sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குற்றம் குற்றமே! (4)

/

குற்றம் குற்றமே! (4)

குற்றம் குற்றமே! (4)

குற்றம் குற்றமே! (4)


PUBLISHED ON : டிச 24, 2023

Google News

PUBLISHED ON : டிச 24, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: 'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தில், தனக்கு வேலை கிடைத்திருப்பதையும், மாத சம்பளமாக, மூன்று லட்ச ரூபாய் கிடைக்கும் என்றும், தன் அம்மா மற்றும் சகோதரிகளிடம் தெரிவித்தான், தனஞ்ஜெயன். இதை நம்பாமல், கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர், அவன் குடும்பத்தினர்.

அப்போது, தனஞ்ஜெயனுக்கு போன் செய்கிறான், நிறுவன பங்குதாரரின் மகன், விவேக். கார்த்திகா கூறியபடி, ஒரு கோடி ரூபாயை திருப்பதி உண்டியலில் போடக் கூடாது என்றும், கார்த்திகாவின் அப்பா ஒரு ஏமாற்று பேர்வழி என்றும் கூறி, அந்த வேலையிலிருந்து விலகச் சொல்கிறான், விவேக்.

சிணுங்கிய போனில் பேசியது, கார்த்திகா தான்.

''ஹலோ, மிஸ்டர் தனா... நான் கார்த்திகா...

''நாளைக்கு விடிகாலை, 2:00 மணிக்கெல்லாம், திருப்பதிக்கு கிளம்பணும்ன்னு சொன்னீங்கள்ல?''

''எஸ் மேடம்!''

''அதுல எந்த மாற்றமும் இல்லையே?''

''ஏன் மேடம் இப்படி கேட்கறீங்க?''

''இல்ல, 'கன்பார்ம்' பண்ணிக்கத்தான் கேட்டேன். உங்க வீட்டு முகவரியை, 'கூகுள்' பண்ணிடுங்க. நான், என் கார்லயே வந்துடறேன். ஆமாம், நீங்க கார் ஓட்டுவீங்க தானே?''

''ஓட்டுவேன், மேடம்... எந்த வேலையும் கிடைக்கலேன்னா, 'ஓலா, ஊபர்'ன்னு, டாக்சியாவது ஓட்டுவோம்னே கத்துக்கிட்டேன்.''

''குட்... நீங்களும், நானும் தான் கார் ஓட்டப் போறோம். என் டிரைவருக்கு கூட, நாம திருப்பதி போகப் போறது தெரியாது.''

''புரியுது மேடம். நீங்க இப்ப பேசறதால சொல்றேன். நீங்க குறிப்பிட்ட அந்த தாமோதரனோட மகன் விவேக், கொஞ்சம் முன்ன, போன் பண்ணினான்.''

''ஓ... மோப்பம் பிடிச்சு, பேசவும் செய்துட்டானா?''

''ஆமாம் மேடம்... நீங்க சொன்ன மாதிரியே எனக்கு விலையும் வெச்சான். யோசிச்சு சொல்றேன்னு அவனை கொஞ்சம் காக்க வெச்சிருக்கேன்.''

''ஓ... அப்ப நீங்க, அவனை, 'கன்சிடர்' பண்ண போறீங்களா?''

''நிச்சயமா இல்லை மேடம். எத்தனை கோடி கொடுத்தாலும் அவன் மாதிரி ஒரு கேரக்டர்கிட்ட என்னால ஒத்துப் போக முடியாது. நல்லவேளை, நாம திருப்பதி போக போட்ட, 'ப்ளான்' அவனுக்கு தெரியல. அதைப் பற்றி அவன் எதுவும் பேசல. ஆனாலும், என் போன் நம்பரை கண்டுபிடிச்சு, அவன் பேசினதெல்லாம் நிச்சயமா அதிசயம் தான்.''

''இன்டர்வியூ அறையில் நாம பேசிக்கிட்ட விஷயம், அவனுக்கு போயிருக்குன்னா, அது எப்படின்னு தெரியலியே?''

