
மே 27 - நேரு நினைவு நாள்!
இளமையில், வேட்டைப்பிரியராக இருந்தார், ஜவஹர்லால் நேரு.
ஒருநாள் காட்டுக்கு சென்றார். அங்கு துள்ளிக் கொண்டிருந்த புள்ளி மான் குட்டியை சுட்டார். குண்டடி பட்ட அந்த மான், துள்ளி விழுந்து உயிரை விட்டது.
அருகில் சென்று மான் குட்டியை பார்த்தார், நேரு.
மானின் கண்கள் நேருவைப் பார்த்து, 'நான் என்ன பாவம் செய்தேன்? என்னை சுட்டது எந்த வகையில் நியாயம்?' என, குற்றம் சாட்டுவதைப் போலிருந்தது.
மனம் வருந்திய நேரு, அந்த இடத்திலேயே துப்பாக்கியை எறிந்து, 'இனி வாழ்நாளில் வேட்டையாடவே மாட்டேன்...' என்று சபதம் செய்துவிட்டு, வெறுங்கையுடன் வீடு திரும்பினார்.
*****
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய மன்னர்கள் எவரும், ஒன்பது குதிரைகள் பூட்டிய வண்டியில் போகக் கூடாது என, சட்டம் இருந்தது. அதை மீறினால் தண்டனை விதிக்கப்படும்.
ஒருமுறை, இந்த சட்டத்தை மீறி, ஒன்பது குதிரைகள் பூட்டிய வண்டியில் ஏறிப் போய் விட்டார், குவாலியர் மகாராஜா. அதைக்கண்ட ஆங்கிலேய அரசு, அவர் மீது வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் மகாராஜா சார்பில், ஜவஹர்லால் நேருவின் தந்தையான, அட்வகேட் மோதிலால் நேரு ஆஜரானார். முதலில், குதிரை வண்டியை ஓட்டியவனிடம் இருந்து சில விபரங்களை தெரிந்து கொண்டார்.
வழக்கு விசாரணையின் போது, குதிரை வண்டியை நீதிமன்றத்துக்கு கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஆங்கிலேய நீதிபதியும் அதற்கு அனுமதி வழங்கினார்.
வழக்கு விசாரணை வந்ததும், குதிரை வண்டி கொண்டு வரப்பட்டது. மோதிலால் நேரு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நீதிபதி வெளியில் வந்து, குதிரை வண்டியை பார்த்தார்.
'வண்டியில் ஒன்பது குதிரைகள் தான் பூட்டப்பட்டிருக்கிறது. ஆகவே, குற்றவாளிக்கு தண்டனை நிச்சயம்...' எனச் சொல்லி, தன் ஆசனத்தில் அமர்ந்தார்.
விசாரணை துவங்கியது.
'உங்கள் கட்சிக்காரரை நீங்கள் விசாரிக்கலாம்...' என, அனுமதி வழங்கினார், நீதிபதி.
தன் கட்சிக்காரரான, குவாலியர் மகாராஜாவை விசாரித்தார், மோதிலால் நேரு.
பின்னர், நீதிபதியை பார்த்து, 'யுவர் ஹானர்... என் கட்சிக்காரர் பயணம் செய்த குதிரை வண்டியில், ஒன்பது குதிரைகள் இருந்தது உண்மை தான். ஆனால், அந்த வண்டியில், பூட்டப்பட்டிருந்த, ஒன்பது குதிரைகளில், எட்டு குதிரைகள் ஆண். ஒன்று மட்டும் பெண் குதிரை.
'பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லாததை போல, பெண் குதிரையை கணக்கில் எடுத்துக் கொள்ள சட்டத்தில் இடமில்லை. ஆகவே, என் கட்சிக்காரர் எட்டு குதிரைகள் பூட்டப்பட்ட குதிரை வண்டியில் தான் சவாரி செய்துள்ளார். அவர் குற்றமற்றவர். அவரை விடுதலை செய்ய வேண்டும்...' என கேட்டுக் கொண்டார், மோதிலால் நேரு.
மோதிலால் நேருவின், சமயோசித அறிவை எண்ணி வியந்த ஆங்கிலேய நீதிபதி, குவாலியர் மகாராஜாவை வழக்கிலிருந்து விடுவித்தார்.
*****
சீக்கியர்களுக்கு தனி மாநிலம் கேட்டு போராடிய, தாரா சிங், அதற்காக ஜவஹர்லால் நேருவை சந்தித்து பேசப் போவதாக அறிவித்திருந்தார்.
அதை அறிந்த பத்திரிகை நிருபர் ஒருவர், நேருவிடம், 'தாராசிங் உங்களை சந்தித்து, தன் விருப்பத்தை தெரிவித்தால், தாங்கள் அவருக்கு என்ன தருவீர்கள்?' என, கேட்டார்.
சிரித்தபடி, 'காபி, டீ இரண்டில் எதை விரும்புகிறாரோ அதை கொடுப்பேன்...' என்றார், நேரு.
இதை கேட்டு நிருபரும் சிரித்து விட்டார்.
- நடுத்தெரு நாராயணன்