். எங்களுக்கு ஏதாவது தேவையானால் கூட, அம்மா மூலமாக தான் அப்பாகிட்டே சொல்வோம்...
''அப்பா வீட்டில் இருந்தாலே வீடு அவ்வளவு அமைதியாக இருக்கும். இப்படியா உன்னை மாதிரி, பாட்டை சத்தமாக வச்சிக்கிட்டு, சொல்லச் சொல்ல கேட்காமலா இருந்தோம்,'' என்றார், சிவநாதன்.
''இப்ப என்ன சொல்ல வர்றீங்க. உங்கப்பா இங்கே இருக்கும் போது, நானும் அப்படி உங்களுக்கு பயந்த மாதிரி நடந்துக்கணும்ன்னு சொல்றீங்களா?'' என, கிண்டலாக கேட்டான், வாசு.
''இங்கே பார்த்தியா, உன் மகனை. எப்படி பதில் சொல்றான் பாரு.''
''வாசு... தாத்தா இருக்கும் போது அப்பாகிட்டே ரொம்ப விளையாடாம நல்லதனமாக இரு புரியுதா,'' என்றாள், வாசுவின் அம்மா.
''சரிம்மா. அப்பா வம்புக்கே வரலை போதுமா. அவரையும் ஒழுங்கா இருக்கச் சொல்லு.''
''வாசு, உங்க தாத்தா ரொம்ப கண்டிப்பாக இருப்பாரு. ஒருமுறை நானும், உன் சித்தப்பாவும், 'அன்புகரங்கள் சினிமா வந்திருக்கு. அப்பாகிட்டே கேளும்மா போயிட்டு வரோம்'ன்னு அம்மாவை துாது விட்டோம்.
''அதுக்கு என்ன பதில் வந்தது தெரியுமா? இந்த கரங்களால அடி வேணுமான்னு சொல்லி, போய் இரண்டு பேரையும் ஒழுங்கா பரீட்சைக்கு படிக்கச் சொல்லுன்னு சொன்னாரு.''
வாய்விட்டுச் சிரித்தான், வாசு.
ஊரிலிருந்து வந்த அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தார், சிவநாதன்.
''வாங்க மாமா,'' என்று கையில் காபியுடன் வந்து வரவேற்றாள், சிவநாதனின் மனைவி.
''வாசு, எங்கம்மா?''
''டியூஷன் போயிருக்கான். வந்துருவான், மாமா. அத்தை நல்லா இருக்காங்களா?'' என, நலம் விசாரித்தவள், ''உங்களுக்கு பிடிச்ச இடியாப்பம், குருமா செய்திருக்கேன். குளிச்சுட்டு வாங்க மாமா சாப்பிடலாம்,'' என்றாள்.
''வாங்க தாத்தா, பாட்டியையும் அழைச்சுட்டு வந்திருக்கலாமே. பார்த்து நாளாச்சு,'' என, டியூஷன் முடிந்து வந்த, வாசு கேட்டான்.
''விடுமுறைக்கு அப்பாவோடு ஊருக்கு வா, வாசு. 10 நாள் இருந்துட்டு வரலாம்.''
''வரேன் தாத்தா.''
''அப்பா எனக்கு ஸ்கூலுக்கு லேட்டாச்சு. ஷூவுக்கு பாலீஷ் போட்டு வச்சுடுங்கப்பா,'' என்றபடி, வாசு உள்ளே போக, அவனை பார்த்து முறைத்தார், சிவநாதன். அதை கண்டுகொள்ளாமல் உள்ளே போனான், வாசு.
எல்லாரும் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
''அம்மா, அப்பாவுக்கு வெண்டைக்காய் பொரியல் வைக்கலையா?'' என, அவரது தட்டைப் பார்த்து கேட்டான், வாசு.
''உங்கப்பாவுக்கு வெண்டைக்காய் பொரியல் பிடிக்காது.''
''அது என்ன பிடிக்கலைன்னு சொல்றது. என்னை மட்டும் காய் சாப்பிடுன்னு சொல்றாரு. வைங்கம்மா எல்லாம் சாப்பிடுவாரு,'' என சொல்லி, அவனே எடுத்து அவர் தட்டில் வைத்து, ''மிச்சம் வைக்காமல் சாப்பிடணும்,'' என்றான்.
இதையெல்லாம் பார்த்தபடி அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தார், சிவநாதனின் அப்பா.
