sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 07, 2024

Google News

PUBLISHED ON : ஜன 07, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள சகோதரிக்கு —

நான், 33 வயது ஆண். கடந்த ஏழு ஆண்டுகளில், ஐந்து ஆண்டுகள் ஆங்கில பேராசிரியராகவும், ஒரு ஆண்டு பள்ளி தலைமை ஆசிரியராகவும் மற்றும் ஒரு ஆண்டு நிர்வாக அதிகாரியாகவும், தனியார் துறையில் பல ஊர்களில் பணியாற்றி உள்ளேன்.

எனக்கு, திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. என் தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர். தாயும், முதுகலை ஆங்கிலம் படித்து, 35 ஆண்டுகளாக வீட்டில், 'டியூஷன்' எடுக்கிறார். வசதியை பொறுத்தவரை, எந்த குறையும் கிடையாது. விவசாயமும் உண்டு.

மனைவியின் சந்தோஷத்துக்காக, விடுப்பு கேட்டேன். அடிக்கடி விடுப்பு எடுக்க, வேலை போனது. அதை இன்று வரை அவள் புரிந்து கொள்ளவில்லை.

மனைவிக்கு ஒரு தங்கை உண்டு. அவளும், என் மனைவியும் முதுகலை கணிதம் படித்தவர்கள். திருமணமான சில மாதங்களில், மனைவி கருவுற்றாள். அனைவருக்கும் மகிழ்ச்சி.

மனைவி, எப்போதும் அவள் தங்கையிடம் மொபைல் போனில் பேசுவதும், நடு இரவில் குறுஞ்செய்தி அனுப்புவதும் வழக்கமாக நடந்து கொண்டிருக்கும். அதை நான் பொருட்படுத்தவில்லை.

இங்கு நடக்கும் அனைத்தையும், குறுஞ்செய்தியாக தங்கைக்கு அனுப்புவதும், அவளின் பெற்றோர், தேவையில்லாமல் இவள் மனதை கலைப்பதும் அதிகரிக்க துவங்கியது.

மனைவி, திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த புதிதில், தங்கை, தாய் - தந்தையை பிரிந்து இருக்க முடியவில்லை என்று, அழுது கொண்டே இருப்பாள்.

அந்த வருத்தம் எனக்கு புரிந்ததால் தான், அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு கூட்டி செல்வேன். ஆனாலும், அவளுக்கு திருப்தி இருக்காது. எப்போதும், அவள் வீட்டில் இருப்பவர்களை நினைத்துக் கொண்டு, வயதான என் பெற்றோரை கவனிப்பதே இல்லை. அவர்கள் மன வேதனை அடையக் கூடாது என, எனக்கும், மனைவிக்கும் நடக்கும் வாக்குவாதங்களை, மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டேன்.

ஒருநாள் என் தாய்க்கும், மனைவிக்கும் நடந்த சண்டையில், என் கண் முன்னே, 'உங்கள் மகனை, ஒரு படிக்காத பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது தானே, என்னை எதற்கு தேர்ந்தெடுத்தீர்கள்...' என்று கேட்டு, கலங்க வைத்தாள்.

என்னிடம் சம்பாத்தியம் இல்லை என்றாலும், நான் வேலைக்கு செல்லும்போது, சேர்த்து வைத்த சேமிப்பு மூலம், அவள் விரும்பும் பொருளை, அவளுக்கே தெரியாமல் வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவேன். அப்போது கூட, அவள் தங்கையிடம் போனில் பேசும்போது, குறை கூறி, ஏளனமாக பேசுவாள்.

இப்படியே போக, ஒருநாள் அவள் தங்கை, என் மனைவியிடம், 'உன்னை கொடுமைப்படுத்துகின்றனர் என்றால் வந்து விடு. சட்டம் நமக்கு தான் சாதகமாக இருக்கும்...' என்று, போனில் பேச, அதை நான் கேட்டு விட்டேன்.

இந்நிலையில், எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஒருநாள் அதிகாலை, 2:00 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு, எழுந்து பார்க்கும்போது, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், மனைவி.

மூன்று மாத குழந்தை, தாய் பாலுக்காக அழும்போது, என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை.

'குழந்தை அழும் சத்தம் கூட கேட்காமல், அப்படி என்ன துாக்கம்...' என்று, அவளிடம் கை ஓங்கினேன்.

இதை அறிந்த அவள் பெற்றோர், 'அவள் கொஞ்ச நாட்கள் எங்களுடன் இருக்கட்டும்...' என்று கூறி, அழைத்துச் சென்றனர்.

எனக்கு வேலை இல்லை, சம்பாத்தியம் இல்லை என்றும், தங்கள் பெண்ணை, போட்டி தேர்வுக்கு படிக்க வைப்பதாக கூறி, அவர்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைத்து விட்டனர்.

ஒரு நாள், நான் வீட்டில் இல்லாத போது, மனைவியின் பெற்றோர், அவள் தங்கை மற்றும் அவளது உறவினர்கள் அனைவரும், எங்கள் வீட்டிற்கு வந்தனர். என்னை கேவலமாக திட்டியும், என் பெற்றோரை மிரட்டியும் சென்றுள்ளனர்.

'நாங்கள் இருக்கும் போதே இவர்கள் இப்படி நடந்து கொண்டால், நீ தனியாக என்ன செய்வாய்? உன் மனைவி மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அவளை நம்பி உன் வாழ்வை தொலைத்து விடாதே...' என்று சொல்லி வேதனை அடைந்தார், தந்தை.

