PUBLISHED ON : ஜூன் 01, 2025

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 1 அன்று, உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாள், பால் மற்றும் பால் பொருட்களின் ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை, உலகளவில் வெளிப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
முதன்முதலில், 2001ம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, இந்த தினத்தை அறிவித்தது. பாலின் பயன்பாடு, உற்பத்தி மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதே, இதன் முதன்மை நோக்கம்.
மனித உணவில் முக்கிய இடம் வகிக்கிறது, பால். இதில் கால்சியம், புரதம், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை எலும்பு வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, அனைவருக்கும் பால், அத்தியாவசிய உணவு. பால் பொருட்களான தயிர், நெய் மற்றும் பாலாடைக்கட்டி ஆகியவை, உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
உலக பால் தினத்தன்று, பல நாடுகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பால் பொருட்கள் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. மேலும், பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மற்றும் நுகர்வோரை இணைக்கும் நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
பால் உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ள, இந்தியா போன்ற நாடுகளில், இந்நாள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. வெண்மைப் புரட்சி மூலம், இந்தியாவில் பால் உற்பத்தி பெருமளவு அதிகரித்தது. இதற்கு, 'அமுல்' போன்ற கூட்டுறவு இயக்கங்கள் பெரிதும் உதவின.
உலக பால் தினம், பால் உற்பத்தியில் நிலைத்தன்மையை வலியுறுத்துகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பால் உற்பத்தி முறைகள் மற்றும் பசுக்களின் நலவாழ்வு குறித்த விழிப்புணர்வும், இந்நாளில் முக்கியமாக பேசப்படுகிறது. மேலும், பால் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்கவும், இந்நாள் வாய்ப்பளிக்கிறது.
தமிழ்நாட்டில், 'ஆவின்' நிறுவனம், பால் உற்பத்தி முறைகளை விளக்கும் கருத்தரங்குகளை நடத்துகிறது.
ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக, நெதர்லாந்து மற்றும் டென்மார்க் போன்றவற்றில், பால் பண்ணைகளுக்கு பொதுமக்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். பசு மேய்ச்சல், பால் கறத்தல் போன்றவற்றை நேரில் காணும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பால் பொருட்களின் சுவை சோதனை மற்றும் சமையல் போட்டிகளும் பிரபலம்.
ஆப்ரிக்க நாடுகளான, கென்யா மற்றும் உகாண்டாவில், பால் உற்பத்தியின் பொருளாதார முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. சிறு விவசாயிகளுக்கு நவீன பால் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிலரங்குகள் நடைபெறுகின்றன.
அமெரிக்காவில், பால் தினத்தில், மாரத்தான் ஓட்டங்கள் மற்றும் பால் குடி சவால் போன்ற வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆஸ்திரேலியாவில், பால் தொழிலின் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பால் உற்பத்தி முறைகள் குறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன.
கடந்த, 2023ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலக அளவில், பால் உற்பத்தியில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், முதலிடத்தில் இருக்கின்றன.
அதையடுத்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இரண்டாமிடத்திலும், இந்தியா மூன்றாமிடத்திலும், சீனா நான்காமிடத்திலும், ரஷ்யா ஐந்தாமிடத்திலும் இருக்கின்றன.
அடுத்தடுத்த இடங்களில், பிரேசில், நியூசிலாந்து, மெக்சிகோ, அர்ஜென்டினா மற்றும் கனடா ஆகிய நாடுகள் உள்ளன.
-மு. பாரதி