PUBLISHED ON : செப் 01, 2024

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கீழடி வீதியில், வன்னி மரத்தடியில் வீற்றுள்ளார், விநாயகர். வன்னி விநாயகரை அர்ச்சித்தாலோ, சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.
மேலும், இந்த விநாயகரை சுற்றி வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை மற்றும் வன்னி என, ஒன்பது விருட்சங்கள் உள்ளன. இப்படி, ஒன்பது விருட்சங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம்.
***
முதன்முதலாக விநாயகருக்கு மோதகம் படைத்து, அவரது அருளைப் பெற்ற பெண்மணி, வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி.
ஒருமுறை வசிஷ்ட மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று, அவரது ஆசிரமத்திற்கு எழுந்தருளினார், விநாயகர். அவருக்கு ஏற்ற புதிய நிவேதனம் ஒன்றை செய்ய விரும்பினாள், வசிஷ்டரின் மனைவி அருந்ததி.
அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார், விநாயகர். அண்டத்தை உணர்த்த மாவால் செப்பு என்ற மேல் பகுதியை செய்தாள், அருந்ததி. அண்டத்தில் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரை குறிக்கும் வகையில், இனிப்பான பூரணத்தை மாவுக்குள் வைத்தாள். அதுவே, மோதகம் எனும் கொழுக்கட்டை.
அருந்ததி உருவாக்கிய புதிய மோதகத்தை, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாராம், விநாயகர்.
***
கும்பகோணம், நாகேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகருக்கு, ஜுர பிள்ளையார் என்று பெயர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த விநாயகரை வணங்கினால் குணமடைவர். இந்த பிள்ளையாருக்கு நைவேத்தியமாக மிளகு ரசம் தான் படைக்கப்படுகிறது.
***
தஞ்சை மாவட்டம், பாபநாசம் சீனிவாச பெருமாள் கோவில் அருகே, சிவசக்தி காளியம்மன் கோவிலில், சர்ப்ப விநாயகர் சன்னிதி உள்ளது. விநாயகரின் தலைக்கு மேல், ஐந்து தலைகளைப் படம் விரித்து, குடையாக அமைத்துள்ளான், ஆதிசேஷன்.
மேலும், 10 கரங்களுடன், இரு கரங்களில் கங்கணமாக, இரு சர்ப்பங்கள். திருமார்பில் பூணுாலாக ஒரு சர்ப்பம். இடையில் கச்சமாக ஒரு சர்ப்பமாக, ஐந்து சர்ப்பங்கள் அணிகலனாகி, பஞ்ச சர்ப்ப விநாயகராகத் திகழ்கிறார்.
இந்த சர்ப்ப விநாயகரை எருக்கம் பூ, மலைவேம்பு, சிறிய நங்கை, கச்சகுமிட்டி, பேய் புடலை இதிலே ஏதாவது ஒன்றால், அர்ச்சனை செய்து வழிபட்டால், விஷ ஜந்துக்களின் தொல்லை இருக்காது. ராகு, கேதுவாலும் எந்த இடையூறும் வராது
***
திருநெல்வேலி மாவட்டம், கருவேலங்குளம் என்னும் ஊரில் உள்ள அம்மன் கோவில் மகா மண்டபத்தில் இருக்கும் விநாயகர் உருவம் கனமற்றது. இவரை துாக்கினால் கீழே உள்ள கதவு தானாக திறந்து கொள்ளும். அங்கே ஒரு பெரிய அறை காணப்படும். இது ஒளிந்து கொள்ள ஏற்ற இடமாக உள்ளது.
ஒளிந்திருப்பவர்களை பாதுகாக்கும் காவலராக இந்த விநாயகர் விளங்குகிறார். இப்பகுதியில் மன்னர்கள் ஓயாமல் போரிட்டுக் கொண்டிருந்தபோது, பெண்கள் ஒளிந்து கொள்ள வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாம்.