
மெர்வின் எழுதிய, 'அறிஞர்களின் வாழ்வில் அற்புத நிகழ்ச்சிகள்!' நுாலிலிருந்து:
ராஜாஜியிடம், 'சென்ற ஆண்டு ஆதரித்த கட்சியை இந்த ஆண்டு அகற்ற எண்ணியது ஏன்? தங்களுக்கு ஒரு நிலையான கொள்கை இல்லையென்று ஆகிவிடாதா?' எனக் கேட்டார், பத்திரிகை நிருபர் ஒருவர்.
'சென்ற ஆண்டு வரை எனக்கு பொருத்தமாக இருந்த சட்டை, இந்த ஆண்டு சின்னதாக சுருங்கி விட்டதால், புதுச்சட்டை தைத்துக் கொண்டேன். இதிலென்ன தப்பு?' என, பதிலளித்தார், ராஜாஜி.
*********
ஒரு சமயம் விவேகானந்தரிடம், 'ஐயா, கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கின்றனரே, உண்மையா?' என்றான், ஒருவன்.
அவனைக் கூர்ந்து பார்த்து, 'கர்வம் பிடித்தவன், கடவுளை இழப்பான். பொறாமை பிடித்தவன், நண்பனை இழப்பான். கோபப்படுபவன், தன்னையே இழப்பான்...' என்றார், விவேகானந்தர்.
கோபப்படும் குணம் கொண்ட அந்த மனிதன், திருந்தியவனாக, விவேகானந்தரை வணங்கி சென்றான்.
********
தாகூரின், 80வது பிறந்தநாளுக்கு, வாழ்த்து தந்தி அனுப்பியிருந்தார், காந்திஜி.
அதில், '80 வயது போதாது.100 வயது வாழ்வீர்களாக...' என, குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு, '80 வயது வாழ்ந்ததே அதிகப்பிரசங்கித்தனம். 100 வயது என்றால் தாங்க முடியாது...' என, பதில் தந்தார், தாகூர்.
**********
காமராஜர், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது, அவருக்கு அணிவிக்க, பிரமாண்ட மாலையை, நான்கு பேர் துாக்கி வந்தனர்.
இதை பார்த்தவர், 'இந்தா என்ன இது?' என, கேட்டார், காமராஜர்.
'உங்களுக்கு போடறதுக்காக மாலை...' எனக் கூறினர்.
'ஓஹோ, நீங்க, நான்கு பேர் துாக்கி வரும் மாலையை, நான் தனியாக சுமக்கணுமா? அட கொண்டு போங்கப்பா...' எனக் கூற, கூட்டமே சிரித்தது.
**********
மும்பையில், காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற போது, 'இனிமேல் வெள்ளைக்காரர்களிடம் பேச்சுவார்த்தையே கிடையாது...' என்றார், கோபமாக வல்லபாய் படேல்.
உடனே, 'வெள்ளைக் காரர்களை மூட்டை முடிச்சுகளோடு கப்பலில் ஏற்றுவதற்கு, எத்தனை கப்பல் தேவைப்படும் என, அவர்களிடம் கேட்பதற்காக ஒருமுறை பேசியாக வேண்டும்...' என்றார், ஜே.பி.கிருபாளினி.
கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்ததுடன், பலமாக கரவொலியும் செய்தனர்.
********
அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர், எட்வர்ட் ஜென்னர். அம்மையை தடுப்பதற்கு அம்மை பால் வைக்கும் முறையை கண்டுபிடித்த போது, நண்பர்கள் ஏற்கவில்லை.
மூன்று முறை, தன் தோலிலேயே அம்மை பால் வைத்து, சோதனை நடத்தியதுடன், அது வெற்றிகரமாக அறிமுகம் ஆகும் வரை தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் சோதனைகளை செய்து, சாதித்தார்.
***********
நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சாப்பிடச் சென்றார், அண்ணாதுரை.
சாப்பாடு பரிமாற, இலையில் அப்பளமும், முட்டையும் வைத்து விட்டு, மின் விசிறியை போட்டனர்.
அப்பளம் அடுத்த இலையில் போய் விழுந்தது.
'இவற்றின் விலை என்ன?' என்றார், அண்ணாதுரை.
'அப்பளம் காலணா. முட்டை நாலணா...' என்றார், நண்பர்.
'பார்த்தீர்களா... நாலணா அமைதியாக உள்ளது. காலணா தலைவிரித்து ஆடுகிறது...' எனக் கூற அனைவரும் சிரித்தனர்.
நடுத்தெரு நாராயணன்