sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜன 14, 2024

Google News

PUBLISHED ON : ஜன 14, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டதாரி பெண்!

சென்னையில், இரண்டு, மூன்று அலுவலகங்களில் சுத்தம் செய்வது, பாத்ரூம் கழுவுவது என, வார நாட்களில் வேலை செய்து வந்தாள், ஒரு பட்டதாரி இளம் பெண்.சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், நாம் கூப்பிட்டால், வீட்டு பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை மிக சுத்தமாக, நேர்த்தியாக கிளீன் செய்தாள். ஒரு பாத்ரூமிற்கு 1,000 ரூபாய்.

என்னுடைய பெண் வீட்டில் மூன்று பாத்ரூம்கள். மூன்று மணி நேரம் சுத்தம் செய்து, 3,000 ரூபாய் வாங்கி கொண்டாள். சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை, தானே எடுத்து வந்தாள்.

பாத்ரூம் சுவர், கண்ணாடி அலமாரி, கதவு என, எல்லாவற்றையும் புதிது போல், மிக நேர்த்தியாக சுத்தம் செய்திருந்தாள். கூட இருந்து நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

நவநாகரிக தோற்றத்துடன், ஸ்கூட்டரில் வந்து இறங்கிய, அந்த பெண், பாத்ரூம் கழுவுவாளா என நினைத்தோம். ஆனால், உள்ளே வந்து தன் உடைகளை மாற்றி, முகம் சுளிக்காமல், சுத்தம் செய்த அப்பெண்ணிடம் விசாரித்தேன்.

'வார நாட்களில், மூன்று அலுவலகங்களில் சுத்தம் செய்கிறேன். அந்த வருமானம் போதவில்லை. குழந்தைகளை, நல்ல பள்ளியில் படிக்க வைக்க, போதிய வருமானம் இல்லை.

'ஆதலால், விடுமுறை நாட்களில், வீடுகளில் வேலை செய்து, சம்பாதிக்கிறேன். உழைத்து சம்பாதிப்பது தவறு இல்லையே...' என்றவள், 'தங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது, தேவையென்றால் கூப்பிடுங்கள்...' என்று கூறி, தன் மொபைல் எண்ணை கொடுத்தாள்.

இதுபோல உண்மையாக உழைப்பவர்களை, நாம் பாராட்டி, கை கொடுத்து, உதவ வேண்டும்!

- என். -மாலதி, சென்னை.

புத்துணர்வு சுற்றுலா!

தோழியின் கணவர், பெரும் வசதி படைத்தவர். எளிமையானவரும் கூட.ஆண்டுதோறும், சொந்த செலவில், 'புத்துணர்வு சுற்றுலா' என்ற, ஒன்றை ஏற்பாடு செய்வார்.

அதில், அவர் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர்கள், வயலில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்கள், உள்ளூர் துாய்மை பணியாளர்கள், பள்ளி காவலாளி, சமையலர், கோவில் பூசாரி. சலுான் கடைக்காரர், லாண்டரி கடைக்காரர் மற்றும் இவர்களின் குடும்பத்தினர் என, அனைவருக்கும் தனி பேருந்து ஏற்பாடு செய்து, கோவில், கடற்கரை, நீர்வீழ்ச்சி, மலைவாசஸ்தலம் ஆகியவற்றை சுற்றிக்காட்டி, மகிழ்வார்.

இதுபற்றி அவரிடம் கேட்டால், 'நமக்காக ஆண்டு முழுதும் இயந்திரம் போல் உழைக்கும் இவர்களுக்கு, இரண்டு நாள் புத்துணர்வு தந்தால், மீண்டும் உற்சாகமாக உழைக்க உதவியாக இருக்கும்...' என்றார்.

எளியவர்களை உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து வரும் அவரை, எல்லாருமே பாராட்டுகின்றனர்.

டி.யாஷினி, திருப்பூர்.

தோழியின், 'நச்' கேள்வி!

அலுவலக, 'மார்க்கெட்டிங்' பிரிவில் பணிபுரியும் நபர் ஒருவர், ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கூறி, இனிப்பு தந்தார்.அவரிடம், பிரசவம் மற்றும் மருத்துவமனை குறித்து கேட்டோம்.

'நல்லவேளை, பெண் குழந்தை பிறக்கவில்லை தப்பித்தேன்...' என்றார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.

அப்போது, 'பெண் குழந்தை என்றால் கேவலமா? அதுவும் குழந்தைதானே...' என்றாள், தோழி.

'நகை நட்டு, பணம் சேர்ப்பதற்கு எங்கே போறது?' என்று, கேட்டார்.

ஆத்திரமடைந்த தோழி, 'அப்ப, நீங்க உழைக்க தயாராக இல்லை. அதனால் தான், உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கிறது. குறைந்த வருமானத்தை அதிகரிக்க, நிறைய முயற்சிகள் இருக்கிறது.

'ஆனால், நீங்கள், கிணற்று தவளை போல் வாழ விரும்புறீங்க. அதனால் தான், உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம். மொத்தத்தில் உங்களின் இயலாமை தான், உங்களை இப்படி பேச வைக்கிறது...' என்றாள்.

அலுவலகத்தில் உள்ளோர் அனைவரும், அவளை பாராட்டினோம். நானும் பாராட்டினேன்.

பெண் குழந்தைகளை பாரமாக நினைத்து, இழிவாக பேசுபவர்களிடம், கேள்வி கேளுங்கள். அப்போது தான், இதுபோன்ற ஜென்மங்கள் திருந்துவர்.

- அ.மீனாட்சி, கன்னியாகுமரி.






      Dinamalar
      Follow us