தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (7)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (7)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (7)


PUBLISHED ON : மே 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன் தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்: இ யக்குனர், கே.பாலசந்தர், தான் இயக்குனரானதின் பின்னணியை நினைவு கூர்ந்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது...

'டி.எம்.ராமச்சந்திரன் என்ற பத்திரிகையாளர் (ஹிந்து குரூப்பில் பணிபுரிந்தவர்) என்னிடம் வந்து, 'ஹிந்து' ரங்கராஜன், உங்களுடைய, 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தைப் படமாக்க விரும்புகிறார். தாங்கள் என்னோடு நேரில் வர வேண்டும். நாடகத்தை அவர் இன்னமும் பார்க்கவில்லை என்பதால், அதன் கதையை நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டும்...' என்று அன்புடன் வேண்டுகோள் விடுத்தார். நானும், அவரது பேச்சைத் தட்ட முடியாமல், நேரில் சென்றேன்.

'ரங்கராஜனை நான் சென்று சந்தித்தபோது அவருடைய கையில், 'ஆனந்த விகடன்' இதழ் இருந்தது. அதில், 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தைப் பற்றி மிகவும் பிரமாதமாக விமர்சனம் வந்திருந்தது. அவருடன், அப்போது முன்னணி நடிகராக இருந்த, ஜெமினி கணேசனும் இருந்தார். அப்போதுதான் முதன் முறையாக நான், ஜெமினி கணேசனை நேரில் சந்தித்தேன்.

'நாடகக் கதையை அப்படியே சொல்லும்படி, 'ஹிந்து' ரங்கராஜன் என்னைப் பணித்தார்! நானும் கதை சொல்ல ஆரம்பித்தேன். கதை சொல்ல ஆரம்பித்து, இரண்டு, மூன்று நிமிடங்களிலேயே, ரங்கராஜன் கடிகாரத்தைப் பார்த்தார். திரையுலகம் சம்பந்தப்பட்ட ஒரு பெரும்புள்ளி கல்கத்தாவிலிருந்து அன்று வருவதாகவும், அவர்கள் இருவரும் விமான நிலையத்துக்குப் போக வேண்டும் என்றும் கூறினர்.

'நான் கதை சொல்ல ஆரம்பித்து, கதை சூடு பிடிப்பதற்கு முன்பாகவே, இடையில் நிறுத்திவிட்டு, ஏர்போர்ட்டுக்கு போன் செய்து, கல்கத்தா விமானம் எப்போது வருகிறது என்று கேட்டுக் கொண்டனர். என் கதைக்குப் பிடித்த துரதிருஷ்டம் அன்று விமானம் சரியான நேரத்திற்கு வருவதாகத் தகவல் வந்தது. உடனே, மறுபடி கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, என்னைப் பார்த்தனர். நான், நண்பர், டி.எம்.ராமச்சந்திரனைப் பார்த்தேன். என்னை இருக்கச் சொல்வதா அல்லது பாதிக் கதையோடு வீட்டுக்கனுப்பி பிறகு, இன்னொரு முறை வரச் சொல்லுவதா என்று யோசிப்பதை, அவர்கள் பார்வை காட்டியது.

'இப்பிரச்னைக்கு, பளிச்சென்று ஒரு விடை கண்டுபிடித்தார், ஜெமினி கணேசன். 'பாலச்சந்தரும் நம் கூடவே காரில் வரட்டுமே. விமான நிலையத்திற்கு போகிற வழியில் மீதிக் கதையை சொல்லட்டுமே...' என்று சொன்னதும், ரங்கராஜன் டிரைவிங் சீட்டில் அமர, ஜெமினி முன் சீட்டில் உட்கார, நானும், டி.எம்.ராமச்சந்திரனும் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டோம். கார் மீனம்பாக்கத்தை நோக்கிப் புறப்பட்டது.

'மீண்டும் ஒரு முறை தொண்டையைக் கனைத்துக் கொண்டு, விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர ஆரம்பித்தேன்.

'நடுநடுவில் ரங்கராஜனும், ஜெமினியும் ஏதோ சில சொந்த விஷயங்களையும் பேசிக் கொண்டனர். அப்போது என்னை கதைச் சொல்வதை நிறுத்தச் சொல்வர். அதைப் பேசி முடித்துவிட்டு மீண்டும் என்னை தொடரச் சொல்வர்.

'அப்படியே விமான நிலையம் வந்துவிட்டது. என்னையும் விமான நிலையத்திற்குள்ளேயே வரும்படி அழைத்தனர். நான் காரிலேயே உட்கார்ந்திருப்பதாக சொல்லி விட்டேன்!

