/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சுற்றுலா ஸ்பெஷல்: இங்கும் டூர் போகலாமே!
/
சுற்றுலா ஸ்பெஷல்: இங்கும் டூர் போகலாமே!
PUBLISHED ON : மே 18, 2025

ஹரித்வார் -- ரிஷிகேஷ்!
உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கிறது, ஹரித்வாரும் ரிஷிகேஷும். கங்கை நதி, இந்தியாவிற்குள் ஹரித்வாரின் வழியாகத்தான் நுழைகிறது. அதனால் தான் இதை, ஹரி - துவாரம் - கடவுளின் வழி என்கின்றனர்.
ஹிந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இது, கடல் மட்டத்தில் இருந்து, 314 மீட்டர் உயரம் இருப்பதால், வெயில் காலத்திலும், குளுகுளுவென்று இருக்கும். ஆன்மிக சுற்றுலாவிற்கும், இயற்கையை ரசிப்பதற்கும் ஏற்ற இடம்.
இங்கு இருக்கும் பெரும்பாலான தங்கும் விடுதிகள், கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கின்றன. நீங்கள் ஹோட்டலை விட்டு இறங்கினாலே, கங்கை நதியில் குளிக்கலாம்.
இங்கிருந்து, 25 கி.மீ., துாரத்தில் இருக்கிறது, ரிஷிகேஷ். இங்கு, ராம் ஜூலா, லக்ஷ்மண் ஜூலா என, கங்கையின் குறுக்கே அமைந்திருக்கும், இரண்டு தொங்கும் பாலங்கள் மிகவும் புகழ்பெற்றவை. வெளிநாட்டினரை வெகுவாக கவருவது, 'ரேப்டிங்' என்று சொல்லப்படும், சாகசப் படகுப் பயணம்.
இங்கு சுத்தமான மூலிகைத் தைலம் மற்றும் ருத்ராட்சங்கள் கிடைக்கின்றன. சென்னையில் இருந்து ஹரித்வாருக்கு, டேராடூன் எக்ஸ்பிரஸ் உள்ளது. விமானம் எனில், சென்னையில் இருந்து டில்லிக்கோ, டேராடூனிற்கோ வரவேண்டும். அங்கிருந்து, ஹரித்வாருக்கு பஸ், ரயில் அல்லது கால் டாக்சியில் போகலாம்.
டார்ஜிலிங்!
மேற்கு வங்காளத்தில் உள்ள, இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற, மலைவாசஸ்தலம், டார்ஜிலிங். இங்கு இயக்கப்படும், டார்ஜிலிங் - ஹிமாலயன் ரயில்வே போக்குவரத்து, யுனெஸ்கோவால் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இந்தியாவின் சிறு ரயில் போக்குவரத்தும் இது ஒன்று தான். இது, டார்ஜிலிங்கில் இருந்து, கும் என்ற இடத்திற்கு சென்று வருகிறது. இதில் பயணிப்பதற்காகவே சுற்றுலாப் பயணியர் இங்கு படையெடுக்கின்றனர்.
புகழ்பெற்ற டீ கார்டன், டைகர் ஹில், பொட்டானிகல் கார்டன், எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் என, செப்டம்பர் -- ஜூன் வரை சீசன். சென்னையில் இருந்து, ஜல்பாய்குரி அல்லது சிலிகுரிக்கு ரயிலில் சென்று, அதன் பின், டார்ஜிலிங்கிற்கு ஆட்டோ ரிக்ஷா அல்லது காரில் போய், குளிரை அனுபவிக்கலாம்.
மஹாபலேஷ்வர்!
மகாராஷ்டிரா மாநிலத்தின் குளிர் பிரதேசமான இங்கு, மாவீரர் சிவாஜியும், அதன் பின் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களும் கட்டிய கோட்டைகள், கட்டடங்களை காண முடியும். கடல் மட்டத்தில் இருந்து, 4,440 அடி உயரத்தில் இருப்பதால், ஆண்டில் அனைத்து மாதங்களும், குளு குளு என்றிருக்கும். மழைக்காலங்கள் தவிர்த்து, அக்டோபர் முதல் ஜூன் வரை சீசன் களைகட்டும்.
இங்கு இருக்கும் வென்னா ஏரியில், 'பிஷ்ஷிங், போட்டிங்' போகலாம். மேலும், லிங்மலா ஏரி, கிருஷ்ணர் கோவில் உள்ளன. தவிர, மலை உச்சியில் இந்த இடம் இருப்பதால், இயற்கையின் அழகை ரசிக்க, 14 வியூ பாயின்ட்கள், அமைக்கப் பட்டிருக்கிறது.
