
அலாரம் அடித்த கையோடு, ரணகளம் தொடங்கி விட்டது.
''டேய் ரிஷி, என்னடா இன்னுமா துாங்கிகிட்டிருக்க? இப்பதானேடா பத்து நிமிஷம் முன்னாடி எழுப்பிட்டுப் போனேன்? மறுபடி குறட்டை விட தொடங்கிட்டியேடா. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லடா உனக்கு...'' என, கோபத்தில் ஆரம்பித்து, கட்டுப்படுத்த முடியாமல் கரகரப்பாக முடித்தாள், அம்மா, வினி.
''ஜஸ்ட் அஞ்சு நிமிஷம் கொடும்மா, கண்டிப்பா எழுந்துடறேன். நானே குளிச்சு, நானே சாப்பிடறேன். ப்ளீஸ்மா.''
ரிஷியின் கெஞ்சல் எதுவும், வினியிடம் எடுபடவில்லை.
''இன்னும் அஞ்சு நிமிஷமா? கும்பகர்ணன் மாதிரி துாங்கியிருக்கே. அப்பவும் திருப்தி இல்லையாடா? நாலாவது வகுப்புக்கு வந்தாச்சுடா நீ. இன்னிக்கு, 'மாத்ஸ் ஒலிம்பியாட், சயின்ஸ் ஒலிம்பியாட்' ரெண்டும் இருக்கு.
''மத்தியானம் கபடி, 'ரிகர்சல்' வகுப்புக்கு போகணும். வீட்டுப்பாடம், வண்டி வண்டியா, 'பெண்டிங்' எடுத்துட்டு வருவே. கொஞ்சமாவது அந்த கவலை எல்லாம் இருக்காடா உனக்கு?''
''அம்மா, ப்ளீஸ் மா. எல்லாம் நான் பார்த்துகிறேன்மா. மிஸ் கூட, உதவி பண்ணுவாங்கம்மா.''
''இப்படித்தான் சொல்லுவே. ஆனா, எல்லா பாடத்துலயும், 'க்ளாஸ் ஒர்க், ஹோம் ஒர்க் பெண்டிங்' வைப்பே. நீ எழுந்திரு மொதல்ல,'' என, மின்விசிறியை அணைத்தாள்; போர்வையைப் பிடுங்கினாள்; ஜன்னல் கதவுகளை சத்தத்துடன் திறந்தாள்.
''வினி, குழந்தையை கொஞ்சம், 'ப்ரீயா' விடேன். அவன் தான் சொல்றானே... தானே எல்லாம் பண்ணிக்கறதா. ஏன் இவ்வளவு, 'டென்ஷன்' ஆகுற?'' என்றார், வினியின் அம்மா, அகிலா.
''உனக்கு தெரியாதும்மா, இவனைப் பத்தி. நல்லா இலக்கணமா பேசுவான். ஆனா, செயல்ல எதுவும் இருக்காது. தார்க்குச்சி போட்டுகிட்டே இருக்கணும். அவங்கப்பா, ஆபீஸ் டூர்ன்னு வசதியா லக்னோ, புனேன்னு போயிடறாரு. நான் தானே வீடு, ஆபீஸ், படிப்புன்னு கெடந்து அல்லாட வேண்டியிருக்கு?''
''சமையலை நான் பாத்துக்கறேன், வினி. நீ போய், 'ரிலாக்சா' உன் ஆபீசுக்கு கிளம்பு, ரிஷியையும் கிளப்பு.''
''சரிம்மா. சிம்பிளா ரசமும், கீரையும், வாழைக்காய் பொரியலும் பண்ணிடும்மா. பணியாள் வள்ளி உனக்கு உதவி செய்வா. ரிஷியுடன் அரைமணி நேரம் உட்கார்றேன், நான். ஒலிம்பியாட் வேலை நெறைய இருக்கு.''
''ஒரு நிமிஷம், வினி.''
''என்னம்மா, அப்பா கவலை வந்துட்டதா? ஒரு மாசம் எப்படி சமாளிப்பார், நீ இல்லாமல்ன்னு யோசிக்கிறியா? கவலைப்படாதே அம்மா. அப்பா, தாசில்தார் வேலை பார்த்து, இப்ப தான் ஓய்வு பெற்றுள்ளார். வயல் வரப்புல நடைபயிற்சி, மலைக்கோவில் திருவிழா, ஏரிக்கரையில பசங்க விளையாடுற கிரிக்கெட்டுன்னு ஜாலியா இருப்பார்.''