'என்னை அழைத்துப் போன, ராமச்சந்திரனுக்கு தர்ம சங்கடமான நிலை; அவர் என் முகத்தைப் பார்க்கவே தயங்கிக் கொண்டிருந்தார்.

'அதற்குள் திரையுலகம் சம்பந்தப்பட்ட அந்தப் பெரும்புள்ளி வந்துவிட்டார். அவரோடு, ஜெமினிகணேசனும் சென்று விட்டதாகக் கேள்விப்பட்டேன். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

'ரங்கராஜன் மட்டும் என்னை மறக்கவில்லை. என்னை அழைத்துப் போக அவர் வருவதற்குள் நான், ராமச்சந்திரனிடம் சொல்லிவிட்டு, ஒரு டாக்ஸியைப் பிடித்து வீட்டிற்கு சென்று விட்டேன்.

'அந்த தவிப்பின் விளிம்பில் எழுந்தது ஓர் எண்ணம். இதே, ஜெமினி கணேசனை வைத்து நான் படம் எடுக்க வேண்டும். மீண்டும், மீண்டும் என் படத்தில் நடிக்க வேண்டுமென்று அவரே விரும்ப வேண்டும் என்று, என்னுள் ஒரு வித சவால் உருவாகி விட்டது.

'திரையுலகில் காலடியே எடுத்து வைக்காத நிலையில் இப்படி ஒரு அசாத்திய துணிச்சல், வெறி தேவைதானா என்றுகூட என்னையே நான் கேட்டுக்கொண்டேன். சில சமயங்களில் மனிதனின் முன்னேற்றத்துக்கு சில சவால்களும் தேவைப்படுகின்றன.

'காலம் உருண்டோடியது. ஏதோ இனம் தெரியாத ஒரு மகிழ்ச்சி. என் சவாலில், சாதித்து விட்டது போல ஒரு பெருமிதம். எத்தனையோ படங்கள், ஜெமினி கணேசனுடன் வேலை செய்து விட்டேன். ஜெமினியிடம் இதைப் பற்றி கடைசி வரை குறிப்பிட்டதே கிடையாது.

'இத்தனை ஆண்டுகளாக நான் வெளியில் சொல்லாத ஒரு விஷயத்தை இன்று உங்களிடம் சொல்வதற்குக் காரணம், அதில் ஒரு அழகிய நடைமுறை உண்மை மறைந்திருப்பதை விளக்குவதற்காகத்தான்.

'தினம், எத்தனையோ பேர் புதுப்புது சவால்களை சந்தித்தபடி இருக்கலாம். அதில், எத்தனையோ பேர், சில ஆண்டுகள் கழித்து, அந்த சவாலை நிறைவேற்றுபவர்களாகவும் ஆகி இருக்கலாம். மீனம்பாக்கத்தில் நடந்த, அந்த சம்பவம் என்னுள் ஒரு லட்சிய தாகத்தை உண்டு பண்ணியது போல!' என்று, இயக்குனர் பாலச்சந்தர், சொல்லச் சொல்ல குறிப்பெடுத்து எழுதினேன்.

சென்னை மருத்துவக் கல்லுாரியில் படித்தவர், மணி. சென்னை துறைமுகத்தில் மாலுமிகள் வந்து தங்குமிடம் ஒன்று இருந்தது. அங்கே அவர்கள் ஓய்வு நேரத்தில் கால்பந்து விளையாடுவர். அப்படி விளையாடிய ஜப்பான் நாட்டு மாலுமியோடு, மணிக்கு பழக்கம் ஏற்பட்டு, கராத்தே கத்துக்கிட்டார். இதனால், கராத்தே மணி என்ற அடையாளத்தோடு சென்னையில் புகழ் பெற்றார்.

கராத்தே மணிக்கு எப்படியாவது திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என்ற ஆசை. 'தேவர் பிலிம்ஸ்' எடுத்த, அன்புக்கு நான் அடிமை திரைப்படத்தில், ரஜினிகாந்தின் நண்பராக நடிக்க முதலில் வாய்ப்பு கிடைத்தது. சின்னப்பா தேவரின் மருமகன், தியாகராஜன் தான் இயக்குனர். கராத்தே மணியை, தேவர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர், அப்போது, அ.தி.மு.க.,வில் அமைச்சராக இருந்த, க.ராசாராம். முதல் படமே பெரிய நிறுவன தயாரிப்பு என்பதால், அதன்பின், கராத்தே மணிக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. சென்னை சேத்துப்பட்டில், கராத்தே பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தார்.

நானும், ஜெய்மோகனும் அந்த பக்கம் போனால் நிச்சயம் இவரைப் பார்த்து விடுவோம். ஒருமுறை அவரை பற்றி எழுத போய், பிரச்னையாகிவிட்டது. அது...

- தொடரும்

- ஆர். பிரபாகரன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us