/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: 'அட்சரம் பிசகாமல்...' - எப்படி பிறந்தது இந்த சொல்?
/
விசேஷம் இது வித்தியாசம்: 'அட்சரம் பிசகாமல்...' - எப்படி பிறந்தது இந்த சொல்?
விசேஷம் இது வித்தியாசம்: 'அட்சரம் பிசகாமல்...' - எப்படி பிறந்தது இந்த சொல்?
விசேஷம் இது வித்தியாசம்: 'அட்சரம் பிசகாமல்...' - எப்படி பிறந்தது இந்த சொல்?
PUBLISHED ON : செப் 08, 2024

செப்., 8 - எழுத்தறிவு தினம்!
எண்ணும், எழுத்தும் கண்ணெனத் தகும் என்பார், அவ்வையார். எழுத்துக்கு இன்னொரு, சொல் அட்சரம். அட்சரம் பிசகாமல் எழுத வேண்டும், பேச வேண்டும் என்று சொல்வர். முக்கியமாக, கணக்கு வழக்குகளில், அட்சரம் பிசகக் கூடாது.
'அட்சரம் பிசகாமல்' என்ற இந்த சொல் தோன்றக் காரணமானவர் யார் தெரியுமா? சிவபெருமான் தான். இதனால், இவருக்கு எழுத்தறி நாதர் என்ற சிறப்பு பெயரே இருக்கிறது. எல்லாவற்றையும் அறிந்தவர் என்பது, இதன் பொருள்.
இவர், கும்பகோணம் அருகிலுள்ள இன்னம்பூரில் அருள்பாலிக்கிறார். உலகின் முதல் தமிழ் இலக்கண நுால், அகத்தியம். இதை எழுதிய அகத்தியருக்கு இலக்கணத்தைப் போதித்தவரே, எழுத்தறி நாதர் தான்.
சோழராஜா ஒருவரின் கணக்கராக சுதன்மன் என்பவர் பணியாற்றினார். கணக்கு, வழக்கை அட்சர சுத்தமாக எழுதுவார். ஒருமுறை, கணக்கை எடுத்து வரச்சொன்னார், ராஜா. கணக்கைப் பார்த்ததும், ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சரியான கணக்கை மீண்டும் கொண்டு வர உத்தரவிட்டார்.
'இத்தனை நாளும் என் கணக்கில் சந்தேகம் வராத ராஜாவுக்கு, இம்முறை சந்தேகம் வந்து விட்டதே. சரியான கணக்கை காட்டிய என் மீது பெரும் பழி விழுந்து விட்டதே...' என புலம்பிய சுதன்மன், இன்னம்பூர் வந்து, சிவபெருமானை வணங்கினார்.
சுதன்மனின் நேர்மை பற்றி அறிவார், சிவன். அவரது பழியைப் போக்க முடிவெடுத்தார். எனவே, அவரே சுதன்மனைப் போல் உருமாறி, ராஜாவிடம் சென்றார்.
'மன்னா! இதைப் பாருங்கள், அதே கணக்கு தான். எந்த மாற்றமும் இல்லை. சற்று, ஆழ்ந்து பார்த்தால், உண்மை தெரியும்...' என்றார்.
ராஜாவும் பார்த்தார்.
'ஆம்... அட்சர சுத்தமாகத்தான் இருக்கிறது. ஏதோ, நினைவில் பார்த்திருப்பேன் போல் தோன்றுகிறது. சரி, மனதில் ஏதும் வைத்துக் கொள்ளாதீரும்...' என்று சொல்லி அனுப்பி விட்டார்.
இதையறியாத சுதன்மன், மறுநாள் கணக்கு ஏடுகளுடன் சென்றார்.
'நேற்று இரவே தான், கணக்கை காட்டி விட்டீரே! மீண்டும் ஏன் வந்தீர்?' என்றதும் தான், சிவனே, சுதன்மன் வேடத்தில் வந்த உண்மை புரிந்தது. சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டார், ராஜா.
இதற்கு பிறகே, அட்சரம் பிசகாமல் என்ற சொல் பிறந்தது.
இக்கோவிலில் அம்பாள்கள், திருமணக்கோலத்தில் நித்யகல்யாணி என்ற பெயரிலும், தவக் கோலத்தில் சுகந்த குந்தளாம்பிகை என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். குடும்ப வாழ்வு வேண்டுவோர் கல்யாணியையும், தனித்து வாழ விரும்பும் பெண்கள், சுகந்தாவையும் வணங்குவர்.
பேசத் தயங்கும் குழந்தைகள், பள்ளியில் முதன்முறையாக சேர்பவர்கள், எழுத்துப்பயிற்சி எடுப்பர். கும்பகோணம் -சுவாமிமலை சாலையில், புளியஞ்சேரி விலக்கு வழியாக, 7 கி.மீ., சென்றால், கோவிலை அடையலாம்.
எழுத்தறிவு தினத்தில், அட்சரம் பிசகாமல் பேசவும், எழுதவும் வேண்டுமென, எழுத்தறிநாதரிடம் வேண்டுவோம்.
தி. செல்லப்பா