
நோய் வாய்ப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணன், அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
டாக்டர்கள் அடிக்கடி ஊசி போட்டு கொண்டே இருந்தனர். அதைக்கண்டு, என்.எஸ்.கிருஷ்ணனுக்கு வெறுப்பேற்பட்டது.
ஒருநாள் டாக்டர்களிடம், 'என்ன டாக்டர்களே, என் உடம்பிலே அடிக்கடி ஊசிகளை சொருகி, என் தோலிலே செருப்பு தைச்சுப் பழகறீங்களா?' எனக் கேட்டு, சிரிக்க, டாக்டர்களும் சிரித்து விட்டனர்.
***********
தமிழறிஞர் கி.வா.ஜ.,விடம், 'ஐயா, சாப்பிட்ட பின் வெற்றிலை போடும் பழக்கம், தங்களுக்கு உண்டா?' எனக் கேட்டார், ஒருவர்.
'ஓ... உண்டே. ஆனால், நான் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்...' என்றார், கி.வா.ஜ.,
அதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒன்றும் புரியாமல் விழித்தனர்.
பின்னர், புன்முறுவலுடன், 'என்ன விழிக்கிறீர்கள்? சாப்பிட்ட பின், 'வெற்று இலை'யை, அதாவது, வாழை இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில் தானே போட வேண்டும்...' என்றார், கி.வா.ஜ.,
அவரது சிலேடைப் பேச்சை உணர்ந்து, அனைவரும் ரசித்து சிரித்தனர்.
***********
தமிழ் மொழி மீது கொண்ட அதீத பற்றால், தன் பெயரை, பரிதிமாற் கலைஞர் என, மாற்றிக் கொண்டவர், சூரிய நாராயண சாஸ்திரி.
ஒருநாள், மரபு பாடல்களில் வரவேண்டிய இலக்கண அமைப்பு பற்றிய பாடத்தை, வகுப்பில் நடத்திக் கொண்டிருந்தார், சாஸ்திரியார்.
அப்போது, 'ஐயா நீங்கள் நடத்தும் பாடத்தில், சீர் புரிகிறது; தளை புரிகிறது; தொடை புரிகிறது. அதற்குமேல் எதுவும் புரியவில்லை. சற்று விளக்கமாக கூறுங்கள்...' என்றான், கிண்டலாக மாணவன் ஒருவன்.
மாணவன் தன்னை கிண்டல் செய்வதை புரிந்து கொண்டவர், 'பிறகு என் அறைக்கு தனியே வா. விளக்கு மாற்றால் விளக்குகிறேன்...' என்றார், சாஸ்திரியார்.
விளக்கு மாற்றால் என்பது, இரு பொருள் உடையது. துடைப்பத்தால் என்பது ஒரு பொருள். விளக்கும் மாற்று வழி என்பது, இன்னொரு பொருள்.
*********
அமெரிக்க ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சனை சந்திக்க, ஜெர்மனி நாட்டு விஞ்ஞானி அலெக்ஸ் ஆம்பல்ட் என்பவர் வந்திருந்தார்.
வெள்ளை மாளிகையில், அவர்கள் உரையாடி கொண்டிருந்த போது, மேஜை மேல் ஒரு செய்தித்தாள் இருப்பதை பார்த்தார், விஞ்ஞானி ஆம்பல்ட். உடனே, அதை எடுத்து படித்தவர் அதிர்ந்தார்.
அதில், தாமஸ் ஜெபர்சனை பற்றி மிகவும் அவதுாறாக எழுதப்பட்டிருந்தது.
உடனே, 'மிஸ்டர் பிரசிடெண்ட், தங்களை பற்றி இவ்வளவு தாறுமாறாக எழுதியிருக்கின்றனர்? இந்த உரிமை மீறல் பிரச்னைக்காக, இந்த பத்திரிகை ஆசிரியரை ஏன் கைது செய்யக் கூடாது?'எனக் கேட்டார், ஆம்பல்ட்.
'இந்த பத்திரிகையை அப்படியே மடித்து, உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள், உங்கள் நாடு திரும்பியதும், 'அமெரிக்காவில் பத்திரிகை சுதந்திரம் எப்படி இருக்கிறது...' என, யாராவது கேட்டால், உடனே, இந்த பத்திரிகையை எடுத்து காட்டுங்கள்.
'மேலும், 'இந்த பத்திரிகையை எங்கே இருந்து கொண்டு வந்தீர்கள்...' எனக் கேட்டால், ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து என்பதையும் சொல்லுங்கள்...' என, சிரித்தபடி கூறினார், தாமஸ் ஜெபர்சன்.
நடுத்தெரு நாராயணன்