PUBLISHED ON : ஏப் 05, 2026

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன் தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்: ம துரை சரசுவதி நாராயணன் கல்லுாரியில் பட்டப்படிப்புக்காக நுழைந்த முதல் ஆண்டு. கல்லுாரி நண்பர்கள் சேர்ந்து, 'உன்னதம்' என்ற பெயரில் ஒரு பத்திரிகை ஆரம்பித்தோம்.
முதல் இதழின் அட்டைப்படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, சிவகாசி சென்று, சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினி படங்களை, மொத்தமாக வாங்கினோம். பத்திரிகையின் அட்டைப்படத்தை மட்டும் மதுரையில் அச்சடித்துக் கொள்ள தீர்மானித்தோம்.
முதல் இதழுக்கு, ரஜினி படம் பயன்படுத்தினோம். 5000 பிரதிகள் அச்சிட்டு, கடைகளுக்குச் சென்று பத்திரிகையை விற்க கொடுத்தோம், மறுநாளே விற்றுத் தீர்ந்துவிட்டது. காரணம், ரஜினி படம். 32 பக்க இதழின் விலை, ஐம்பது பைசா. 'உன்னதம்' இதழை மறுபடியும் கடைக்காரர்கள் கேட்க, ரஜினி படம் கிடைக்கவில்லை. பிரபலமானவர் பேட்டி வந்தால், பத்திரிகை சிறப்பாக இருக்கும் என, கூறினர், நண்பர்கள்.
சிவாஜி தான் இரண்டாவது இதழுக்கான அட்டைப்படம் என, முடிவு செய்தோம். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி, பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக, சிவாஜி மதுரை வருவதாக, தகவல் கிடைத்தது.
அவர் மதுரை வந்தால் எங்கே தங்குவார் என, விசாரிக்க ஆரம்பித்தேன். இதற்காக, சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த, தளபதி சண்முகத்தை மதுரை சிம்மக்கல்லில், அவர் வீட்டுக்கே போய் பார்த்தேன். பாண்டியன் ஹோட்டல் புதிதாக கட்டிய நேரம். அங்கு தான், சிவாஜி தங்கப் போகிறார் என்ற, தகவல் கிடைத்தது.
அதே ஹோட்டலில், என் நண்பர், சந்திரசேகர், 'வெயிட்டராக' வேலை பார்த்தார். அவர் மூலம், சிவாஜி தங்கியிருந்த அறை எண்ணை விசாரிக்கச் சொல்ல, அறை எண், 101 என தெரிந்துவிட்டது.
'நீ காலை எட்டு மணிக்கே வந்திடு. நான், 'புட் சர்வீஸ்' கேட்டு வாங்கிடுறேன். எப்படியாவது, சிவாஜியைப் பார்த்திடலாம். முன்பக்கம், 'ரிசப்ஷன்' வழியாக வராதே. பின்பக்கம் வழியா வா. நான் உள்ளே கூட்டிப்போறேன்...' என்று சொல்லி விட்டார் நண்பர், சந்திரசேகர்.
இரவு முழுக்க துாங்கவில்லை. பேட்டி எடுக்கும் போது, 'டேப்ரிகார்டர்' இருந்தா நல்லா இருக்கும் என்று நினைத்து, கே.புதுாரில் பத்திரிகை விற்பனையாளரான கருப்பையா என்ற காங்கிரஸ்காரரிடம் தனி, 'மைக்' உள்ள 'டேப்ரிகார்டரை' இரவல் வாங்கிக் கொண்டேன்.
காலை, 8:00 மணிக்கே பாண்டியன் ஹோட்டலுக்கு போய் விட்டேன். அப்போது, கதர்வேட்டி, கதர் சட்டையுடன், சிவாஜி ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த, சிவகங்கை ராஜசேகரன் வந்தார்.
அவரிடம், 'உன்னதம்' இதழைக் கொடுத்து, 'சிவாஜி அண்ணனை ஒரு பேட்டி எடுக்கணும். கொஞ்சம், 'ஹெல்ப்' பண்ணுங்க'ன்னு கேட்டேன்.
'கொஞ்சம் பொறுப்பா. அண்ணன்கிட்ட கேட்போம்...' என்று கூறி, அறைக்குள்ளே போய்விட்டார்.
நண்பன், சந்திரசேகர் சிவாஜிக்கு காபி, கொடுக்க, அறைக்குள் போயிட்டான்.
'உன்னதம்' பத்திரிகையை காட்டி, சிவாஜியிடம், நான் காத்திருக்கிற தகவலை, ராஜசேகரன் சொல்லியதை, நண்பன், சந்திரசேகர் கேட்டு, வெளியே வந்து, கட்டைவிரலை நீட்டி, 'தம்ஸ் - அப்' முத்திரை காட்டினான். 10 நிமிடத்திற்கு பின், உள்ளே அழைத்தார், ராஜசேகரன்.
