/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (11)
/
ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (11)
PUBLISHED ON : ஜன 14, 2024

பாகவதரின், கணக்கற்ற ரசிகர்களில், முஸ்லிம் செல்வந்தர் ஒருவரும் இருந்தார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். பிள்ளைகளிடம் ஏற்பட்ட பிணக்கால், தன் சொத்து அனைத்தையும் பாகவதருக்கே எழுதி வைத்து விட்டார். சில ஆண்டுகளில், அந்த செல்வந்தரும் காலமானார்.
பிள்ளைகள் இருவரும் பாகவதரிடம் வந்து விஷயத்தைச் சொல்லி, 'சட்டப்பூர்வமாக, தற்போது நீங்கள் தான் இந்த சொத்துக்கெல்லாம் உரிமையாளர் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். சட்ட ரீதியாக எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
'ஆனாலும், தங்களிடம் நாங்கள் வைக்கிற வேண்டுகோள், இந்த சொத்தில் தங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள். பாக்கியை எங்களுக்குத் தந்து விடுங்கள். இந்த உபகாரத்தை தாங்கள் செய்ய வேண்டும்...' என்று, வேண்டி நின்றனர்.
இதைக் கேட்டு, முதலில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார், பாகவதர்.
'தங்கள் தகப்பனார் போன்ற தீவிர அபிமானிகள் தான், என்னை வாழ வைக்கிற தெய்வங்கள். அத்தகைய ரசிகப் பெருமக்களுக்கு, நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்...' என்று நெகிழ்ந்தார்.
இதைக் கேட்ட, பிள்ளைகள் இருவருக்கும், பயம் கலந்த அதிர்ச்சி. அப்படியென்றால், சொத்து அவ்வளவுதானா என்ற கலவர பீதி மனதில் ஏற்பட்டது.
அவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்ட பாகவதர், சிரித்தபடியே, 'பிள்ளைகளே, கவலைப்படாதீர்கள். இதில் தம்பிடி கூட நான் எடுத்துக் கொள்ள மாட்டேன். இவை அனைத்தும், உங்களுக்கு தான்...' என்று சொல்லி, சட்டப்பூர்வமாக, அந்த சொத்தை, செல்வந்தரின் இரு பிள்ளைகளுக்கும், சரிசமமாக எழுதிக் கொடுத்தார்.
இறை பக்தி மிக்கவர், பாகவதர். சினிமாவிற்காக கூட நாத்திகம் பேச மாட்டேன் என்ற கொள்கை உள்ளவர். சிறு வயது முதலே அவருக்கு கடவுள் பக்தி அதிகம்.
வெளிப்புற படப்பிடிப்பு, வெளியூர் கச்சேரி சென்றால், அங்குள்ள முக்கிமான கோவில்களுக்கு செல்லத் தவற மாட்டார். அதன் பிறகு தான் மற்றவையெல்லாம்.
ஒருமுறை திருவையாறில் கச்சேரி முடிந்த பிறகு, பாகவதரை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர், நிர்வாகிகள். பாகவதருக்காக சிறப்பான அபிஷேகம், அலங்காரம் எல்லாம் நடத்தினர்.
பாகவதருக்கு, பெரிய ரோஜா மாலையை எடுத்து வந்து போட்டார், கோவில் அர்ச்சகர்.
அவரிடம், 'என்ன மாமா, சவுக்கியம்தானே... என்னை நினைவிருக்கிறதா...' என்று கேட்டு, குழந்தையை போல் சிரித்தார், பாகவதர்.
சிறு வயதில், பலமுறை அந்த கோவிலுக்கு வந்திருக்கிறார், பாகவதர்.
அன்று, இதே அர்ச்சகர், பிரசாதம் கொடுக்கும்போது, பொடிசுகள் எல்லாம், 'மாமா... மாமா...' என்று அவர் பின்னால் ஓடி வரும்.
கற்பூர தட்டு விழுந்து விடப் போகிறது என்ற பயத்தில், சிறுவர்கள் தலையில் குட்டி, பிறகே பிரசாதம் தருவார். அப்படி குட்டு வாங்கிய சிறுவர்களில் ஒருவனாய் பாகவதர் இருந்துள்ளார். இதைத்தான் அவர் வேடிக்கையாக ஞாபகப்படுத்தியுள்ளார்.
கோவிலில், ஒரு சிற்றுரை நிகழ்த்தினார், பாகவதர்.
அப்போது, 'எனக்கு, ஒரு குருநாதர் அல்ல. பல குருநாதர்கள் உண்டு. அவர்களில் ஒருவர், கோடையிடி ராமசாமி பத்தர். எனக்கு ஒரு வகையில் உறவினரும் கூட. அவர் இங்கு தான் மேலவீதியிலே குடியிருந்தார்.