''அதுமட்டுமில்ல மேடம்... என்னை ஒருத்தன் கவனிச்சுக்கிட்டே இருக்கிறதாவும் சொன்னான். இப்ப நான் எங்க வீட்டு வாசல் படில நின்னு பேசிக்கிட்டிருக்கேன். என்னை யாரும் கவனிக்கிற மாதிரி தெரியல.''

''பார்த்தீங்களா இதான் அவனோட நரித்தனம். இப்ப கூட ஒண்ணும் கெட்டுடல... இந்த வேலை வேண்டாம்ன்னு நீங்க நினைச்சா விட்றுங்க. எங்களால நீங்களோ, உங்க குடும்பமோ கஷ்டப்படக் கூடாது...'' என்றாள், கார்த்திகா.

அடுத்து என்ன பேசுவது என்று, யோசனையுடன் நிமிர்ந்தவனை, கண் இமைக்க மறந்து, வெறித்துக் கொண்டிருந்தது, அவன் குடும்பம்.

அதுவும் அவனை சற்று பாதித்தது. இருந்தும் சுதாரித்தபடி, ''எப்ப எங்க குடும்பம் மேல இவ்வளவு அக்கறையா பேசினீங்களோ, அப்பவே உங்களுக்கு எல்லா விதத்துலயும் துணையா இருக்கறதுன்னு நான் முடிவு செய்துட்டேன், மேடம்.

''இரவில், உங்க கார்ல, என் வீட்டுக்கு வரவேண்டாம். சத்யம் தியேட்டர் வாசலுக்கு சரியா, 1:30 மணிக்கு வந்துடுங்க. நான், 'செகண்ட் ஷோ' பார்த்துட்டு வெளிய வர்ற மாதிரி வந்து, உங்க கார்ல ஏறிடறேன்.

''பணத்தை எடுத்து வரும்போது கவனமா கொண்டு வாங்க. வழியில போலீஸ் சோதனை செய்து, காரணம் கேட்டா, ஆதாரங்களைக் காட்டறதுக்கு தயாரா இருங்க. மிச்சத்த நாம கார்ல பேசிக்கலாம்,'' என்றபடியே, அழைப்பை துண்டித்தான்.

தனஞ்ஜெயனை வெறித்தபடி இருந்தாள், அம்மா.

''என்ன தனா... யார் கூட அப்படி ஒரு பேச்சு?'' என்றாள், அக்கா சாந்தி.

''வேலையில் சேர்ந்துட்டேன்ல... ஜே.எம்.டி.,கிட்ட இருந்து தான்.''

''அதை வீட்ல உட்கார்ந்தே பேசலாமே... இப்படியா பனியனோட தெரு பூரா பார்க்கிற மாதிரி நடந்துகிட்டே பேசுவ?''

''ஆபீஸ் விஷயம்... என்கிட்ட, 'பர்சனலா' பேச விரும்பினாங்க.''

''வேலையில இன்னிக்கு தான் சேர்ந்திருக்க... அதுக்குள்ள, 'பர்சனலா' பேசற அளவுக்கு விஷயமிருக்கு?''

''எதுக்கு சாந்தி, இப்படி வளைச்சு வளைச்சு கேட்கற. ஆபீஸ் விஷயம்னா விட்டுட்டு உன் வேலையை பார்க்காம என்னை ஏன் சந்தேகமா பார்க்கறீங்க?''

''நல்லா கேட்ட... அப்பளமும், ஊறுகாயும் வித்துகிட்டிருந்த ஒருத்தனுக்கு, மூன்று லட்ச ரூபாய் சம்பளம், கார், பங்களான்னா... யாருக்கு தான் சந்தேகம் வராது? இதுல, முதல் நாள் வீட்டுக்குள்ள நுழைஞ்சு வேலை விஷயத்தை பேசும்போதே போன் வேற...

