/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (10)
/
ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (10)
PUBLISHED ON : ஜன 07, 2024

ஒருமுறை கச்சேரி முடித்து, காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார், பாகவதர். வழியில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. வண்டி வரவில்லை, காரில் உட்கார்ந்திருந்தார், பாகவதர்.
'ராதே உனக்குக் கோபம் ஆகாதடி...' என்ற பாடலை, ஆனந்தமாகப் பாடியபடி வந்தான், ஒரு விவசாயி.
சற்றே எட்டிப் பார்த்தார், பாகவதர்.
காரில் இருந்த பாகவதரைப் பார்த்ததும், 'ஆஹா... தெய்வமே...' என்று கூவியபடி, அவரை நோக்கி ஓடி வந்தார். விவசாயியை பார்த்ததும், பாகவதர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
'மகராசா, ஒரே நிமிஷம்...' என்று சொல்லி, மீண்டும் ஓடினார், அந்த விவசாயி.
சில நிமிஷங்களில், மூச்சிறைக்க வந்து, கோலி சோடாவை தந்து, 'தெய்வமே, இதை தாங்கள் குடிக்க வேண்டும்...' என்றார்.
அதைப் பார்த்த, கார் டிரைவர், 'அடேய் அடேய், ஐயா இந்த மாதிரி சோடாவெல்லாம் சாப்பிட மாட்டார், போ போ...' என்று கத்தினான்.
டிரைவரிடம், 'இங்கு சோடாவா முக்கியம். அந்த ரசிகரின் அன்பல்லவா முக்கியம்...' என சொல்லி, அடுத்த கணம், கட கடவென்று சோடாவை குடித்தார், பாகவதர்.
அந்த ரசிகன் அடைந்த ஆனந்தத்தை சொல்ல வேண்டுமோ!
சென்னையில், அமரகவி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
ஒருநாள் உணவு இடைவேளையின் போது, 'அண்ணா, இரண்டு மூன்று நாட்களாக, தங்களைப் பார்க்க வேண்டும் என்று, காலை முதல் மாலை வரை காத்துக் கொண்டிருக்கிறது, ஒரு குடும்பம்...' என்றார், படத் தயாரிப்பாளர்.
'அடடா, அப்படியா... அவர்களை இப்போதே பார்த்து விடுவோம்...' என்றார், பாகவதர்.
வெளியே காத்துக் கொண்டிருப்பவர்களிடம் தகவல் சொல்ல, ஆர்வமாக உள்ளே ஓடி வந்தனர்.
இளைஞன், யுவதி மற்றும் மூதாட்டி.
'ஐயா, என் பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயித்துள்ளோம். இவர்கள் தான், பெண்ணும் மாப்பிள்ளையும். உங்களைச் சந்தித்து ஆசி பெற்ற பின் தான், திருமணம் நடக்க வேண்டும் என்று, இருவருமே சொல்லி விட்டனர்.
'திருமண நாள் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. அதனால் தான், தினமும், உங்களைப் பார்ப்பதற்காக இங்கு வந்து காத்திருக்கிறோம்...' என்றார், மூதாட்டி.
நெகிழ்ந்து போன பாகவதர், உடனே, நல்லி சில்க்ஸ் கடைக்கு ஆள் அனுப்பினார். மணமகனுக்கு பட்டு வேஷ்டியும், பட்டு அங்கவஸ்திரமும், மணமகளுக்கு பட்டுப் புடவையும் வாங்கி வர செய்து, அவர்கள் இருவருக்கும் கொடுத்து, வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
அந்த அரும்பெரும் குணம் தான், பாகவதருடைய தனித்துவமாகும்.
கச்சேரி ஒன்றில், தேவகானம் பொழிந்து கொண்டிருந்தார், பாகவதர்.
பல கைகள் மாறி, ஒற்றை ரூபாய் தாள் ஒன்று, மேடையில் பாடிக் கொண்டிருந்த பாகவதர் கைக்கு வந்தது.
இரு கைகளாலும் ரூபாயை வாங்கி, கண்களில் ஒற்றினார், பாகவதர். பிறகு, அந்த நோட்டில் எழுதியிருப்பதைப் பார்த்து, 'ஐயா, நீங்கள் கேட்ட பாட்டை கண்டிப்பாகப் பாடுகிறேன். கொஞ்சம் பொறுமையோடு இருங்கள்...' என்றார்.
சில பாடல்களைப் பாடி முடித்து, அந்த ரசிகர் கேட்ட பாடலையும் பாடினார், பாகவதர். ரசிகர்களின் விருப்பத்தை, என்றைக்குமே பாகவதர் பூர்த்தி செய்யத் தவறியதே கிடையாது.
