PUBLISHED ON : ஜன 26, 2025

ஜெமினி தயாரிப்பான, மூன்று பிள்ளைகள் படத்தில் நடித்தபோது, மயங்கி விழுந்து விட்டார், ஜானகி. அவருக்கு உரிய சிகிச்சை அளித்தனர். ஜெமினியின் முதல் படத்திலேயே சொதப்பி விட்டதில் வருத்தம்.
ஒருநாள், வாசன் சார், ஜானகியை அழைப்பதாக தகவல் வர, பதட்டத்துடன் சென்றார்.
ஜெமினி ஸ்டூடியோ அதிபர், எஸ்.எஸ்.வாசன் அறைக்குள் நுழைந்தார்.
'இப்படி உட்காரம்மா...' என்றார், எஸ்.எஸ்.வாசன்.
அவருக்கு முன் இருக்கையில் அமர்ந்தவரிடம், 'உனக்கு என்ன பிரச்னை. 'செட்'ல மயங்கி விழுந்து விட்டாயாமே?' என, பரிவுடன் கேட்டார்.
'குடும்பத்துல ரொம்ப கஷ்டம் சார்! அதான், 'டெலிவரி' ஆன சில நாளிலேயே படப்பிடிப்புக்கு வந்துட்டேன். சரியான ஆகாரம் இல்லே, உடம்பு ரொம்ப, 'வீக்'கா இருக்கிறதா டாக்டர் சொன்னாங்க...' மெல்லிய குரலில் சொன்னார், ஜானகி.
உடனே, காஸ்டிங் மேனேஜர் ஜெமினி கணேசனை அழைத்தார், வாசன்.
'இவங்களுக்கு எவ்வளவு சம்பளம் பேசி இருக்கோம்?'
'ஏழாயிரத்து ஐநுாறு ரூபாய் சார்...' என்றார், ஜெமினி கணேசன்.
'அந்தப் பணத்தை இப்பவே இவங்ககிட்ட குடுத்துடுங்க. இப்போதைக்கு இவங்களை வச்சு படப்பிடிப்பு நடத்த வேண்டாம். வேறு பட வேலையைப் பாருங்க...' என்றவர், ஜானகி பக்கம் திரும்பினார்.
'பணம் தருவாங்க வாங்கிக்கோங்க. 10 நாள் நல்லா சாப்பிட்டு, ஓய்வு எடுங்க. உடம்பு சரியானதும் நீங்க படப்பிடிப்புக்கு வரலாம்...' என்றார், தயாரிப்பாளர் வாசன்.
'ரொம்ப தேங்க்ஸ் சார்...' என்று எழுந்தார், ஜானகி.
'இதப் பாரும்மா! உனக்கு நல்ல முகவெட்டும், நல்ல குரல் வளமும் இருக்கு. ஆனா, முகத்துல அதுக்கேத்த மலர்ச்சி இல்லே, வாடிப் போன மாதிரி இருக்கு. அப்படி இருக்கக் கூடாது. நம்ம உடம்பை கவனமா பாத்துக்கணும்...' என்று அன்பாக சொல்லி, ஜானகியை அனுப்பி வைத்தார், வாசன்.
'அன்று வாசன் சார் தந்த, 'அட்வைஸ்' தான், நான் சினிமாவில் ஜெயிக்க பெரிதும் உதவியது. இன்று வரை என் உடல் ஆரோக்கியத்தில், 'மேக்-அப்' விஷயத்தில் தனி அக்கறை செலுத்தி வருகிறேன்.
'எனக்கான ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ள வைத்த சம்பவம் அது. வாசன் சாரின் பெருந்தன்மையை, மனிதநேயத்தை என்றும் மறக்க முடியாது...' என, ஒரு பேட்டியில் கூறியிருந்தார், ஜானகி.
தெலுங்கு, சௌகார் படம், தமிழ் பட உலகில் நுழைய, 'விசிடிங் கார்டு' ஆக அமைந்தது. அடுத்து, ஜானகி தமிழில் நடித்த முதல் நேரடி படம், வளையாபதி.
மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் தயாரித்த, இந்த படம் வாயிலாக தான், அவரது பெயர், தமிழ் ரசிகர்கள் மனங்களில் பதிவானது.
தமிழ் திரைவுலகில் ஏற்கனவே, வி.என்.ஜானகி - எம்.ஜி.ஆரின் மனைவி இருந்ததால், ஜானகி பெயருக்கு முன்னால், சௌகார் சேர்க்கப்பட்டது.