இங்கு விளையும் ஸ்ட்ராபெரியில் செய்யும், 'ஸ்ட்ராபெர்ரி ஷேக்' மிகவும் பிரபலம்.
மலையை சுற்றிலும் மூலிகை செடிகளின் வாசமும், சுத்தமான ஆக்ஸிஜனும் கிடைப்பதால், உடலுக்கு புத்துணர்ச்சி பெறுவதற்காகவே கூட்டம் அலைமோதுகிறது.
புனேவில் இருந்து, 115 கி.மீ., மும்பையில் இருந்து, 265 கி.மீ., துாரத்தில் உள்ளது. சென்னையில் இருந்து ரயில் அல்லது விமானத்தில் புனே சென்று, அங்கிருந்து கார் அல்லது பஸ்சில் மஹாபலேஷ்வரை அடையலாம்.
மால்பே பீச்!
கர்நாடக மாநிலத்தின் இயற்கை துறைமுகம், மால்பே பீச். பாறைத் தீவுகள் தான், இதன் சிறப்பம்சம். இங்கிருக்கும் பாறைகள், எரிமலைக் குழம்பில் உருவானவை. பார்க்க, ஹாலிவுட் படங்களில் வரும் கரீபியன் தீவுகள் போல காட்சியளிக்கிறது, இந்த கடற்கரை.
மால்பே பீச்சில் இருந்து, செயின்ட்மேரி தீவுக்கு, பெர்ரி எனப்படும் சொகுசு மோட்டார் படகில் போகலாம். தவிர, கோவாவை போலவே இங்கு, 'பீச் ரெசார்ட்'டுகள் பல உள்ளன. உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் இருந்து, 6 கி.மீ., மால்பே பீச்சை அடைந்து விடலாம்.
ரயில் அல்லது விமானத்தில், சென்னையில் இருந்து மங்களூருக்கு வந்து, அங்கிருந்து பஸ்சில், 66 கி.மீ. பயணித்தால், மால்பே பீச்சை அடையலாம்.
குடகு மலை - கூர்க்!
காவிரி உருவாகும் இடம், குடகு மலை. இங்கு தான், தலைக்காவிரி அமைந்துள்ளது. கர்நாடகத்தில் புகழ்பெற்ற மலை வாசஸ்தலமாக இருப்பதால், கர்நாடகத்தின் காஷ்மீர் என அழைக்கின்றனர்.
அப்பே அருவி, திபெத்திய தங்கக் கோவில், ஓம்காரேஸ்வரா கோவில், மகாராஜாக்கள் ஓய்வெடுத்த ராஜா சீட் பார்க், மடிக்கேரி கோட்டை என, பார்க்க நிறைய இடங்கள் உள்ளன.
நவம்பர் முதல் மே வரை, இங்கு சீசன். திடீர் திடீரென்று மழை வரும் என்பதால், சற்று முன்னெச்சரிக்கையுடன் போவது நல்லது. தவிர, இங்கு விளையும் மிளகு, ஏலக்காய் மற்றும் ஆரஞ்சு ஆகியவை ஸ்பெஷல்.
மைசூரில் இருந்து, 120 கி.மீ., மங்களூரில் இருந்து, 136 கி.மீ., துாரத்தில் உள்ளது. விமானத்தில் சென்றால், மங்களூரில் இறங்கி அங்கிருந்து பஸ் அல்லது காரில் போகலாம். ரயில் பயணம் என்றால், மைசூரில் இறங்கி பஸ்சில் பயணம் செய்யலாம்.
சிவகங்கை அரண்மனை!
வீரம் விளைந்த பூமியான சிவகங்கை மாவட்டத்தில், தவறாமல் பார்க்க வேண்டியதில் முதலிடம் வகிப்பது, சிவகங்கை அரண்மனை. அடுத்ததாக, செட்டிநாடு அருங்காட்சியகம். செட்டிநாட்டு மக்கள் பயன்படுத்திய பாத்திரங்கள், அம்மி, ஆட்டுக்கல் போன்றவற்றின் பிரமாண்டத்தை இங்கு தவிர வேறு எங்குமே பார்க்க முடியாது.
அப்படியே காரைக்குடி பேருந்து நிலையம் வந்து, கவியரசு கண்ணதாசன் நினைவாலயத்தையும் பார்க்கலாம். 63 நாயன்மார்களில் ஒருவரான, மாற நாயனார் பிறந்தது, இங்குள்ள இளையான்குடியில் தான். மதுரையில் இருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. வாடகை கார்களும் கிடைக்கின்றன.