தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

அலுவலகம்...

தேர்தல் களம் சூடுபிடிக்க, செய்தி பிரிவினர் அனைவரும், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். இடைவிடாத, 'அசைன்மென்ட்' காரணமாக, லென்ஸ் மாமாவும் வெளியே சென்றிருந்தார். நானும், 'திண்ணை' நாராயணனும், கடந்த காலத்தில் தேர்தல் நிலவரங்களை, 'இன்டர்நெட்'டில் தேடி தேடி படித்துக் கொண்டிருந்தோம்

மதிய உணவு இடைவேளை...

மற்றவர்கள், தேர்தல் பற்றியே, 'டிஸ்கஸ்' செய்ய, 'மணி... உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?' என்றார், திடுதிப்பென்று, நாராயணன்.

இவர் என்ன இடையில் புகுந்து, சம்பந்தமில்லாமல் கதை சொல்லட்டுமா என்கிறாரே... சரி, கொஞ்சம், 'ரிலாக்ஸ்' செய்துக்கலாம் என்று, 'சரி சொல்லுங்க கேட்போம்...' என்றேன்.

கூற ஆரம்பித்தார், நாராயணன்:

ஒரு ஊரில் இருந்த ராஜாவின் மேல மக்களுக்கு ரொம்ப மரியாதை. அவ்வளவு நல்லா ஆட்சி செஞ்சிட்டு இருந்தார்.

ஒரு நாள் அமைச்சரை அழைத்தார், ராஜா.

'இதோ பாருங்க. எனக்கு வயசாயிருச்சு. அதனாலே, இந்த அரச பொறுப்பை எல்லாம் நீங்க ஏத்துக்குங்க...' என்றார்.

பின்னர், ராணியை அழைத்து, 'வா... நாம் இனிமே இங்க இருக்க வேண்டாம். காட்டுக்குப் போய் தவம் பண்ணலாம்...' என்றார், ராஜா.

இந்த செய்தி மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. உடனே கூட்டம் கூட்டமாக அரண்மனைக்கு வர ஆரம்பிச்சாங்க. மன்னரை சந்தித்த மக்கள், 'அரசே தாங்கள் எங்களுக்கு தந்தை மாதிரி. நீங்க காட்டுக்குப் போயிட்டா நாங்க எல்லாம் இங்கே எப்படி இருக்க முடியும்? எங்களுக்கெல்லாம் எந்தத் துன்பமும் இல்லாம பார்த்துக்கிட்டு வர்றீங்க. இது மாதிரியான ஒரு அரசாட்சி இல்லேன்னா நாங்கள் வாழ்ந்து என்ன பயன்...' என்றனர்.

'என்ன பண்ணுறது. வயசான காரணத்துனாலே தான் இந்த முடிவுக்கு வந்தேன்...' என்றார், ராஜா.

'அப்படின்னா நீங்க காட்டுக்குப் போக வேண்டாம். நாங்க போறோம். நாங்க அங்கே போய் தவம் பண்றோம்; வழிபாடு பண்றோம், கடவுள் வருவார். அவரிடம், உங்க ஆயுளை நீட்டிக்க வரம் வாங்கி வந்துடறோம்'ன்னு சொல்லி, உடனே காட்டுக்கு போனாங்க.

நாட்டு மக்கள் எல்லாரும் ஒட்டுமொத்தமா காட்டுல வந்து உட்கார்ந்து தவம் பண்றதை பார்த்தார், கடவுள். உடனே புறப்பட்டு வந்தார்.

'எல்லாரும் இப்படி வந்து உட்கார்ந்திருக்கீங்களே... என்ன வேணும் உங்களுக்கு?' என்றார், கடவுள்.

உடனே, 'சுவாமி, எங்க நாட்டு ராஜா ரொம்ப நாளைக்கு நல்ல படியா இருக்கணும். அவர் மகிழ்ச்சியாகவும், உடல் நலத்தோடும் இருந்தாத்தான், நாங்க அமைதியாக வாழ முடியும்'ன்னு சொன்னாங்க.

'சரி அதுக்கு என்ன செய்யணும்...' என்றார், கடவுள்.

'எங்க மன்னருக்கு இன்னும் நுாறு ஆண்டுகள் ஆயுளைக் கொடுங்க...' என்றனர்.

'அவ்வளவு தானே. சரி அப்படியே ஆகட்டும்'ன்னு சொல்லி மறைந்து போனார், கடவுள்.

மக்கள் மகிழ்ச்சியோட திரும்பி வந்தாங்க.

'மன்னா கடவுள் வரம் கொடுத்துட்டார். நீங்க இன்னும், 100 ஆண்டுகள் வாழப் போறீங்க'ன்னு சொன்னாங்க, மக்கள் அனைவரும்.

இதைக்கேட்டதும் ராணி, ராஜாவை வணங்கி, 'நான் தவம் செய்யப் போறேன்னு சொல்லி புறப்பட்டாங்க. உடனே மக்கள், 'ஐயோ, நாம ராஜாவுக்கு மட்டும் தானே நீண்ட ஆயுள் வேணும்ன்னு வரம் வாங்கினோம். ராணிக்கு வாங்கலையே... அதனால தான் கோபத்துல புறப்பட்டாங்க போல'ன்னு நினைச்சு வருத்தப்பட்டாங்க.