'சிறுவனாய் இருந்தபோது, சங்கீதம் கற்றுக் கொள்வதற்காக, அவரிடம் குருகுல வாசம் செய்தேன். என் மேல் மிகுந்த அன்பு கொண்டவர். தின்பண்டம் ஏதாவது வாங்கிச் சாப்பிடு என்று அவ்வப்போது காசு கொடுப்பார்.
'நான் அந்த காசிற்கு, குங்கிலியம் வாங்கி, அதோ இருக்கிறதே, அந்த அக்கினிக் குழியில் போட்டுவிட்டு, ஆள்கொண்டாரை வணங்கி, ஆசி பெறுவேன். எனக்கு ஏதோ கொஞ்சம் திறமை இருக்கிறதென்றால், அது பகவான் கருணையால் தான்...' என்றாராம்.
இரண்டாம் உலக மகா யுத்தம் வெடித்த நேரம். சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று பெருமையடித்துக் கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மிகுந்த பணமுடை. யுத்த நிதி திரட்டித்தர வேண்டுமென்று இங்கிலாந்திலிருந்து நெருக்கடி. அந்த நெருக்கடிக்கு இந்தியா மட்டும் விதிவிலக்கா என்ன?
அப்போது, சென்னை மாகாண கவர்னராக இருந்தவர் பெயர், சர் ஆர்தர் ஹோப். பொதுமக்களிடம் நேரடியாகச் சென்றால், பெரிதாக எதுவும் கிடைக்காது. பிரபலங்கள் மூலம் சென்றால் தான், பெரும் நிதி திரட்ட முடியும் என்று திட்டமிட்டார்.
புகழ் ஏணியின் உச்சியிலிருந்த, வசூல் சக்கரவர்த்தி, பாகவதர் தான், அவர் நினைவுக்கு வந்தார்.
பாகவதரை தொடர்பு கொண்ட, சென்னை மாகாண கவர்னர் சர் ஆர்தர் ஹோப் துரை, 'இந்த நெருக்கடியான சமயத்தில், நீங்கள் தான் அரசாங்கத்திற்கு உதவ வேண்டும்...' என்று, மிகுந்த மரியாதையோடு கேட்டுக் கொண்டார்.
'நான் எப்படி உதவ முடியும்? விளக்கமாகச் சொல்லுங்கள், என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய சித்தமாக உள்ளேன்...' என்று பதில் சொன்னார், பாகவதர்.
'யுத்த நிதிக்காக, நாடகம் நடத்தி, நிதி உதவி செய்ய வேண்டும். அந்த நாடகங்களுக்கெல்லாம் நானே தலைமை தாங்குகிறேன்...' என்றார், கவர்னர்.
கவர்னர் தலைமையில் ஊருக்கு ஊர், பாகவதரின் நாடகங்கள் நடந்தன. பாகவதர் தான் வசூல் சக்கரவர்த்தி ஆயிற்றே. பிறகென்ன?
ஏராளமான நாடகங்கள் நடந்தன. லட்சக்கணக்கில் பணம் குவிந்தது.
ஆச்சரியம் அடைந்தான், வெள்ளைக்காரன். ஆம், அதிசயம் அல்லவா அரங்கேறியிருக்கிறது.
இதற்கு பிரதியுபகாரமாக பாகவதருக்கு, திருவெறும்பூர் கிராமத்தையே சாசனம் செய்து தர முன் வந்தது, பிரிட்டிஷ் அரசு.
— தொடரும்
ஒரு முறை, தஞ்சாவூரில் பாகவதரின் கச்சேரி. பொது மக்கள் அனைவருமே கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காக, மாலையில் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.குழுவினரோடு வந்த பாகவதர், சரியான நேரத்தில் கச்சேரியைத் துவங்கி விட்டார். திடீரென்று, பக்கத்து ஆலையிலிருந்து, இரவு நேர சங்கு ஊத ஆரம்பித்தது. ரசிகர்கள் இந்த சத்தத்தைக் கேட்டு, சில நொடிகள் கழித்து, தொடரலாம் எனும் பார்வையில் பாகவதரைப் பார்த்தனர்.பாகவதர் புரிந்து கொண்டார். அதெல்லாம் ஒன்றுமில்லை என்பதுபோல், அந்த சங்கின் சத்தத்தையும் மிஞ்சும் வண்ணம், உச்சஸ்தாயில், தம் பிடித்துப் பாடினார்.
கார்முகிலோன்