
நேர்மையான மாப்பிள்ளை!
திருமண தகவல் மைய வாயிலாக, உறவினர் மகளை, பெண் பார்க்க வந்தனர், வரன் வீட்டார்.
மாப்பிள்ளையின் படிப்பு, வேலை குறித்து, 'பயோடேட்டா'வில் குறிப்பிட்டிருந்தது, எந்தளவுக்கு நிஜம் என்பதை விசாரித்து அறிய விரும்பினார், உறவினர்.
மாப்பிள்ளையிடம் அதுபற்றி கேட்டதும், அவரின் அம்மா முந்திக்கொண்டு, விவரங்களை, 'ஓவர் பில்ட் - அப்' கொடுத்து நீட்டி, முழக்கினார்.
உடனே, அவரை தடுத்த மாப்பிள்ளை, 'எங்க அம்மா சொல்றதெல்லாம் பொய். திருமண தகவல் மையத்துல, என்னைக் கேட்காமலே, இவங்களா பதிவு பண்ணியிருக்காங்க. 'பயோடேட்டா'வுல உள்ள படிப்பு உண்மை.
'ஆனா, வேலை, சம்பளம் பற்றிய தகவல்கள் உண்மையில்லை. இந்த விஷயம், பொண்ணு பார்க்க வந்த பிறகு தான், எனக்கே தெரிய வந்தது.
'உண்மையில், எனக்கு நிரந்தர வேலை இல்லை. குறைந்த சம்பளத்துக்கு, 'பார்ட் டைம் ஜாப்' பார்த்துக்கிட்டு, நல்ல வேலை தேடிக்கிட்டிருக்கேன்...' என்று, உண்மையை போட்டு உடைத்தார்.
இதைக் கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்தோம். ஆனால், உறவினர் மகள், நேரடியாக மாப்பிள்ளையிடம் பேசினாள்.
'வேலை இல்லாட்டியும், ஒரு பெண்ணை, பொய் சொல்லி கட்டிக்கிட்டு ஏமாத்தி, நம்பிக்கை துரோகம் பண்ணிடக் கூடாதுங்கிற நேர்மை உங்களிடம் இருக்கு. அதுக்காகவே, உங்களை நான் கல்யாணம் பண்ணிக்க தயார்.
'எங்க ஆபிஸ்ல, குறைந்த சம்பளத்துல, ஒரு வேலை காலியா இருக்கு. என்னால உங்களுக்கு அந்த வேலைக்கு ஏற்பாடு செய்ய முடியும். கவுரவம், மற்றும் 'ஈகோ' பார்க்காம, அந்த வேலையில சேர நீங்க தயாரா?' என்றாள்.
முழு மனதோடு, மாப்பிள்ளை ஒப்புதல் கூற, இனிதே நடந்தது, திருமணம்.
இப்போது, சிறப்பாக வாழ்கின்றனர். நேர்மை குணம், மிக மிக நல்லது.
- ஆர்.செந்தில்குமார், மதுரை.
'சீரியல்' பார்த்தால், கெட்ட புத்தி தான் வரும்!
'யாராவது போன் செய்தால், எடுக்கவே பயமாக இருக்கு. குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர் யாருக்காவது, ஏதாவது, 'ஆக்சிடென்ட்' ஆகியிருக்குமோ என, பதட்டமாக இருக்கு...' என்றார், நண்பரின் மகள்.
'எல்லா, 'டிவி' சீரியல்களையும் விடாமல் பார்க்கிறீர்களா...' என்று, கேட்டேன்.
'ஆமாம், எப்படி சரியா சொல்றீங்க?' என்றார்.
'கொஞ்ச நாள் சீரியல்களை பார்க்காமல், நல்ல புத்தகங்களை வாங்கி படியுங்கள். இந்த பிரச்னை சரியாகும்.
'மேலும், ஒரு இல்லத்தில், மகாலட்சுமியின் ஆதிக்கம் நிறைந்திருக்க, மழலைகளின் ஒலி, தெய்வீக பாடல்கள், நல்ல சொல் இடம் பெறுதல், மகிழ்ச்சியான வாழ்வியல் முறை இருக்க வேண்டும் என, சாஸ்திரம் சொல்கிறது.
'ஆனால், நாள் முழுவதும் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் அழுகுரல், அபசகுனமான சொற்கள், மோசமான ஒலிகள், தீய சிந்தனைகளை உருவாக்கும் கதைகள் இப்படியான தாக்கங்கள் ஒரு இல்லத்தில் புகுந்தால், அந்த குடும்பம் நிம்மதி இழக்கும். மூதேவி வாசம் செய்வாள். இல்லத்தினருக்கு மனச்சிதைவு ஏற்படும்.
'பொழுதுபோக்கு அம்சம் என்பது, நம்மை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்; மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்; நம் ஓய்வை பயனுள்ளதாக்க வேண்டும்.
'ஒரு குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், அந்த இல்லத்தில் இருக்கும் பெண்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். அப்போது தான் குடும்பம் தழைக்கும். இல்லத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
'சீரியல்களுக்கு அடிமையானால், நல்ல புத்தி வராது, கெட்ட புத்தி தான் வரும்...' என்று கூறியதும், மனம் தெளிந்தாள், நண்பரின் மகள்.
பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.
நண்பரின் பயனுள்ள பழக்கம்!
எங்கள் பகுதியில் உள்ள, ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலர் ஒருவர், ஆண்டுதோறும் டிசம்பர் கடைசி வாரம், பயனுள்ள பழக்கம் ஒன்றை செயல்படுத்துவதை, விடாமல் கடைப்பிடித்து வருகிறார்.
முன்கூட்டியே, மொத்தமாக வாங்கி வைத்திருக்கும் அஞ்சல் அட்டைகளை, எங்கள் பகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், காலையில், தலா, 20 அஞ்சல் அட்டை மற்றும் ஒரு பேனாவையும், அவரின் புத்தாண்டு பரிசாக தருவார்.
அத்தோடு, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, அஞ்சலட்டைகளில், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை கைப்பட எழுதித் தர, வேண்டுகோள் விடுப்பார்.
மாலையில் வந்து, அவற்றை சேகரித்து சென்று, அஞ்சல் பெட்டியில் போடுவார்.
'இவ்வாறு செய்வதால், என்ன பயன்...' என்று கேட்டோம்.
'அக்கம்பக்கத்தாருடன் நட்பு பாராட்ட முடிகிறது. கடிதம் எழுதும் கலையை அழியாமல் காக்க முடிகிறது. எல்லாரையும் அன்பால் இணைக்க, துாண்டுகோலாக இருக்க முடிகிறது...' என்றார்.
பரஸ்பர வாழ்த்துக்களால், உலகம் அன்பு மயமாக வேண்டும் என்ற, நல்ல எண்ணத்தில் செயல்படும் அவர் போன்றோர் தான், அவசர யுகத்தின் அத்தியாவசிய தேவை.
— வெ.பாலமுருகன், திருச்சி.