திருமண வீட்டில் பாகவதரின் கச்சேரி அமர்க்களமாய் நடந்து கொண்டிருந்தது. ரசிகர்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். ரசிகர்கள் கேட்கும் பாடல்களையெல்லாம் பாடிப்பாடி, அவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார், பாகவதர்.
திடீரென்று ஒரு பாமரப் பெண் எழுந்து பவ்யமாக, 'சாமி, சிவகவி படத்தில் பாடிய, 'சிதையே சிதையே...' பாடலை பாட வேண்டும்...' என்று கேட்டாள்.
'அம்மா, இது போன்ற மங்கல நிகழ்ச்சிகளில், அதுபோன்ற பாடல்களை பாடக் கூடாது. என்னை மன்னித்து விடுங்கள்...' என்றார், பாகவதர்.
தன் தவறை உணர்ந்து, அந்தப் பெண் மன்னிப்புக் கேட்டாள்.
பாகவதரிடம், உதவி வேண்டிக் கேட்டால், நிச்சயம் கிடைக்கும் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்தது. யாருக்கும் இல்லை என்று சொல்லாமல், தந்து மகிழ்வித்தவர், பாகவதர்.
அது மட்டுமல்ல, தானாகவே முன்வந்து, பல நாடகங்கள், இசைக் கச்சேரிகள் நிகழ்த்தி, நன்கொடையும் அள்ளித் தந்துள்ளார். ஆனால், அவரை யாரும் ஏமாற்ற முடியாது. அதை மெய்ப்பிக்கும் சம்பவம் ஒன்று...
ஒப்பனை அறையில் இருந்தார், பாகவதர். திடீரென்று, கர்ப்பிணிப் பெண் உள்ளே வந்து, 'ஐயா, உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. தயவுசெய்து, கொஞ்சம் பண உதவி செய்ய வேண்டும்...' என்று, கையெடுத்துக் கும்பிட்டாள்.
சற்று நேரம் அவளையே உற்றுப் பார்த்த பாகவதர், பக்கத்தில் இருந்த ஒரு காகிதத்தை எடுத்து, அதில் பணத்தை வைத்து மடித்தார்.
'ஆண்டவன் இருக்கிறார். கவலைப்படாதே. எல்லாம் நல்லபடியாக ஆகும்...' என்று, சொல்லி அனுப்பினார்.
பெரிய கும்பிடு போட்டு, அவள் சென்று விட்டாள்.
'மேக் - அப்' போடும் பையன்கள், 'ஐயா, நீங்க நல்லா ஏமாந்துட்டீங்க. வந்தது ஆம்பள...' என்று சொல்லி சிரித்தனர்.
அவர்களிடம், 'வந்தது கர்ப்பஸ்தீரி இல்ல, ஆம்பள தான், பொம்பள வேஷம் போட்டுண்டு வந்தான்னு எனக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், ஒருத்தர், இரண்டு கரங்களையும் நீட்டி, உபகாரம் பண்ணுங்கள் என்று கேட்கும்போது, எப்படி கொடுக்காமல் இருக்க முடியும். அதனால்தான் கொடுத்தேன்...' என்றார், பாகவதர்.
மென்மையான குணம் கொண்டவர், பாகவதர். யாரையும் கடிந்து பேசாதவர். புகழின் உச்சத்தில் இருந்த போதும், சக நடிகர்களை, பணியாளர்களை எப்போதும் மரியாதையுடனேயே நடத்துவார். தான் பெரிய நடிகர் என்று பந்தா காட்டியதே இல்லை.
- தொடரும்
எம்.ஜி.ஆர்., சிவாஜி, மற்ற நடிகர்களையும், தன் குரலால் நம் கண் முன் நிறுத்திய, டி.எம்.சவுந்தர்ராஜன், பாகவதர் மீது விசுவாசம் கொண்டவர்.'பாகவதரின் பாடல்களைக் கேட்டுக் கேட்டு, அதை மதுரை தெருக்களில் பாடிப்பாடி, எனக்கும் புகழ் வந்தது. பாகவதர் பாணியில் பாட ஆரம்பித்த நான், பிறகு, எனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டேன்.'இன்று எனக்கு இத்தனைப் பாராட்டு கிடைக்கிறது என்றால், அதற்குக் காரணம் பாகவதர் தான். இது, பாகவதர் எனக்குப் போட்ட பிச்சை...' என்றார், ஒரு பேட்டியில், டி.எம்.எஸ்.,
கார்முகிலோன்