
எழுத்தாளர் மு. வரதராஜன் எழுதிய, 'தம்பிக்கு' நுாலிருந்து:
மக்களுக்குள் ஜாதி இரண்டு. இப்படித்தான் வாழ வேண்டும் என, ஒரு ஜாதி; எப்படியாவது வாழ வேண்டும் என்பது, மற்றொரு ஜாதி.
இந்த ஜாதிகளுக்குள் கலப்பு மனம் கூடாது.
நல்லதம்பி என்ற திரைப்படத்தில், ஒரு பாட்டு பாடுவார், என்.எஸ்.கிருஷ்ணன்.
'நாட்டுக்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தான் அய்யா...' என, ஒரு வரி அதில் வரும். அதனால் அவருக்கு, 'நாகரிக கோமாளி' என, செல்லப் பெயரும் வந்தது.
'என் கடன், களிப்பூட்டல்...' என, அடிக்கடி சொல்லும், என்.எஸ்.கிருஷ்ணன், 1936 - 57 இடையே தமிழர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது உண்மை.
அறந்தை நாராயணன், இவரை வைத்து, 'நாகரிகக் கோமாளி' என, தலைப்பிட்டு நுால் எழுதினார்.
அதில், ஆகஸ்ட் 30, 1957ல், முற்பகல் 11:10 மணிக்கு தான் சிரிப்பதை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார், அறந்தை நாராயணன்.
**********
கல்கியின் எழுத்தை ரசிக்காதவர் யாரும் இருக்க முடியாது. ஆனால், கல்கி, ரசித்த எழுத்தாளர் யார் தெரியுமா?
'இறப்பதற்கு முன், என் சக்தி முழுவதையும் உபயோகித்து விட விரும்புகிறேன். வாழ்க்கையை சிறு மெழுகுவர்த்தியாக நான் கருதவில்லை. அதை, அற்புத ஜோதியாக மதிக்கிறேன். எதிர்கால சந்ததியினருக்கு அதை கொடுப்பதற்கு முன், எவ்வளவு பிரகாசமாக எரிய வைக்க முடியுமோ, அந்தளவு எரிய வைக்க விரும்புகிறேன்...'
இப்படி கூறிய பிரபல எழுத்தாளர், பெர்னாட்ஷா தான் அவர்.
***********
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம், 'உங்கள் வாழ்க்கை பயணம் பற்றி எழுத விரும்புகிறேன். சுருக்கமாக சொல்லுங்கள்...' என்றார், பத்திரிகையாளர் ஒருவர்.
அதற்கு, 'முதலில் நடை. பிறகு, பஸ். அடுத்து, சைக்கிள் ரிக்ஷா. பிறகு, டாக்ஸி. தற்போது, என் சொந்த தேவைக்கும் சினிமா கம்பெனி கார்கள். இது தான் என் வாழ்க்கை பயணம்...' என்றார், பட்டுக்கோட்டையார்.
********
'விரல்கள் பத்தும் மூலதனம்!' நுாலிலிருந்து:
மைசூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர், விசுவேசுவரையர். 102 ஆண்டுகள், நோய், நொடி இல்லாமல் வாழ்ந்தவர். அவரிடம், 'உங்களுடைய நீண்ட வாழ்நாளுக்கு என்ன காரணம்?' எனக் கேட்டனர்.
'நான், தினமும் காலையில் குளிக்கிறேன். குறித்த நேரத்தில் அளவோடு உண்கிறேன். நேரப்படி துாங்குகிறேன். தினமும், 6 கி.மீ., துாரம் நடக்கிறேன்.
'ஒழுங்கான பழக்க வழக்கங்களை கடைபிடிக்கிறேன். நீங்களும் இவ்வாறு செய்தால் டாக்டரிடம் போகாமல் நோய் இன்றி, 100 ஆண்டுகளுக்கு மேல் வாழலாம்...' என்றார், விசுவேசுவரையர்.
********
செ.குகசீலரூபன் எழுதிய, 'புரட்டிப் பாருங்கள்!' நுாலிலிருந்து:
'வாழ்க்கையில் கடைசி நிமிடம் வரை ஈடுபாட்டுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்...' எனக் கூறிய, கிரேக்க தத்துவஞானி, சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதித்து சிறையில் அடைத்தனர். அவருக்கு பக்கத்து அறையில் இருந்த கைதி, அருமையான பாடலைப் பாடினான்.
அதைக்கேட்டு, 'தயவு செய்து இன்னொரு முறை அந்த பாடலைப் பாடு...' என்றார், சாக்ரடீஸ்.
'நீ, மரண தண்டனை கைதி. சாகப் போகும் நேரத்தில் இந்த பாட்டைக் கேட்டு என்ன செய்யப் போகிறாய்?' என, கிண்டலாக கேட்டான், அந்த கைதி.
'சாவதற்குள், புதிதாக ஒரு விஷயத்தை கேட்டு விட்டு, சாகலாமே...' என்றார், சாக்ரடீஸ்.
நடுத்தெரு நாராயணன்