''போன் வரவும், ஏதேதோ பேசிக்கிட்டு நீ பாட்டுக்கு மேல் சட்டை கூட போடாம தெருவில் இறங்கிட்ட. பயமா இருக்குப்பா எங்களுக்கு...'' அதுவரை பேசாமலிருந்த அம்மா, தன் உணர்வை தழுதழுக்க காட்டினாள்.

அம்மாவின் கேள்விக்கு பதில் கூற முடியாதபடி, மவுனமாய் சில விநாடிகள் வெறித்தான், தனஞ்ஜெயன்.

''பேசுடா... ஏன் மவுனமாயிட்ட?'' துாண்டினாள், அக்கா சாந்தி.

''இதோ பாருங்க... இது, என் வரையில ரொம்ப நல்ல, அதே சமயம், கொஞ்சம் கஷ்டமான வேலை. நான் கஷ்டப்படறதுன்னு முடிவு செய்துட்டேன். எனக்கெல்லாம் நல்ல சம்பளத்துல ஒரு அரசாங்க வேலையோ, இல்லை வேற வேலையோ கிடைக்கிறது கஷ்டம்...

''கஷ்டம்கிறதை விட, அதெல்லாம் கிடைக்கவே கிடைக்காதுன்னும் சொல்லலாம். மீறி தனியார் வேலை கிடைச்சாலும், 20 ஆயிரம் சம்பளம் கிடைச்சா, அது ரொம்ப அதிகம்.

''இன்னிக்கு சுவருக்கு சுண்ணாம்பு அடிக்கிறவன் கூட, 1,000 ரூபாய் சம்பளமில்லாம வேலை செய்யறதில்லை. அதுக்காக, நான் சுண்ணாம்பெல்லாம் அடிக்க முடியாது. நான், நாட்டு நடப்ப சொன்னேன்,'' என்றான்.

''அண்ணே... பார்த்துண்ணே...'' என்று ஸ்ருதியும், கீர்த்தியும் சொன்னது மட்டும் அவனை என்னவோ செய்தது.

நள்ளிரவு, 1:30 மணி, சத்யம் தியேட்டர்...

தனஞ்ஜெயன் மொபைல் போன் சிணுங்கியது.

''நான் வெளியில் தான் நிற்கிறேன். ஒயிட் கலர் பி.எம்.டபிள்யூ கார்...'' என்றாள், கார்த்திகா.

திரையில், க்ளைமேக்ஸ் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், புறப்பட்டு வெளியில் வந்தான், தனஞ்ஜெயன்.

கார் காத்திருக்க, பின் சீட்டில் ஏறப் போனவனை, முன் சீட்டுக்கு அழைத்தாள், கார்த்திகா.

''நான், 'டிரைவ்' பண்ணட்டுமா?'' என்று கேட்டு, அவளை பக்கத்து சீட்டுக்கு நகர சொன்னான்.

கார் புறப்பட்டது. 60 லட்ச ரூபாய் விலையுள்ள கார், வெண்ணெயாய் வழுக்கியது.

''ரொம்ப ஸ்மூத்தா இருக்கு,'' என்றான், தனஞ்ஜெயன்.

''இதுக்கு முன் ஓட்டினதில்லையா?'' என்றாள், கார்த்திகா.

''பார்த்ததே இல்லை... ஐ மீன் உள்ளுக்குள்ள ஏறி, காரை பார்த்ததில்ல. அதை சொன்னேன்,'' என்றான்.

அவள் மென்மையாக சிரித்தாள்.

காரின் முன் கண்ணாடி வழியாக, பின்னால் யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்தான்.

''என்ன, யாராவது பின்னாடி வர்றாங்களா என்ற எச்சரிக்கையா?''

''ஆமாம். நல்லவேளை, யாரும் வர்ற மாதிரி தெரியல.''

''ரொம்ப தேங்க்ஸ்.''

''எதுக்கு மேடம்?''

''இந்த வேலையை ஒத்துக்கிட்டதுக்கு... இப்ப இப்படி, 'ரிஸ்க்' எடுக்கறதுக்கு.''