'தமிழ் காவியத்தை தழுவி எடுக்கப்பட்ட, வளையாபதி படத்தில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தேன் சொட்டும் தீந்தமிழ் வசனங்களை நானே பேசி நடித்ததை பலர் நம்பவே இல்லை...' என்கிறார், ஜானகி.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட, வளையாபதி படம் பார்த்துவிட்டு, 'ஜப்பான் பொம்மை போல இருக்கிறாரே, இவரா பாரதிதாசன் வசனங்களை பேசினார்?' என்று வியந்து பாராட்டினாராம்.
நடிப்பு ராட்சசியாக இருந்த, ஜானகி, எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
கதைநாயகி, அக்கா, அண்ணி, அம்மா மற்றும் பாட்டி என, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனக்கான முத்திரையை பதித்திருப்பார்.
நம்மை ரசிக்க வைத்த எத்தனையோ வேடங்களில் அவர் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் படத்தில் அவர் ஏற்று நடித்த, பட்டு மாமி பாத்திரம், பலரது உள்ளம் கவர்ந்தது.
பட்டு மாமி கதாபாத்திரம், தன்னை எந்த அளவுக்கு செதுக்கியது, பேச வைத்தது என்பதை, அவர் இப்படி குறிப்பிடுகிறார்...
'எதிர்நீச்சல் பட்டு மாமியை எந்நாளும் மறக்க முடியாது. சௌகார் ஜானகி என்றாலே சோகமான கேரக்டர்களில் நடிப்பார் என, இருந்த காலகட்டத்தில், என்னை பட்டு மாமியாக கலகலப்பாய் அடையாளம் காட்டியவர், இயக்குனர் கே.பாலசந்தர். என் வாழ்நாளில் மறக்க முடியாத டைரக்டர்...' என்று கூறியுள்ளார்.
இயக்குனர், பாலசந்தர், ஜானகிக்கு அறிமுகமானது நாடகங்கள் வாயிலாக தான். அப்போது, 'ராகினி கிரியேஷன்ஸ்' என்ற அமைச்சூர் நாடக குழு வைத்திருந்தார், பாலசந்தர். அந்த நாடகங்களில் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் நடித்துக் கொண்டிருந்தனர்.
'எதிர்நீச்சல், நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி' மற்றும் 'மேஜர் சந்திரகாந்த்' போன்ற நாடகங்களால் ஈர்க்கப்பட்டு படங்களில், 'பிசி'யாக நடித்துக் கொண்டிருந்த, ஜானகி, ஆர்வத்தோடு சம்பளமே வாங்காமல் நாடகங்களில் நடிக்க விரும்பினார்.
காரணம், நாடகங்கள் மீது அவருக்கு இருந்த ஈடுபாடும், ரசிகர்களின் பாராட்டை நேரடியாகவே மேடையில் இருந்தே அனுபவித்து மகிழ வேண்டுமென்பது தான்.
நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குனர் பாலசந்தரின், முதல் பட, 'ஹீரோயின்' ஆனார், ஜானகி.
'பட உலகில் நான், சௌகார். நாடகவுலகில் நான், பட்டு மாமி...' என்று சொல்வார், ஜானகி.
மடிசார் புடவை கட்டி, பிராமண பாஷை பேசி நடிக்க, ஜானகி மிகவும் தயங்கிய போது, அவரை நடிக்க சம்மதிக்க வைத்து, அசல் பட்டு மாமியாகவே மாற்றியவர், கே.பாலசந்தர் தான். அவர் தான், ஜானகிக்கு பிராமண பாஷையை அழகாக பேச, பயிற்சி கொடுத்தார்.
'என்னைப் பொறுத்தவரை, பட்டு மாமியைப் போன்ற ஒரு கதாபாத்திரம் இனி கிடைக்குமா என்பதே கேள்விக்குறி தான். நாடக உலகில் எனக்கு கிடைத்த ஒரு துருப்புச் சீட்டு, இது...' என்று தனக்கு பேரும் புகழும் தந்த நாடக உலகம் பற்றி குறிப்பிடுகிறார், ஜானகி.
ஒருசமயம், மியூசிக் அகாடமி அரங்கில், 'எதிர்நீச்சல்' நாடகம் நடந்து முடிந்ததும், மேடையேறி, பட்டு மாமி, 'கெட்-அப்'பில் இருந்த ஜானகியை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார், நடிகை ஒருவர்.
அவர்...
— தொடரும்- சபீதா ஜோசப்