கடந்த ஒரு ஆண்டாக, மனைவி, அவள் வீட்டில் பெற்றோர், தங்கை மற்றும் என் இரண்டு வயது பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள். நானும், என் பெற்றோரும், குழந்தையை பிரிந்து, இங்கு மன வேதனையுடன் காலம் தள்ளுகிறோம். அவள் திரும்பி வருவாளா அல்லது சட்ட ரீதியாக பிரிய, ஏதாவது திட்டம் போடுகிறாளா என்றும் தெரியவில்லை.

என் தாயின் மனநிலைமை தான் மிகவும் மோசமாக உள்ளது. என் திருமண வாழ்க்கை சரியாக இல்லாததை நினைத்து வருந்துகிறார்.

என் மனைவி, அவள் வீட்டார் பேச்சை கேட்டு, விவாகரத்து வரை வந்து விடுவாளோ என, அச்சமாக உள்ளது. அப்படி இருந்தால் என் வாழ்க்கை என்னவாகும் என்ற பயமும் துரத்திக் கொண்டே இருக்கிறது.

தங்கள் பதிலுக்காக காத்திருக்கும், அன்பு சகோதரன்.

இப்படிக்கு,

உங்கள் சகோதரன்.



அன்பு மகனுக்கு —

நீ உன் குடும்பத்துக்கு ஒற்றை மகன். உனக்கு அதிகம் செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கின்றனர், பெற்றோர். பணப்பிரச்னை இல்லாதது, உன் வீடு.

ஏழு ஆண்டுகளில் மூன்று உயரிய பதவியில் இருந்த நீ, இப்போது வேலையில்லாமல் ஒட்டடை படிந்து, வீட்டு மூலையில் கிடக்கிறாய். கேட்டால் மனைவியின் சந்தோஷத்துக்காக அடிக்கடி விடுப்பு போட்டதாக, நொண்டி சாக்கு கூறுகிறாய்.

ஆண் என்பவன், வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும். குடும்பத்து உறுப்பினர்கள் மீது குளிர் நிழலாய் பரவி, அவர்களை பாதுகாக்க வேண்டும். மறைக்காமல் சொல், உனக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா... பகலிலும் குடித்து விட்டு படுக்கையில் கிடக்கிறாயா?

உன் கடிதத்திலிருந்து இன்னொரு விஷயத்தை தெரிந்து கொண்டேன். மனைவி, 24 மணி நேரமும் என்ன செய்கிறாள், யாருடன் பேசுகிறாள் என, உளவு பார்த்திருக்கிறாய்.

மனைவி சுயமாய் இயங்க, பேச, நடக்க, தனி உரிமை தரப்பட வேண்டும். அவளை, ஆயுள் தண்டனை கைதியாகவும், நீ, ஜெயில் வார்டன் போலவும் நடந்து, சதா அவளை பதைபதைப்புடன் இருக்க வைத்திருக்கிறாய்.

மனைவி அனுப்பும் குறுஞ்செய்திகளை திருட்டுத்தனமாக படித்திருக்கிறாய். மனைவிக்கும், அவள் தங்கைக்கும் இடையே அன்பு சார்ந்த ஆயிரம் தகவல் தொடர்புகள் இருக்கும். அதை கேள்வி கேட்க உனக்கு துளியும் உரிமை இல்லை.

மனைவி படித்தவள், போட்டித் தேர்வு எழுதி வேலைக்கு செல்ல விரும்புகிறாள் என்றால், தாராளமாக நீ அனுமதிக்கலாம்.

நள்ளிரவில் குழந்தை அழுகிறது, பெற்ற தாய் அயர்ந்து துாங்குகிறாள். நீயோ, உன் தாயோ குழந்தைக்கு புட்டிப்பால் புகட்ட வேண்டியது தானே... குழந்தையின் அழுகை எதற்கும் அடங்காவிட்டால் கடைசி உபாயமாக, மனைவியை பதவிசாய் நீ எழுப்பி இருக்கலாமே?

நீயும், மனைவியும் வீணடிக்கப்பட்ட குழந்தைகள். நீ, பெற்றோர் செல்லத்தாலும், பணத் திமிரினாலும், பிறரை தொடர்ந்து கண்காணித்து சித்திரவதை செய்யும் குணத்தாலும், சுயபச்சாதாபத்தாலும், துருப்பிடித்து கிடக்கிறாய்.

திருமணத்திற்கு பின்னும், பிறந்த வீட்டு உறவுகளை விடாமல் தொங்கும் வவ்வால், உன் மனைவி.

சமாதானத்துக்கு நீ வரமாட்டாய் என, மனைவியும்; சமாதானத்துக்கு மனைவி வரமாட்டாள் என, நீயும்; அவநம்பிக்கை கொண்டு தரையை தேய்த்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.

நீ உடனே ஏதேனும் ஒரு வேலைக்கு போ. சம்பாதி. ஆலமர விழுதாய் தொங்கும் நீ மண்ணில் வேர் பதி.

மனைவியை தனியாக சந்தித்து, மனம் விட்டு பேசு. இருபக்க ஆவலாதிகளை நிவர்த்தி செய்யுங்கள். இருவரும் ஒரு மனநல ஆலோசகரை சந்தித்து தகுந்த ஆலோசனை பெறுங்கள்.

இரு வீட்டார் குறுக்கீடு இல்லாமல் தனிக்குடித்தனம் போங்கள்.

மனைவி ஏதாவது ஒரு வேலைக்கு போனால் சந்தோஷமாக அனுமதி. இரண்டு வருமானம் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும். வீட்டு வேலையை சரிபாதியாக பகிர்ந்து கொள்.

உனக்கும், மனைவிக்கும் இடையே ஆன பிரச்னையில் மூன்றாவது நபர்களை மத்தியஸ்தம் பண்ண அனுமதிக்காதீர்கள். விட்டுக் கொடுத்தவன் கெட்டு போனதில்லை மகனே!

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us