''இருக்கட்டும் மேடம்... நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.''

''அப்படியா!''

''ஆமா... வேலைக்காக மட்டுமில்ல, என்னை நம்பி இந்த ராத்திரியில, ஒரு கோடி ரூபாயோட தனியா வந்திருக்கீங்களே!''

''சொன்னா கோவிச்சுக்காதீங்க, என்னை தப்பாவும் புரிஞ்சுக்காதீங்க. உங்களை, 'செலக்ட்' பண்ணின மறு நிமிஷமே, எங்களுக்கு நெருக்கமான, 'பிரைவேட் டிடெக்டிவ்' மூலமா உங்களை பற்றி விசாரிக்க சொல்லிட்டேன்.

''நீங்க சொன்ன மாதிரியே மூன்று சிஸ்டர்ஸ், ஒரு அம்மா. அக்கா, தையல் மிஷினே கதின்னு இருக்கறவங்க. இரண்டு, 'ட்வின் சிஸ்டர்சும்' நல்லா பாடுவாங்க, ஆடுவாங்க, ஏன் மராத்தான்ல ஓடக்கூட செய்வாங்க.

''அம்மாவும் கைராசியானவங்க. நீங்க, எம்.ஏ., சைக்காலஜில மெரிட் ஸ்டூடண்ட். தெருவுல உங்க குடும்பத்துக்கு ரொம்ப நல்ல பேர். என்ன, எல்லாத்தையும் சரியா சொல்லிட்டேனா?'' என்று கேட்டாள்.

பதிலுக்கு சில வினாடிகள், அவளை ஊன்றியவன், டிரைவ் செய்தபடியே, ''பரவாயில்ல மேடம்... உங்ககிட்டயும், 'அவார்நெஸ்' இருக்கு. 'டெக்னாலஜி'ய நல்லா உபயோகபடுத்திக்கிறீங்க,'' என்றான்.

''நான் சொன்னதை கேட்டு, கோபம் வரலியா?''

''இதுல கோபப்பட என்ன இருக்கு... ஆனா, உங்ககிட்ட நான் கேட்க நிறைய கேள்விகள் இருக்கு.''

''கேளுங்க. காருக்குள்ள நாம மட்டும் தான் இருக்கோம். அந்த விவேக், நிச்சயம் எங்கப்பா பற்றி சொல்லியிருப்பான். அதனால, உங்ககிட்ட கேள்விகள் நிறைய இருக்கலாம்.''

''ஆமாம், உங்கப்பாவை பற்றி துளி கூட பொருத்தமில்லாதபடி என்னென்னவோ சொன்னான்.''

''என்ன, என் அப்பாவை திருடன்னு சொன்னானா?''

''ஆமாம் மேடம்... அதுமட்டுமில்ல, திருப்பதி உண்டியல் திருட்டு தான், அவரோட ஆரம்பம்ன்னும் சொன்னான்.''

தனஞ்ஜெயன் அந்த உண்டியல் விஷயத்தை தொடவும், அதுவரை இயல்பாக இருந்த கார்த்திகாவின் விழிகளிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது.

''ஓ ஐயம் சாரி... நான் அதை நம்பல மேடம். அவன் அப்படி சொன்னான்னு சொல்றதுக்காக தான், உங்ககிட்ட சொன்னேன்.''

சாலையில் கார் சீரான வேகத்தில் சென்றபடி இருக்க, கண்ணீரை துடைத்தபடி, ''இன்னும் என்னவெல்லாம் சொன்னான்?'' கேட்டாள், கார்த்திகா.

''அவ்வளவு தான் மேடம்... நீங்க அழாதீங்க, எனக்கு கஷ்டமா இருக்கு.''

''அழுகை எனக்கு புதுசு கிடையாது, மிஸ்டர் தனஞ்ஜெயன். நான் யாருக்கும் தெரியாம அழுதுகிட்டிருக்கிற ஒருத்தி தான். என்ன பாவம் செய்தேனோ, எனக்கு இப்படி ஒரு அப்பா...'' என்றாள்.