''அவன் எப்போதும் இப்படிதான்பா, என் இஷ்டத்துக்கு விட மாட்டான்,'' அப்பா என்ன நினைப்பாரோ என, சமாளிப்பாக சொன்னார், சிவநாதன்.
''இன்னைக்கு சாயந்திரம் டியூஷன் இருக்குன்னு சொன்னியே கிளம்பலையா?'' என, தன் அருகில் வந்து உட்கார்ந்த வாசுவிடம் கேட்டார், சிவநாதன்.
''இல்லைப்பா, இன்னைக்கு டியூஷன் 'கட்!' நண்பர்களுடன் சேர்ந்து சினிமா போறோம். கமல் படம் வந்திருக்கு.''
''ஏய், என்னடா சொல்ற?''
''அட போங்கப்பா, ஒரு நாளைக்கு டியூஷன் போகலைன்னா என்ன? நாளைக்கு போறேன்,'' என்றான், வாசு.
அப்பா தன்னையே பார்ப்பதை உணர்ந்த சிவநாதன், மகனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தார்.
''வாசுகிட்டே, எத்தனை தடவை சொன்னேன். அப்பா வந்திருக்கும் சமயம், ஒழுங்கா நடந்துக்கன்னு. அவன் கொஞ்சமும் காதில் வாங்கல பாரு.
''என்னை அதட்டறதும், நான் சொல்றதை கேட்காமல் சினிமா போறதும், அப்பா என்ன நினைப்பாரு. புள்ளையை சரியா வளர்க்காமல் கெடுத்து வச்சிருக்கோம்ன்னு நினைப்பாரு,'' என, சமையலறையில் இருந்த மனைவியிடம், புலம்பினார், சிவநாதன்.
''விடுங்க. மாமா தானே. ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டாரு. வாசு நல்ல பிள்ளைன்னு அவருக்கு தெரியும்.''
கையில் 'கேக்' டப்பாவுடன் வந்த வாசு, தாத்தாவிடம் ஒன்றை எடுத்து கொடுத்து, ''சாப்பிடுங்க தாத்தா 'ப்ளாக் பாரஸ்ட்' நல்லா இருக்கும்,'' என்று கூறி, அப்பாவிடம் வந்தான்.
''அப்பா, இந்தாங்க கேக்,'' என்றான், வாசு.
''எனக்கு வேண்டாம். உன் அம்மாவுக்கு கொடு.''
''அதெப்படி வேண்டாம்ன்னு சொன்னா விட்டுடுவேனா,'' என்றவன், அவர் வாயில் திணித்தான்.
''என்ன வாசு இது,'' என, செல்லமாக கடிந்தபடி, சாப்பிடத் துவங்கினார், சிவநாதன்.
''வாசு, நான் மதியத்துக்கு மேல் ஊருக்கு கிளம்பறேன். நல்லா படி. விடுமுறைக்கு ஊருக்கு வாப்பா,'' என, பள்ளிக்கு கிளம்பும் பேரனிடம் கூறினார், தாத்தா.
''போயிட்டு வாங்க தாத்தா. உங்க பிள்ளைகிட்ட சொல்லிட்டு போங்க. சொல்ற பேச்சையே கேட்க மாட்டேங்கிறாரு,'' என, அப்பாவை பார்த்து கண்ணடித்து சிரித்தபடி போனான், வாசு.
''அப்பா... வாசு ஒரே பிள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம். அதான்... இப்படி. மத்தபடி நல்லா படிக்கிறான். நல்ல பழக்கங்கள் இருக்கு. என்கிட்டே அதிக உரிமை எடுத்து பழகுவான்.''
''பார்த்தேன்பா. அப்பா, பிள்ளைங்கிறதை தாண்டி, உன்னை ஒரு தோழனாக தான் பார்க்கிறான்.''
''அந்த காலத்தில் உங்ககிட்டே நாங்க, பயம் கலந்த மரியாதையோடு தான் இருந்தோம். இப்ப அதை இவன்கிட்டே எதிர்பார்க்க முடியலை.''
''தேவையில்லப்பா... மரியாதை மனசில் இருந்தால் போதும். அப்பாங்கிற உரிமையோடு, அவன் சகஜமாக உன்கிட்டே பழகறதைப் பார்க்கும் போது, உண்மையை சொல்லணும்ன்னா, என் காலத்தில் நான் எதையோ இழந்துட்ட மாதிரி தோணுது,'' என, சிவநாதனை விழிகளில் பாசம் தெரிய பார்த்தபடி சொன்னார், அப்பா.
பரிமளா ராஜேந்திரன்