''அட அது இல்லே. ரிஷி சின்னக் குழந்தை. 10 வயசு கூட முழுசா ஆகலே இன்னும். நல்ல புத்திசாலியா இருக்கிற பையன். நீ ரொம்ப கோபிக்கறே, வினி. ரெண்டு நாளா நானும் பாக்கறேனே...''
''அட போம்மா, நீதான் மெச்சிக்கணும். அவன் வயசு பசங்க எல்லாம் எவ்வளவு, 'ஸ்மார்ட்' தெரியுமா? காலைல பாட்மிண்டன், மாலைல கராத்தே, வார இறுதியில், டான்ஸ், கிரிக்கெட், மாரத்தான், பீச் வாக் என, அவ்வளவு பண்றாங்கம்மா.
''இவன் சோம்பேறிம்மா, அவங்களுடன் ஒப்பிடும் போது. இந்த ஒரு மாசம் எனக்கு, 'டெபுடேஷன்' மலேஷியால ஏன் போட்டாங்கன்னு இருக்கு. போய்த்தான் ஆகணும் என்பதால் தான், உன்னை வரவழைச்சேன். எப்படி நீ சமாளிக்கப் போறியோ தெரியலே,'' பெருமூச்சு விட்டாள், வினி.
யோசனையுடன் அடுக்களைக்கு போனார், அகிலா. வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். ரிஷியை பம்பரம் போல ஆட்டுவிக்கிறாள், வினி. ஒரு வகையில் பார்த்தால் இந்த கண்டிப்பு தேவை தான்.
இது, 'ஸ்மார்ட்' குழந்தைகள் காலம். நடக்கத் துவங்கும் போதே, நாட்டியம் ஆடுகின்றனர். பேச ஆரம்பிப்பதற்குள் பாட்டு பாடுகின்றனர். கணக்கு, அறிவியல் என, அரிச்சுவடிக்குள்ளே ஐன்ஸ்ட்டீன், நியூட்டன் என, மேற்கோள் காட்டுகின்றனர்.
ரிஷி, நான்காம் வகுப்பிலேயே, ஐந்து வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. பள்ளிக்கூடம் போய் வந்தவுடன், கிரிக்கெட், டான்ஸ், கராத்தே, ஒலிம்பியாட், கபடி என, அவ்வளவு வகுப்புகள்.
காலையில் அவனை எழுப்பும் போது, ஒரு ரகளை என்றால், மாலையில் அதை விட ரணகளம்.
'இன்னிக்கு ஸ்கூல்ல என்னடா ஆச்சு? குறள் மனப்பாடப் பகுதி கேட்டாங்களா? ஒழுங்கா சொன்னியா? அப்புறம் அந்த பறவைகள் பாடத்தில், 'பீக்ஸ்' பத்தி கேட்டாங்களா? என்னடா வீட்டுப்பாடம் இன்னிக்கு?' என, ஆரம்பித்து, அவன் புத்தகப்பையை கவிழ்த்து ஆராய்வாள், வினி.
இரவு துாங்கும் போதும் காட்சிகள் பெரிதாக மாறுவதில்லை.
'ரிஷி, இன்னும் உனக்கு நிறைய பொறுப்பு வரணும்டா. உன் மிஸ் எப்ப பேசினாலும், உன்னைப் பத்தி ஏதாவது புகார் சொல்றாங்க. ஏன்டா இப்படி இருக்கே?
'உனக்காகத் தானே நானும், அப்பாவும் இப்படி ஓடறோம்? புரிஞ்சு நடக்கணும்டா நீ. உன் வேலை என்ன, ஒழுங்கா படிப்பது மட்டும் தானே? அதை செய்யக் கூடாதா?' என, சலிப்பும், வருத்தமுமாக கொட்டுவாள், வினி.
நறுக்கிய கீரையின் மேல் பார்வை பதித்து, அப்படியே நின்றாள், அகிலா.
மலேசியா சென்ற வேலை முடிந்து, வந்து விட்டாள், வினி.
அம்மா இருந்ததால் வீட்டை பொறுப்பாக பார்த்துக் கொள்வார் என்பதால், வினியாலும் போன இடத்தில் மனக்கவலை இல்லாமல் வேலை பார்க்க முடிந்தது. ஆனாலும், மனதின் ஓரத்தில், ரிஷியைப் பற்றி உறுத்தல் இல்லாமல் இல்லை.