''என்ன மேடம் சொல்றீங்க... உங்க அப்பா, ஒரு சிலை கடத்தல் பேர் வழி, 'அண்டர்கிரவுண்ட் பிசினஸ்' பண்றவர்ன்னு, அவன் சொன்னதெல்லாம் உண்மையா?'' என்றான்.

''ஆமாம். 100 சதவீதம் உண்மை,'' என்றாள், கார்த்திகா.

சொன்ன மறு நொடி, காரின் வேகம் மெல்ல குறைந்து, ரெட்ஹில்ஸ் சாலையின் ஒரு ஓரத்தில் நின்றது.

''என்ன தனஞ்ஜெயன்... நான் சொன்னதை கேட்டு பயமும், தயக்கமும் உருவாயிடுச்சா?''

''இந்த உண்மையை எப்படி மேடம் சாதாரணமா எடுத்துக்க முடியும்?''

''சரி... காரை திருப்புங்க, உங்களை உங்க வீட்டுல விட்டுட்டு போறேன். நீங்க, உங்க வழியில போங்க. நான், என் வழியில போறேன்,'' என்றாள்.

''மேடம் ப்ளீஸ்...''

''வேண்டாம் தனா. நீங்க ஏழையா இருந்தாலும், நேர்மையில பெரிய பணக்காரரா இருக்கறவர். எங்க அப்பா, ஒரு கிரிமினல். நான், கிரிமினலோட மகள். எங்க தொடர்பும், நாங்க கொடுக்கிற வேலைகளும் ஆபத்தானதும் கூட... அதனால, நீங்க உங்க வழியில போறது தான் சரி,'' என்றாள்.

''கிரிமினலோட பொண்ணுங்கறீங்க... ஆனா, எல்லாத்தையும் மனம் விட்டு ஒப்புக்கறீங்க. கண்ணீரும் விடறீங்க. எனக்கு, அதுதான் ஆச்சரியமா இருக்கு,'' என்றான்.

''ப்ளீஸ், காரை எடுங்க. யாராவது பார்த்தாலோ, 'ரெய்டு' வர்ற போலீஸ் பார்த்தாலோ வில்லங்கம். பின் சீட்டுல ஒரு கோடி ரூபாய், சூட்கேஸ்ல இருக்கு,'' என்றாள்.

காரை 'ஸ்டார்ட்' செய்து, திரும்பாமல், தொடர்ந்து பெரியபாளையம் செல்லும் சாலை நோக்கி செலுத்தினான்.

''காரை திருப்பாம நேரா போறீங்களே?'' என்றாள்.

''நாம, திருப்பதி போறோம் மேடம்... உண்டியல்ல பணத்தை போடறோம். அன்னிக்கு உண்டியல்ல திருடினதுக்கு பரிகாரம் தானே, இந்த ஒரு கோடி ரூபாய்?'' மிக சரியாக கேட்டான், தனஞ்ஜெயன்.

அவனை வியப்போடு பார்த்தாள், கார்த்திகா.

அந்த நான்கு வழி சாலையின் ஆள் அரவமற்ற ஓரிடத்தில், போலீஸ் ஜீப்பும், சில போலீஸ்காரர்களும் கண்ணில் பட்டனர்.

''ஐயோ போலீஸ்...'' என்றாள்.

''கவலைப்படாதீங்க... பணத்தை பற்றி கேட்டா, உண்டியல்ல போடத்தான்னு சொல்வோம். என் மொபைல் போன்ல, திருப்பதி தேவஸ்தான எக்சிகியூடிவ் ஆபீசருக்கு போட்ட மெயிலும், அவர்கிட்ட இருந்து வந்த பதிலும் இருக்கு. நம்பள இவங்க தடுத்து நிறுத்த முடியாது,'' என்றபடி, காரை, ஜீப்புக்கு பல அடிகள் முன் நிறுத்தினான், தனஞ்ஜெயன்.



— தொடரும்- இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us