sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 07, 2024

Google News

PUBLISHED ON : ஜன 07, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

வன சரக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற நண்பர், அவர்; இயற்கை ஆர்வலரும் கூட. பணி ஓய்வுக்கு பின், உதகை மாவட்டத்திலேயே வீடு வாங்கி, நிரந்தரமாக குடியேறி விட்டார்.

தன்னை போல் ஆர்வமுள்ள இளைஞர்களை இணைத்து, காட்டையும், காட்டு உயிரினங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அரசின் சிறப்பு அனுமதி பெற்று, தற்போது பணியிலுள்ள அதிகாரிகளிடம் தன் அனுபவங்களை பகிர்ந்து, செயல்பட்டு வருகிறார்.

இது சம்பந்தமாக நிறைய கட்டுரைகள் எழுதியும் வருகிறார்.

சமீபத்தில், தான் எழுதிய கட்டுரையை, ஆசிரியரிடம் தர அலுவலகம் வந்திருந்தார்.

அவரை மடக்கி, 'வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு. ஊட்டியில் உள்ள மசினகுடிக்கு போய் ரொம்ப நாளாச்சுப்பா. அழைச்சுட்டு போறீரா?' என்றார், லென்ஸ் மாமா.

'ஐயோ மாமா... அதற்கெல்லாம் இப்ப நேரமில்லை. மனுஷன்கிட்ட இருந்து பூமியை காப்பாத்தறது எப்படின்றது தான், இன்றைக்கு மிகப்பெரிய கவலையா இருக்கு. மனுஷனுக்குக் கோபம் வந்தா, 'சூடா ஆயிட்டான்'னு சொல்றதுண்டு.

'இப்ப பூமிக்குக் கோபம் வந்து, அது சூடா ஆகிக்கிட்டிருக்கு. பூமிக்கு, கோபத்தை உண்டாக்கினது, மனுஷன் தான். இன்னும், 25 ஆண்டுகள்ல பூமியின் உஷ்ணம் சராசரி, 1 முதல் 2 டிகிரி வரைக்கும் அதிகரிக்கும்ன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. சில பகுதிகள்ல, 6 டிகிரி வரைக்கும் கூட அதிகரிக்கலாமாம்.

'சரி, ஆயிட்டுப் போவுது. அதனால, நமக்கென்னன்னு இருந்துட முடியாது. பல பாதகங்கள் ஏற்படும். உதாரணத்துக்கு, பூமியோட வெப்பம் அதிகரிக்கும் போது, வட துருவம், தென் துருவத்துல இருக்கிற பிரமாண்டமான பனிக்கட்டிகள் உருக ஆரம்பிக்கும்.

'அதனால, கடல் மட்டம் உயரும். பல தீவுகள் மூழ்கற நிலைமைக்கு ஆளாயிடும். உலகம் முழுக்க கடலோரப் பகுதிகள் மூழ்கும். கடல் மட்டம் 1 மீட்டர் உயர்ந்தால், வங்கதேசத்துல, எட்டு கோடி மக்கள், வேற இடம் தேட வேண்டியிருக்கும்...' என்றார்.

'சரி... பூமி கோபப்படற அளவுக்கு மனுஷன் பண்ணின தவறு தான் என்ன?' என்றேன், நான்.

'இயற்கையின் சம நிலையைக் கெடுத்துட்டான், மனுஷன். நாம பிராண வாயுவை எடுத்துக்கிட்டு, கார்பன் டை ஆக்சைடை வெளியில விடுறோம். இந்த கார்பன் டை ஆக்சைடை மரம், செடி, கொடியெல்லாம் எடுத்துக்கிட்டு பிராண வாயுவை வெளியில விடுது.

'இது, ஒழுங்கா நடந்துக்கிட்டிருக்கிற வரைக்கும் சரி. ஆனா, காடுகளை அழிக்க ஆரம்பிச்சான், மனுஷன். கார்பன்டை ஆக்ஸைடு அதிகமாயிடுச்சு. இதைத் தவிர, வாகனங்கள், தொழிற்சாலைகள் விடுகிற புகை வேற காற்றில் கலக்குது.

'சூரியன் உமிழும், 'அல்ட்ரா வயலட்' கதிர்களிலிருந்து உயிரினங்களை பாதுகாக்கிற கேடயம், ஓசோன் படலம். இதுவும் தேஞ்சுக்கிட்டு வருது. இயற்கையோட அனுசரிச்சுப் போக வேண்டியதன் அவசியத்தை இப்பத்தான் தீவிரமா உணர ஆரம்பிச்சிருக்கோம்.

