PUBLISHED ON : மே 31, 2026

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன் தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்: இ யக்குனர், ஹரிஹரன் இயக்கிய வித்தியாசமான திரைப்படம், ஏழாவது மனிதன். மகாகவி பாரதியாரின் கவிதைகளை, பாடல்களாக உருவாக்கி இப்படத்தில் சேர்த்திருப்பார், இசையமைப்பாளர், வைத்தியநாதன். ஒரு கிராமத்தை வழி நடத்த, ஆறு பேர் இருந்தாலும், ஏழாவதாக ஒரு நபர் தேவை என்பது, இந்த திரைப்படத்தில் உள்ள கருத்து. தொழிலாளர் வர்க்கத்தின் பாதிப்பையும், சுற்றுச்சூழல் குறித்தும் பேசிய அந்த திரைப்படத்தில், நாயகனாக நடித்தவர், ரகுவரன். தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்க்கும் பொறியாளராக, இதில் நடித்திருந்தார் நடிகர், ரகுவரன். கடந்த, 1983ல், தேசிய விருதை பெற்றது இப்படம்.
ஒருமுறை, ரகுவரனை பார்க்க நானும், புகைப்படக்காரர் ஜெய்மோகனும் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'கண்பத்' ஹோட்டலுக்கு போனோம். அங்கே தான், அவர் அப்போது தங்கி இருந்தார். அவர் நடித்த சினிமா குறித்து பேச ஆரம்பித்தோம். கேரளாவில், கொல்லங்கோடு பகுதியிலே பிறந்தவர், ரகுவரன். தன் அப்பாவின் தொழில் நிமித்தமாக கோயம்புத்துாருக்கு இடம் மாறியது பற்றியெல்லாம் எங்களுடன் பகிர்ந்து கொண்டார். முதன்முதலில், கக்கா என்ற மலையாள படத்தில் அறிமுகமானதை சொன்னார்.
கக்கா திரைப்படத்தில், ரகுவரனுக்கு ஜோடியாக நடித்தவர், ரோகிணி. ரகுவரனை சந்தித்ததை பற்றி, ஒரு கட்டுரை எழுதினேன். அதில், 'அவரது அறை முழுவதும் சிகரெட் வாசம்...' என, எழுதி விட்டேன். இது, ரகுவரனை மிகவும் பாதித்து விட்டது. சக பத்திரிக்கை நண்பர், ஒருவரிடம் சொல்லி, என்னை உடனே சந்திக்க வேண்டும், 'உட்லண்ட்ஸ் டிரைவின் ஹோட்டலுக்கு' வர சொல்லுங்கள் என்றிருக்கிறார்.
ரகுவரன் என்ன சொல்வாரோ என்ற பதட்டம் ஏற்பட்டு விட்டது, எனக்கு.
மாலை 5:00 மணிக்கு, 'டிரைவிங் இன் ஹோட்டலுக்கு' வருவதாக சொன்ன, ரகுவரன், சரியான நேரத்திலேயே அங்கே வந்து விட்டார். அவரே தன் காரை தானே ஓட்டி வந்தார். எனக்கும், அவருக்கும் தேவையான உணவை, 'ஆர்டர்' செய்தேன்.
உணவு வருவதற்கு இடையே, ரகுவரனே பேச ஆரம்பித்தார்...
'சார், நான் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவன். சினிமா வாய்ப்புகள் தேடி நானாக போவதில்லை. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கணும் என்பதில் கவனமாக இருக்கிறேன். நான் நடிக்கிறதுக்காக கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு வந்ததிலிருந்து ஹோட்டலில் தான் தங்கியுள்ளேன். இப்பக்கூட, பட வாய்ப்பு எதுவும் சரியாக இல்லாமல் வருத்தத்தோடுதான் இருக்கிறேன்...' என்று, அவர் பேச ஆரம்பித்தார்.
நான், அவரிடம், 'நீங்கள் ஏன், 'ஹீரோ'வாகவே நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். நல்ல கேரக்டர்களில் நடித்துப் பாருங்களேன், சார்...' என்றேன்.
'எனக்கு அப்படிப்பட்ட ஐடியா இப்போதைக்கு இல்லை. 'கேரக்டர் ரோல்' பண்ண இன்னும் எனக்கு வயசு இருக்கு...' என்றார்.