ஆனால், ராணி நினைச்சது வேறு.

காட்டுக்கு போய், ராணி தவம் செய்ய, கடவுள் காட்சி கொடுத்தார்.

கடவுள் கிட்ட, 'சுவாமி, ராஜாவுக்கு மட்டும், 100 ஆண்டுகள் ஆயுளை நீட்டித்து வரம் கொடுத்தீங்க. அப்படின்னா குடிமக்களும் மேலும், 100 ஆண்டுகள் இருக்கணும். இப்படிப்பட்ட குடிமக்கள் இல்லேன்னா, ராஜா இருந்து என்ன பிரயோஜனம்!' என்றார்.

'சரி அவங்களும், 100 ஆண்டுகள் வாழ்வாங்க. அது மட்டுமல்ல, நீயும் மேலும், 100 ஆண்டுகாலம் வாழ வரமளிக்கிறேன்'ன்னு சொல்லி மறைஞ்சிட்டார், கடவுள்.

இதுல, கடவுள் வர்றதும், மறையறதும் முக்கியம் இல்லை.

இதில் கவனிக்க வேண்டியது ஆள்கிறவனின், குடிமக்களின் மற்றும் ஆள்கிறவன் மனைவியின் விசாலமான மனம்.

இப்படி ஒரு நாடு இருந்துச்சுன்னா எப்படி இருக்கும் வாழ்க்கை. நினைச்சுப்பார், என்று முடித்தார், நாராயணன்.

'கதை நல்லாருக்கு. ஆனா, இப்ப ஏன் இது...' என்றேன்.

'தேர்தல், தேர்தல்ன்னு ஊரே அமர்க்களப்படுதே! மக்களுக்காக அரசன், அரசனுக்காக மக்கள்ன்னு இருக்கணும்ன்னு, 'அர்த்தசாஸ்திரம்' எழுதிய, சாணக்கியர் கூறிய கதை இது; நினைவுக்கு வந்தது. சொன்னேன். அவ்வளவு தான்!' என்று முடித்துக் கொண்டார், நாராயணன்.



சுகா எழுதிய, 'மூங்கில் மூச்சு!' என்ற நுாலில் படித்து, ரசித்தது: தே ர்வு முடிவுகள் நாளிதழில் வெளியான காலகட்டம் அது. மாலையில் வெளியாகும் நாளிதழில், எண்களை தேடினோம். வகுப்பு தோழன், குமரனின் எண்ணை எவ்வளவு தேடியும் காணவில்லை. சட்டென்று டிராயர் பாக்கெட்டிலிருந்து ஒரு பாட்டிலை திறந்து மடக்கென்று குடித்து விட்டு, 'நான் விஷத்தை குடிச்சிட்டேன்...' என்றான், குமரன்.

இதைப் பார்த்த, மற்றொரு நண்பன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான். விஷம் குடித்தவனை விட்டு விட்டு, மயங்கி கிடந்தவனை தண்ணீர் தெளித்து எழுப்பினோம். அதற்குள் விஷம் குடித்தவன், விஷம் தலைக்கு ஏறி, இரும ஆரம்பிக்க, நண்பர்கள் மூவரும், குமரனை துாக்கிக்கொண்டு, மருத்துவமனை ஒன்றில் கம்பவுண்டராக பணிபுரிந்த, தம்பிரான் மாமா வீட்டுக்கு ஓடினோம்.

துாங்கிக் கொண்டிருந்த, தம்பிரான் மாமாவை எழுப்பினோம். அவரும் அரக்க பரக்க விழித்தெழுந்து, பெஞ்ச் ஒன்றில், குமரனை படுக்க வைத்து, அவன் கண்களின் கீழ் இமையை இழுத்து பார்த்து, 'என்னத்தடே குடிச்சான்?' என்று எங்களிடம் விசாரித்தார்.

குமரன் தன் டிராயர் பாக்கெட்டில் பத்திரமாய் வைத்திருந்த காலி பாட்டிலை எடுத்துக் கொடுத்தான், நண்பன். அதைப் பார்த்து, குமரனை எழுந்து உட்கார சொல்லி, ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கச் செய்தார்.

'கடையில ஒரு காபி வாங்கி கொடுத்து, வீட்டிற்கு கூட்டிக்கிட்டுப் போங்க...' என்று எங்களிடம் கூறிவிட்டு, மீண்டும் படுக்க தயாரானார், தம்பிரான் மாமா.

'உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே மாமா...' என்று கவலையோடு கேட்டான், இன்னொரு நண்பன்.

'இருமல் மருந்தை குடிச்சா ஒரு ஆபத்தும் இல்ல. அவனையும், என்னையும் நிம்மதியா துாங்க விடுங்கடா...' என்றார், தம்பிரான் மாமா.

- இது எப்படி இருக்கு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us