'அதுக்காகத்தான் உலகத் தலைவர்கள்லாம் ஒன்று கூடி யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க. இந்த உலகத்துல, மரம், செடி, கொடிகள், விலங்குகள் மற்றும் பறவைகள் எல்லாம் சவுக்கியமா இருந்தாத்தான் நாமளும் சவுக்கியமா இருக்க முடியும்.

'நம் நாட்டுல, குஜராத் வடபகுதியில், ஆரவல்லிக்குன்று சரிவின் மையத்துல, விலங்குகள், பறவைகளுக்குன்னே ஒரு கோவில் இருக்கு. அதுல பறவைகள், விலங்குகளின் சிற்பங்கள் தான் இருக்கு. கர்ப்பக்கிரகத்திலயும் அதே சிலைகள் தான். அங்கே வணங்கப்படுற தெய்வங்கள் பறவைகளும், விலங்குகளும் தான்.

'தெய்வீகக் கதைகள்ல எல்லாம் விலங்குகளையும், பறவைகளையும் தெய்வங்கள், வாகனமா வச்சிருக்குன்னு சொல்றதெல்லாம், அதோட மதிப்பை புரிஞ்சிக்கறதுக்காகத் தான்.

'அசோக மன்னர், சாலையோரத்துல மரங்கள் நட்டார். விலங்குகளுக்கு, மருத்துவமனைகள் நிறுவினார் என்று படிக்கிறோம்.

'கி.பி.17ம் நுாற்றாண்டுல எழுதப்பட்ட நுால், நீதிசாரம். அது, ஓலைச்சுவடியா இருக்கு. தமிழ்நாடு தொல்லியல்துறை, தர்மபுரியில் அதை கண்டுபிடிச்சாங்க. அதுல என்ன எழுதியிருக்கு தெரியுமா?

'மரம் வளர்த்தால் நரகம் இல்லைன்னு எழுதி இருக்கு. அந்த அளவுக்கு அப்பவே தெரிஞ்சு வச்சிருக்காங்க. ஆல், அரசு, வேம்பு மரங்களையெல்லாம் தெய்வமா நினைச்சு வழி படற பழக்கம், இப்பவும் கூட உண்டு.

'இருந்தும் என்ன பிரயோஜனம்... ஒரு பக்கம் வழிபட்டுகிட்டே, மறு பக்கம் மரங்களை அழிச்சுட்டு வர்றோம். அதை தடுக்க, அரசு பல திட்டங்கள் தீட்டினாலும், முழுவதுமாக செயல்படுத்த முடியவில்லை.

'நாங்கள் ஒரு குழுவை ஏற்படுத்தி, எங்களால் முடிந்த அளவுக்கு, காடுகளையும், காட்டு உயிரினங்களையும் காப்பாற்ற முயன்று வருகிறோம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான், எங்களது முதல் படி.

'வட மாநிலங்களில் இதுபோல், பல குழுக்கள் செயல்பட்டு வருது. அவர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம். எதிர்கால தலைமுறையினரின் வளமான எதிர்காலத்துக்கு, ஏதாவது செய்ய வேண்டும் என்பது எங்கள் லட்சியம்...' என்றார், நண்பர்.

அவர் கூற்றிலிருந்த உண்மையை உணர முடிந்தது.

'உம்மோடு இணைய நானும் தயாரா இருக்கிறேன் நண்பா!' என்று கூறி ஆசிரியரிடம் அழைத்துச் சென்றார், மாமா.





இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது

1.பசி வயிற்றை கிள்ளும் போது

2.துாக்கம் நம் கண்களை சுழற்றும் போது

3.போதையில் இருக்கும் போது

இந்த மூன்று சமயங்களில், யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது

1.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது

2.மிகவும் துக்கத்தில் இருக்கும் போது

3.மிகவும் கோபத்தில் இருக்கும் போது

இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்

1.நம்மைப் பற்றி உணராதவர்கள்

2.நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்

3.நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்

இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது

1.ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்

2.நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்

3.நம்முடைய நலத்தை நாடுபவர்கள்

விரோதியை நம்பலாம்; துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது; மன்னிக்கவும் கூடாது. ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின், அவர்களை விட்டு ஒதுங்கிப் போவதே நல்லது. இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மையும் தாழ்த்தி விடுவர்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.






      Dinamalar
      Follow us