'பத்து நிமிஷம் தான். அதுக்குள்ளே பேட்டியை முடிச்சிடணும்...' என, சொல்லி உட்காரச் சொன்னார்.
உள் அறையிலிருந்து, எந்தவித, 'மேக்-அப்'பும் இன்றி வெளியே வந்தார், சிவாஜி. சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார்; நெற்றி நிறைய விபூதி. என்னை உற்றுப் பார்த்து, 'ஏம்ப்பா என்னைய எல்லாம் அட்டையில போட மாட்டீங்களா?' என, கனத்த குரலில் கேட்க, 'அடுத்த இதழில் உங்க படம் தான் போடுறோம்...' என்றேன்.
'அப்படியா, நல்ல படமா போடுங்க...' என்றார்.
அப்போது, முதல்வராக இருந்தார், எம்.ஜி.ஆர்., அரசியல் சார்ந்தே என் முதல் கேள்வி இருந்தது.
'கலைத்துறையில், எம்.ஜி.ஆரும், நீங்களும் இருந்தாலும், அரசியலில் ஏன் எதிரும், புதிருமாக இருக்கீங்க?' என்று கேட்டேன்.
அதற்கு, 'அவரும், நானும் எப்பவும் நண்பர்கள் தான். எங்க நட்பு, அரசியலுக்கு அப்பாற்பட்டது. எனக்கு அவர் பெரிய அண்ணன்...' என்று, சிவாஜி சொல்ல, 'அப்படீன்னா மதுரையில நடக்க இருக்கிற உலகத் தமிழ் மாநாட்டுக்கு உங்களுக்கு அழைப்பு அனுப்பினால் பங்கேற்பீங்களா?' என்றேன்.
'நிச்சயமா பங்கேற்பேன். ஆனால், நம்மளை கூப்பிட மாட்டாங்களே...' என, அவருக்கே உரிய ஸ்டைலில் சொல்லி, அமைதியானார்.
'ரஜினி, கமல் வருகையால் உங்களுக்கு இப்ப சினிமா வாய்ப்பு குறைவது உண்மையா?' என கேட்க, சற்று நேரம் மவுனமாக இருந்தவர், 'சாகுறவரைக்கும் இந்த கணேசன் நடிக்கிறதை நிறுத்த மாட்டான்...' என்றார்.
'உன்னதம்' இதழை புரட்டிப் பார்த்தார்.
'ரஜினியும், கமலும் என் புள்ளைங்க தான். அவங்க இப்ப தான் வளர்ந்து வராங்க...' என்றவரிடம், 'ரஜினியோட சேர்ந்து நடிப்பீங்களா?' எனக் கேட்க, 'நிச்சயம் நடிப்பேன். அதுக்கு நேரம் நிச்சயம் வரும்...' என்றார்.
பேச்சு அவரது ரசிகர் மன்றம் பக்கம் திரும்பியது... 'மதுரைல தான் எனக்கு ரசிகர் மன்றங்கள் அதிகம். முதன் முதலா மன்றம் உருவானது கூட இங்கதான். 'திரிசூலம் படத்தின் விழாவை மிக பிரமாண்டமாய் நடத்தினது ரசிகர் மன்ற பிள்ளைகள் தான்...' என்றார்.
திரையுலகம் சார்ந்த நட்சத்திரங்களில் முதன் முதலில் எனக்கு விரிவான பேட்டி கொடுத்தது, சிவாஜி கணேசன் என, இப்போது நினைத்தாலும், உடம்பு சிலிர்க்கிறது. 'உன்னதம்' இதழில், சிவாஜி பேட்டி, ஆறு பக்கம் வெளியானது. சிவாஜி பேட்டி, வெளியான இதழை படித்து பாராட்டாதவர்களே இல்லை. சிவாஜி மன்றத்தை சேர்ந்தவர்களின் பாராட்டு தனி.
பத்திரிகைகள் மீதான ஆர்வத்தில் துணுக்கு செய்திகள், கேள்வி-பதில் இவற்றில் கவனம் செலுத்தினேன். 'சுகப்ரியா' என்கிற புனை பெயரில், பேட்டி கட்டுரை எழுதி வந்தேன்.
சித்ரா லட்சுமணன் நடத்திய, 'திரைக்கதிர்' இதழுக்காக, கண்ணதாசனை பேட்டி கண்டேன். 'விபசார குற்றங்களில் பெண்ணைத்தான், விபசாரி என்று விமர்சிக்கிறோம். விபசாரத்திற்கு துணை போகும் ஆண்களை ஏன் விமர்சிப்பதில்லை?' என்று, கண்ணதாசனிடம் கேட்டேன்.
அதற்கு, கவியரசர் தந்த பதில்...
- தொடரும்
ஆர்.பிரபாகரன்
