PUBLISHED ON : மே 31, 2026

உண்மையான சமூக மாற்றம்!
ஒரு காலத்தில், திருநங்கையர் என்றாலே, அவர்களை ஒரு ஈனப் பொருளை பார்ப்பது போல பார்த்து, ஒதுக்கியே வைத்திருந்தது, இந்த உலகம். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளை மறுத்ததோடு, கேலியும் செய்து, குடும்பத்தினரே அவர்களை ஒதுக்கி, வீட்டை விட்டு துரத்தியும் விட்டுள்ளனர்.
அவர்களும் வேறு வழியின்றி, யாசகம் பெற்றே வாழ்க்கையை நடத்தினர். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. அவர்களும் உழைத்து, சொந்தமாக தொழில் செய்து அடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளனர்.
எங்கள், தெருவில் உள்ள கடை வீதியில், மூன்று திருநங்கையர் சேர்ந்து, சிறு ஜவுளி கடை ஒன்றை ஆரம்பித்தனர். நியாயமான விலை, கனிவான பேச்சு மற்றும் தொழில் நேர்த்தி காரணமாக வியாபாரம் பெருக, இன்று அதே தெருவில், ஒரு பெரிய கடையை வாடகைக்கு எடுத்து, வியாபாரத்தை விரிவுபடுத்தியுள்ளனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ்2 படித்த, 20 பெண்களுக்கு கடையில் வேலை கொடுத்துள்ளனர். தையல் தெரிந்த பெண்களை வைத்து, சேலை வாங்கும் பெண்களுக்கு, ஒரு மணி நேரத்தில், ஜாக்கெட் தைத்தும் கொடுத்தும் வியாபாரத்தை பெருக்கி உள்ளனர்.
எங்கள் ஊரில் இருக்கும் ஜவுளி கடைகளில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது இவர்களின் கடை. ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்ட சமூகமாக இருந்து, இன்று உழைப்பால் முன்னேறி, அடுத்தவர்களையும் அரவணைத்து செல்கிறது என்றால், அது தான் உண்மையான சமூக மாற்றம்.
- பி.மணியம்மாள், துாத்துக்குடி.
வித்தியாசமான முயற்சி!
சமீபத்தில், உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது, அவர்கள் பிள்ளையை பள்ளிக்கு அனுப்புவதற்காக வாசலில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஆம்னி வேன் ஒன்று வந்தது; அதை இளம்பெண் ஒருத்தி ஓட்டி வந்தாள். அவள், வேன் கதவைத் திறந்து, குழந்தையை பாதுகாப்பாக ஏற்றி, இருக்கையில் உட்காரவைத்து, கவனமாக வண்டியை ஓட்டிச் சென்றாள்.
அந்த பெண்ணின் சுறுசுறுப்பும், பொறுப்புணர்வும் என்னை மிகவும் கவர்ந்தது.
பின்னர், இதைப் பற்றி உறவினரிடம் கேட்டேன்.
அதற்கு அவர், 'இப்பெண் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்தவள். அந்த குழுவினர், இரண்டு ஆம்னி வேனை வாங்கி, பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வேலையை செய்து வருகின்றனர்.
'மகளிர் குழுவில் உள்ள பெண்களே பாதுகாப்பான முறையில் வண்டிகளை ஓட்டி, பொறுப்பாக குழந்தைகளை பார்த்து கொள்வதால் ஊரிலுள்ள பலர், தங்கள் குழந்தைகளை, அவர்களது வேனிலேயே பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
'தற்போது, இன்னொரு வேன் வாங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு மாதந்தோறும் நல்ல வருமானம் கிடைக்கிறது...' என்றார், உறவினர்.
மகளிர் சுய உதவி குழுக்கள், பொதுவாக ஊறுகாய், அப்பளம், வடகம் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்றவற்றை தயாரித்து, விற்பனை செய்வதை நாம் அறிந்திருக்கிறோம்.
ஆனால், இப்படி வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு நல்ல வருமானம் ஈட்டுவது மிகவும் பாராட்டத்தக்கது. மற்ற சுய உதவி குழுக்களும் இதுபோன்ற புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு முன்னேறலாமே!
ம.காவியா, கோவை.
மருமகளுக்கு போதித்த மாமியார்!
என் நெருங்கிய தோழி, அரசு பணியில் உள்ளார். அவளுக்கு, இரண்டு தங்கைகள்; இருவரும், கல்லுாரியில் படிக்கின்றனர். வீட்டின் முதல் பட்டதாரியான என் தோழி, அவளது குடும்ப சூழல் மற்றும் தங்கைகளை படிக்க வைப்பதற்காக, திருமணத்தை தள்ளிப் போட்டு வந்தாள்.
ஆனால், 'இளமை காலத்தை, உன் தங்கைகளுக்காக செலவழித்து விட்டு, கடைசியில் என்ன செய்ய போகிறாய். எங்களைப் பற்றி கவலைப்படாதே... உனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள். பருவம் தவறி பயிரிட்ட எந்த பயிராலும் பயன் இருக்காது...' என்று, பக்குவமாய் எடுத்து கூறி, அவளுக்கு திருமணமும் செய்து வைத்தனர், அவளது பெற்றோர்.
சமீபத்தில், என் தோழியை சந்தித்தேன். அவளது குடும்ப நலனைப் பற்றி விசாரித்த போது, தோழி கூறியது, ஆச்சரியமளித்தது...
'நான், திருமண வாழ்வில் சந்தோஷமாக இருந்தாலும், சில நேரங்களில், என் தங்கைகளை நினைத்து கவலைப்பட்டேன். ஒரு ஆண், தன் குடும்பத்திற்கு துணையாக இருப்பது போல், பெண்களால் இருக்க முடியாதா என்ற எண்ணம் என்னுள் இருந்தது.
'என் மனதில் தோன்றியது போலவே, என் மாமியாரும், ஒருநாள் என்னை அழைத்து, 'பெண்கள் திருமணத்திற்கு பின், உடன் பிறந்தோர், பெற்றோரை உதறி தள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருமண பந்தம் என்பது, உறவுகளுக்கு வலு சேர்க்க வேண்டுமே தவிர, உடைத்து விடக் கூடாது.
'நானும், ஒரு பெண் தான். என் பெற்றோரின் கடைசி காலம் வரை, நான் அவர்களுக்கு உதவியாக இருந்தேன். அதேபோல், நீயும் தாராளமாக உன் தங்கைகளின் படிப்பிற்கு உதவி செய்யலாம். உன் பெற்றோரையும் கவனித்து கொள்ளலாம்...' என்று, உருக்கமாக பேசினார். அதன் பின், என் மனபாரம் குறைந்து, என் குடும்பத்துக்கு உதவ ஆரம்பித்தேன்...' என்று, கண்ணீர் மல்க கூறினாள், தோழி.
நல்ல மாமியார் கிடைத்ததற்கு, தோழிக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தேன்.
குடும்ப சூழல் காரணமாக, நிறைய பெண்கள், ஆசைகளை துறந்து, முதிர் கன்னியாக வாழ்கின்றனர். அதைப் போக்க, பெண்ணே பெண்ணுக்கு துணையாக இருக்கலாமே!
ரா.ஆராதனா, திண்டுக்கல்.
