
வ.இளங்கோவன் எழுதிய, 'வள்ளல் திலகம் எம்.ஜி.ஆர்.,' நுாலிலிருந்து:
எம்.ஜி.ஆர்., மீது, நரிக்குறவர்களுக்கு அளவுக்கு மீறிய பற்றுண்டு. பலமுறை தன்னை காண வந்த நரிக்குறவர்களிடம், அன்பாக பேசி, பல உதவிகள் செய்துள்ளார், எம்.ஜி.ஆர்.,
நரிக்குறவர்கள் எந்த அளவுக்கு, எம்.ஜி.ஆர்., மீது பற்று வைத்திருந்தனர், என்பதற்கு ஒரு உதாரணம்...
ஒரு படத்தில், வில்லன் நம்பியார், எம்.ஜி.ஆரை கொல்ல துப்பாக்கியுடன் அலைவார். அவர், எம்.ஜி.ஆரை சுட முற்படும் காட்சியின்போது, தியேட்டரில், 'டுமீல்' என்ற சத்தம் கேட்டது.
காரணம், தங்கள் இதய தெய்வத்தை, கொல்லத் துடிக்கும், நம்பியாரை, நரிக்குறவர் ஒருவரின் துப்பாக்கியால் திரையை நோக்கி சுட்ட சத்தம் தான் அது.
அது திரை, நம்பியாரும், எம்.ஜி.ஆரும் நடிக்கின்றனர் என்பதை நரிக்குறவர் அறியாமல், தலைவரை காப்பாற்றத் துடித்த துடிப்பின் விளைவு இது.
கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான, பாலதண்டாயுதம், எம்.ஜி.ஆரை, அரசியல் ரீதியாக தாக்கி பேசி வந்தார். அவர், தன் தலைவர் ஜீவானந்தத்திற்கு, சிலை எடுக்க முடிவு செய்து, பலரிடம் பணம் வசூல் செய்தார்.
தான் தாக்கி பேசும், எம்.ஜி.ஆரிடமும், நிதி கேட்க கூச்சம் என்றாலும், அவரிடம் சென்று, 'தலைவர், ஜீவாவுக்கு சிலை வைக்க நிதி வேண்டும்...' என கேட்டார், பாலதண்டாயுதம்.
'சிலை வைக்க, எவ்வளவு செலவாகுமோ, அதுவே என் நிதி...' என்று கூறி, தேவையான பணத்தை உடனடியாக கொடுத்தார், எம்.ஜி.ஆர்., இன்ப அதிர்ச்சி அடைந்தார், பாலதண்டாயுதம்.
திரைப்பட துறையில், பல விஷயங்களில் முன்னோடியாக இருந்துள்ளார், எம்.ஜி.ஆர்., அதில் சில...
* கடந்த, 1965ல், அப்போதைய பிரதமர், லால் பகதுார் சாஸ்திரியை கொண்டு, அந்தமானில், 'பணத்தோட்டம் எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றம்' திறக்கப்பட்டதாம். வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை இது.
* சரண்சிங், பிரதமராக இருந்த போது, பாலா பழனுார், சத்தியவாணி முத்து ஆகியோரை, மத்திய அமைச்சராக்கினார், எம்.ஜி.ஆர்.,
ஒரு மாநில கட்சியை சேர்ந்தவர்களை, முதன் முதலில் மத்திய அமைச்சராக்கிய பெருமை, எம்.ஜி.ஆரையே சாரும்.
* லண்டன் மாநகர் திரையரங்கு ஒன்றில், எட்டு வாரங்கள் ஓடிய ஒரே தமிழ் படம், நாடோடி மன்னன்.
* மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிக்சர்ஸ், ஏவி.எம்., ஜெமினி மற்றும் சத்யா மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த, முதல் வண்ண தமிழ் படங்களில் நடித்தவர், எம்.ஜி.ஆர்.,
* ஒரு மாநில முதல்வர் எம்.ஜி.ஆர்., மறைவிற்கு, இந்திய அரசு தன் இரங்கலை தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்தது. வேறு யாருக்கும் இப்படி செய்யவில்லை.
* எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, சென்னை, கிண்டி ரயில் நிலையம் அருகே, சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. அதை திறக்க வந்தார், எம்.ஜி.ஆர்.,
ரிப்பன் வெட்டி, எம்.ஜி.ஆர்., திறப்பார் என்று, மற்றவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, சுரங்கப் பாதையை கட்டிய தலைமை மேஸ்திரி ஏழுமலையைக் கொண்டு திறக்க வைத்தார்.
'ஒரு குழந்தை முன், 10 நடிகர்களின் படங்களை போட்டால், அது, எம்.ஜி.ஆர்., படத்தை தான் எடுக்கும். ஏனென்றால், அவரது சிரிப்பில் உண்மை இருக்கிறது...' என்று கூறினார், தமிழ்வாணன்.
- நடுத்தெரு நாராயணன்