
நீங்கள் காசிக்குப் போய் கங்கையில் நீராடி, 'அப்பா... இதோடு விட்டது பாவம்...' என்று மன நிம்மதியாக வந்து அமர்ந்திருப்பீர்கள். ஆனால், நீங்கள் தொலைத்த பாவம் அழியுமா என்றால் அழியாது. அதை, சுமந்து கொண்டிருக்கிறாள், கங்கை.
இதுபோல, உலகிலுள்ள எல்லா உயிர்களும் செய்த பாவத்தையும் சுமந்தால், அவளுக்கு உடல் வலிக்காதா என்ன...
இப்படித்தான் ஒருமுறை, பாவங்களெல்லாம் கரிய நிறமாக மாறி, அவள் ஆளே அடையாளம் தெரியாமல், சிவனிடம் போய், 'இந்தச் சுமையை தாங்க முடியவில்லை...' என்று, அழுதாள்.
'நீ, தெற்கே செல். அங்கே, லட்சுமியை அடைய விரும்பிய விஷ்ணு வழிபட்ட, என் வடிவம் வாஞ்சிநாதர் என்ற பெயரில் இருக்கிறது. அடைய விரும்புவதை, வாஞ்சித்தல் என்பர்.
'எனவே, அவ்வூருக்கு, ஸ்ரீ வாஞ்சியம் என, பெயர். ஸ்ரீ என்றால், மகாலட்சுமி. மகாலட்சுமியை அடைய விரும்பி, விஷ்ணு வழிபட்ட தலம் என, பொருள். அங்குள்ள தீர்த்தம் சக்தி வாய்ந்தது. அந்த தீர்த்தத்திலேயே மறைவாக தங்கி விடு.
'எனினும், இங்கு வரும் பக்தர்களுக்காக, உன் ஆயிரம் மடங்கு சக்தியில், ஒரு மடங்கை மட்டும் விட்டு செல். மீதி, 999 மடங்கும் அங்கேயே இருக்கட்டும். இனி அந்த தீர்த்தம், குப்த கங்கை எனப்படும்...' என்றார், சிவன்.
குப்தம் என்ற சொல்லுக்கு, மறைவாக அல்லது ரகசியம் என, பொருள். அதனால் தான், எமதர்மனின் கணக்குப்பிள்ளைக்கு, சித்திர குப்தன் என்ற பெயர் ஏற்பட்டது. குப்தன் என்றால், மறைவாக, ரகசியமாக செய்யும் பாவங்களைக் கூட விடாமல் கணக்கெடுப்பவன், என பொருள்.
கங்காதேவி மறைந்துள்ள தீர்த்தம் என்பதால், இது, குப்த கங்கை ஆயிற்று. இவ்வளவு மகிமையுள்ள இந்த தீர்த்தத்தில் நீராட, சிவனுக்கே அவசரம் வந்து விட்டதாம்.
பொதுவாக, கோவில்களில், பிரம்மோற்சவம் எனும் ஆண்டு திருவிழா நடக்கும் போது, கடைசி நாள் தான், சுவாமியை நீராட்டும் தீர்த்தவாரி நடத்துவர். ஆனால், இங்கு மட்டும், மாசி மக திருவிழாவின், இரண்டாம் நாளே, தீர்த்தவாரி நடத்தப்பட்டு விடும்.
சக்தி வாய்ந்த இந்த தீர்த்தத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இவ்வாறு செய்யப்படுகிறது. குப்த கங்கையில், கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடுவது விசேஷம்.
இந்த தீர்த்தக்கரையின் தென்புறம், எமதர்மர் மற்றும் சித்திர குப்தருக்கு சன்னிதி உள்ளது விசேஷம். உலகிலேயே எமனை வழிபட்ட பின், சிவனை வழிபடும் தலம் இது தான்.
ஆம்... பக்தர்கள் க்ஷேத்திர பாலகர் எனப்படும் இத்தலத்து செல்லப்பிள்ளையான, எமனை வணங்கிய பிறகே கோவிலுக்குள் நுழைவர். ஆயுள் விருத்திக்காக, ஹோமமும் நடத்துவர்.
கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் வழியாக, நன்னிலம் செல்லும் சாலையில், 35 கி.மீ., சென்றால், அச்சுதமங்கலம் கிராமம் வரும். இங்கிருந்து பிரியும் சாலையில், 2 கி.மீ., சென்றால், ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலை அடையலாம்.
புத்தாண்டில், இந்தக் கோவிலுக்கு சென்று, நுாறாண்டு வாழ பிரார்த்தனை செய்து விட்டு வாருங்களேன்!
- தி. செல்லப்பா