விளையாட்டு பையன், ரிஷி. எதிலும் அவனுக்கு ஆழ்ந்த ஆர்வம் இல்லை. தினம் தினம் போராட்டம் தான். பாவம் அம்மா அவனை எப்படி சமாளித்தாளோ என, கவலை தினமும் தோன்றியபடி தான் இருந்தது.
ஆனால், நேரில் கண்ட காட்சி...
தலைகீழாக மாறியிருந்தான், ரிஷி.
தானாக எழுந்து கொண்டான். புத்தகப்பையை எடுத்து வைத்து, ஒவ்வொரு பாடமாக எழுதியும், படித்தும் உள்ளே வைத்தான். விளையாட்டு முடிந்து, நேரத்திற்கு வீட்டுக்கு வந்தான். சிரித்த முகமாக உட்கார்ந்து சாப்பிட்டு, சிரித்துப் பேசி, கதை கேட்டு துாங்கப் போனான்.
திகைத்துப் போனாள், வினி. இதென்ன அதிசயம்? சுவரில் எறிந்த பந்து திரும்ப கைக்குதானே வரும்? சுவரைக் குடைந்தா போகும்?
அம்மாவின் கரம், ஆதரவாக தோளைத் தொட்டது.
''என்னம்மா நடந்தது? ரிஷியா இது? இவ்வளவு பொறுப்பா, உற்சாகமா இருக்கிறான்? எப்படிம்மா?'' என்றாள். தொண்டை வழுவழுத்தது.
புன்னகையுடன், ''பெரிதாக ஒண்ணுமில்லை, வினி. குழந்தையோட இருக்கறதே கொஞ்ச நேரம் தான். பெரும்பான்மையான நேரம் எல்லாம் ஸ்கூல், மைதானம், கராத்தே, கோச்சிங்ன்னு போய் விடுது. அதனால, அவன் வீட்டில் இருக்கிற நேரத்தில் என்னால் முடிந்தவரை அன்பாக இருந்தேன். அவ்வளவு தான்,'' என்றார், அகிலா.
''என்னம்மா சொல்றே?''
''காலைல அவனை துாக்கத்தில் இருந்து எழுப்பும் போது, பக்கத்தில் உக்காந்து முத்தமிட்டு, தலை கோதி சிரிச்சு, 'அழகான ஒரு புது நாள் நமக்காக விடிஞ்சிருக்கு கண்ணா'ன்னு சொன்னேன். 'என்னவெல்லாம் செஞ்சு இந்த நாளை இன்னும் அழகா மாத்தலாம்ன்னு நீயே யோசிச்சுக்கோ தங்கம்'ன்னு சொன்னேன்.
''ஸ்கூல் விட்டு அவன் வந்ததும், கையில் பழம், கொஞ்சம் இனிப்பு கொடுத்து, குழந்தையை மென்மையா அணைத்துக் கொண்டேன். 'பகல் முழுக்க உன்னை ரொம்ப, 'மிஸ்' பண்ணேன் கண்ணா. நீ வரைஞ்சியே ஒரு அணில் ஓவியம் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன் கண்ணா, நேரம் கிடைக்கும்போது இன்னொன்று வரைஞ்சு கொடு'ன்னு சொன்னேன்.
''ராத்திரி வேலை எல்லாம் முடிஞ்சு படுக்கைக்கு வந்தபோது, தெனாலிராமன் கதை, பீர்பால் கதைன்னு சொன்னேன். ஆர்வமா கேட்டான், குழந்தை.
''நம்முடைய நலம் என்பது, மத்தவங்க நலத்தையும் உள்ளடக்கியதா இருக்கணும்ன்னு, கதைகள் மூலம் சொல்லும் போது, குழந்தையோட முகத்தில் அவ்வளவு ஒளி தெரியுது, வினி. அடுத்த நாள் அவ்வளவு உற்சாகமா எழுகிறான், குழந்தை,'' எனக் கூறி முடித்தார், அகிலா.
வினி கண்களில் ஈரம் படர, அம்மாவைப் பார்த்தாள். குழந்தை வளர்ப்பு என்பது, ஜந்துவை வளர்ப்பது போல் அல்ல, அது ஒரு தலைமுறையை வளர்த்தெடுப்பது என, புதிதாகப் புரிந்து கொண்டதில், வந்த ஈரம் என்பது புரிந்தது.
வி. உஷா