sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திண்ணை!

/

திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜன 26, 2025

Google News

PUBLISHED ON : ஜன 26, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன., 30 - காந்திஜி நினைவு நாள்

தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்தார், காந்திஜி. இந்தியாவை சேர்ந்த வணிகர் ஒருவர், அவருக்கு நண்பராய் இருந்தார். ஒருநாள், அந்த நண்பர் படபடப்புடன் வந்து, காந்திஜியை சந்தித்தார்.

'நான் விற்கும் பொருட்களுக்கு வரியைச் சரிவர கட்டாமல், வியாபாரம் செய்து வந்தேன். எதிர்பாராதவிதமாக அவற்றைப் பறிமுதல் செய்துவிட்டனர், போலீசார்.

'இவ்வாறு நான், வியாபாரம் செய்தது வெளியே தெரிந்தால், எனக்கு மிகவும் அவமானமாக போய் விடும். இவ்விஷயத்தில் என் பெயர் வெளியே வராமல் தாங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்...' என்றார்.

பொறுமையாக அனைத்தையும் கேட்டு, 'எப்போது வரி ஏய்ப்பு எனும் தவறைச் செய்தீரோ அப்போதே அவமானத்திற்கு உரியவராகி விட்டீர்கள். இப்போது, உங்களுக்கு இதற்காக தண்டனை வழங்கப்பட்டால், அதுவே நீங்கள் செய்த தவறுக்கு பரிகாரமாகி விடும். நான் சொல்கிறபடி செய்தால் உங்களுக்கு நல்லது...' என்றார், காந்திஜி.

'தாங்கள் சொல்வது போலவே செய்கிறேன்...' என்றார், வணிக நண்பர்.

'போலீசார் கைப்பற்றியிருக்கும் பொருட்களோடு, இதற்கு முன்வரை நீங்கள் வரி ஏய்ப்பு செய்த விபரங்களை ஒப்புக் கொள்ள வேண்டும். அது தான் உங்களுக்கு நல்லது...' என்றார்.

சிறிது நேரம் யோசித்தார், அந்த வணிகர்.

காந்திஜி மிகவும் நேர்மையானவர் என்று அவருக்கு தெரியும். அவர் சொல்வது போல செய்வதே தற்போதைக்கு சரியான வழி என்று தீர்மானித்து, இதற்கு சம்மதித்தார்.

நீதிமன்றத்தில், தன் கட்சிக்காரர் செய்த வரி ஏய்ப்பு பற்றிய தகவல்களை முழுமையாக எடுத்துரைத்தார், காந்திஜி.

தன் கட்சிக்காரர் செய்த தவறை, அவருடைய வழக்கறிஞரே நீதிமன்றத்தில் பட்டியலிட்டது, நீதிபதியை வியக்க வைத்தது.

காந்திஜியின் நேர்மையை பாராட்டி அதற்கு பரிசாக, அவருடைய கட்சிக்காரரான அந்த வணிகருக்கு ஒரு சிறு தொகை மட்டும் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், நீதிபதி அந்த வழக்கை முழுமையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதன் பின் அவர், வரி ஏய்ப்பு செய்யாமல் நேர்மையான வணிகராய் திகழ்ந்தார்.

****

முதன்முதலாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார், காந்திஜி. அப்போது, சிவகங்கை மாவட்டம், திருப்பத்துாரை அடுத்துள்ள சிராவயல் காந்தி ஆசிரமத்துக்கு வந்தார்.

ஆசிரமப் பணிகள் மிகச் சிறப்பாக நடந்து வருவதைக் கண்டும், கேட்டும் மகிழ்ந்த காந்திஜி, அதைப் பொறுப்பேற்று நடத்தும், ப.ஜீவானந்தத்தை அழைத்தார்.

பொதுவுடமை இயக்கத் தலைவர் என, பின்னாளில் புகழ்பெற்ற ப.ஜீவானந்தம் தான் அவர்.

'ஆசிரமத்தை மிகவும் நன்றாக நடத்துகிறீர்கள். இந்த செலவுக்கு அதிகப் பணம் தேவை. உங்களுக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா?' என்று கேட்டார், காந்திஜி.

'சொத்தா? ஓ... இருக்கிறதே. இந்தியாவே என் சொத்து தான்...' என்று சொல்லி புன்னகைத்தார், ஜீவானந்தம்.

உடனே, 'இல்லை, இல்லை... நீங்கள் தான் இந்தியாவின் சொத்து...' என்றார், காந்திஜி.

****

ஒருமுறை தனக்கு வந்த கடிதங்களை படித்துக் கொண்டிருந்தார், வினோபா. காந்திஜியிடமிருந்து வந்திருந்த ஒரு கடிதத்தை படித்து முடித்ததும் கிழித்து எறிந்தார்.

உடன் இருந்தவர்களுக்கு, வினோபாவின் இந்த செயல் ஆச்சரியத்தை தந்தது. காந்திஜியின் கடிதத்தை வினோபா ஏன் கிழித்து எறிந்தார் என்று நினைத்து குழப்பமடைந்தனர். அவர்களின் மனநிலையை புரிந்து, அதற்கு பதிலளித்தார், வினோபா.

'காந்திஜி தன்னுடைய கடிதத்தில் என்னை அளவிற்கு அதிகமாக புகழ்ந்திருக்கிறார். அந்த கடிதத்தை நான் என்னுடனே வைத்துக் கொண்டால், அதிலுள்ள வாசகங்கள் என்னை அகந்தை உடையவனாக மாற்றிவிடும். அதற்காகவே அந்த கடிதத்தை நான் கிழித்துப் போட்டேன்...' என்றார், வினோபா.

வினோபாவின் தன்னடக்கத்தை நினைத்து உடன் இருந்தவர்கள் மிகவும் பெருமைப்பட்டனர்.

- நடுத்தெரு நாராயணன்






      Dinamalar
      Follow us