நான் ஏதோ திட்டுவதற்கு தான் வர சொல்லியிருக்கிறார் என்ற பதட்டத்திலேயே அப்பொழுதும் இருந்தேன்.
'சினிமாவில் நடிப்பதற்கு, 'சான்ஸ்' வாங்குவது எவ்வளவு பெரிய கஷ்டம்ன்னு உங்களுக்கு தெரியாதா? அதுவும் கமல், ரஜினி போன்றவர்கள் நடிக்கும் படங்களில், 'சான்ஸ்' வாங்குவதில் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருக்கு.
'உங்கள மாதிரி பத்திரிக்கை நண்பர்கள் எனக்காக பேசி அப்பப்ப உதவி செய்திருக்கிறார்கள். ஏன், எனக்கு நல்ல வாய்ப்பு வந்தா நீங்க கூட சொல்ல மாட்டீங்களா?' என்றார்.
ரகுவரன் பேசப் பேச அவரின் உள் மனதில் என் மீதான கோபம் இருந்தாலும், அதை சற்றும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், நிதானத்தோடு பேசுகிறார் என்று புரிந்தது. இரண்டு மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
தற்சமயம் இயக்குனர், ஸ்ரீதர் இயக்கிய, ஒரு ஓடை நதியாகிறது படத்தில் நடித்திருப்பதாக கூறினார், ரகுவரன்.
'அப்படத்தில் யார் ஜோடி?' என்று கேட்டேன்.
'இதுல எனக்கு ஜோடியா, இரண்டு நாயகிகள். ஒருவர் நடிகை, சுமலதா; இன்னொருவர் நடிகை, மனோ சித்ரா. இவர், குணசித்திர நடிகர், டி.எஸ்.பாலையா மகள்...' என்று சொன்னார், ரகுவரன்.
மனோ சித்ராவை அடுத்து பேட்டி எடுக்க வேண்டும் என்று, நானும் முடிவு செய்தேன். அதோடு, அவருடனான சந்திப்பு முடிய, 'மீண்டும் சந்திப்போம்...' என்றார், ரகுவரன்.
தன் புதிய படத்தில் நடிப்பதற்காக, சத்யகலா என்பவரை தேர்வு செய்து வைத்திருந்தார். எம்.ஜி.ஆர்., அவர், உருவாக்கிய, நல்லதை நாடு கேட்கும் என்ற அந்த படத்திற்காக, சில காட்சிகளில் நடித்தும் இருந்தார், சத்யகலா. ஆனால், தொடர்ந்து அந்த படத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியவில்லை. அதற்குள், தமிழக முதல்வராகி விட்டார். படம் பாதியில் கைவிடப்பட்டதும், வேறு புதிய வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தார், சத்யகலா.
சிவச்சந்திரன் ஜோடியாக, அவளும் சிரித்தாள் என்ற படத்தில் நடித்தார், சத்யகலா. அப்படமும் பாதியிலேயே நின்று விட்டது. 'சத்யகலாவை போட்டால் படம் பாதியிலேயே நின்று விடும்...' என்ற செய்தி பரவியதால், அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
காட்டுப்போத்து என்ற மலையாள படத்தில், மலையாள நடிகர், மது என்பவருக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து, பிரேம் நசீரின், 500-வது படமான, கரைபுரண்ட ஜீவிதங்கள் என்ற படத்தில், சத்யகலா தான் நாயகி. நுங்கம்பாக்கம் சிவன் கோவில் அருகே வாடகை வீட்டில் தான் குடியிருந்தார். எப்போது வீட்டுக்கு போனாலும் பிரியமாக பேசுவார்.
கே.பாக்யராஜ் இயக்கி, நடித்த விடியும் வரை காத்திரு படத்தில், கதாநாயகியாக நடித்த சத்யகலாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதுபோல, ரஜினியுடன், பாயும் புலி, சிவாஜியுடன், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு என, பரவலாக நாயகியாக நடித்து வந்த, சத்யகலா குணச்சித்திர நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டார்.
தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என, வாய்ப்பு வந்தாலும், பெரிய ஒரு நாயகியாக தன்னால் வர முடியவில்லை என்ற கவலை அவருக்கு உண்டு.
- தொடரும்
- ஆர்.பிரபாகரன்
