sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குற்றம் குற்றமே! (7)

/

குற்றம் குற்றமே! (7)

குற்றம் குற்றமே! (7)

குற்றம் குற்றமே! (7)


PUBLISHED ON : ஜன 14, 2024

Google News

PUBLISHED ON : ஜன 14, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் கிருஷ்ணராஜின் வேண்டுதலை நிறைவேற்ற, அவர் மகள் கார்த்திகாவும், உதவியாளன் தனஞ்ஜெயனும் திருப்பதிக்கு சென்று, ஒரு கோடி ரூபாயை, உண்டியலில் செலுத்தி, திரும்பி வந்தனர்.

நிறுவன பங்குதாரர் தாமோதரனும், அவர் மகன் விவேக்கும், கிருஷ்ணராஜுவையும், அவர் மகள் கார்த்திகாவையும் மிரட்டி வந்ததோடு, தற்சமயம் தனஞ்ஜெயனையும் மிரட்ட ஆரம்பித்தனர்.

தாமோதரனுக்கும், கிருஷ்ணராஜுக்கும் என்ன பகை என்று கார்த்திகாவிடம், தனஞ்ஜெயன் கேட்க, தன் தந்தை, ஆரம்ப காலத்தில் பலவித குற்ற செயல்களில் ஈடுபட்டதாகவும், அதை அறிந்து, அவர்கள் மிரட்டுவதாகவும், தாய் தற்கொலை செய்ததையும் கூறினாள், கார்த்திகா-

தன், தாயின் தற்கொலை பற்றி, கார்த்திகா சொன்னதோடு, விசும்பி அழவும் செய்தாள். அந்த நொடி, அவள் கண்ணீரைத் துடைத்து, அவளை அணைத்துக் கொள்ளவும் தோன்றியது, தனஞ்ஜெயனுக்கு. ஆனால், முதலாளி என்ற அவளது ஸ்தானம், அவனைத் தடுத்தது.

அவளே சில நொடிகளில், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ''ஐ ஆம் சாரி தனா...'' என்றாள்.

அதன்பின் இருவரும், ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.

திருப்பதி மலையின் அடிவாரத்தை அடைந்து, ஜன சந்தடிக்குள் கார் ஊர்ந்த போது தனஞ்ஜெயனின், 'மொபைல்' அழைத்தது.

காரை ஓட்டியபடியே, 'ப்ளூடுத் லிங்'கில், ''தனா ஹியர்...'' என்றான்.

''என்ன ஹீரோ, திருப்பதில அந்த முதல் அசைன்மென்ட்டை நல்லவிதமா முடிச்சிட்டே போலிருக்கே...'' என்று ஒலித்த, விவேக்கின் குரலை, கார்த்திகாவும் கேட்டாள்.

''பரவால்லையே, என்னை, 'பாலோ' பண்ணிக்கிட்டே இருக்கியே, விவேக். நீ பேசாம, துப்பறிவு வேலையில சேரலாம்,'' என்று சளைக்காமல் பதில் சொன்னான், தனஞ்ஜெயன்.

''உனக்கு கிடைச்சிருக்கறது நல்ல வேலை இல்ல, தனஞ்ஜெயன்; அது ஒரு இரும்பு வலை.''

''வேலை, வலைன்னு, 'ரைமிங்'கா பேசறியே, விவேக்... நிறைய சினிமா பார்ப்பியோ?''

“பார்த்து பேசு, தனஞ்ஜெயன். நீ, 'மிடில் கிளாஸ்' நான், மில்லியனர்.”

“நான் எங்க உன்கிட்ட பேசினேன்? நீதான் வம்பா என்கிட்ட பேசிக்கிட்டிருக்கே... இதுல மிடில்கிளாஸ், மில்லியனர்ங்கற விமர்சனம் வேற!”

“அது விமர்சனம் இல்ல. நிஜம்! உனக்கொரு பிரச்னைன்னா, நீ போலீஸ், வக்கீல்ன்னு யார் கிட்டேயும் போக முடியாது. என் பேச்ச கேட்டா, நீ நல்லா இருப்பே. இல்ல, உன்னோட ஒவ்வொரு நிமிஷமும் நரகம் தான்.

''இது, நான் உனக்கு கொடுக்கற கடைசி வாய்ப்பு. இதை பயன்படுத்திக்க தவறினா, நீ ரொம்பவே கஷ்டப்படுவே...

“நான் பேசறத, கார்த்திகாவும் கேட்டுக்கிட்டு இருக்கறது எனக்கு தெரியும். காரை நிறுத்திட்டு புத்திசாலியா இறங்கி போய்கிட்டே இரு. நீ நல்லா இருப்பே. இல்லேன்னா உன்னை போக வைப்பேன்.”

அந்த மொபைல் அழைப்பு அத்தோடு முடிந்து போனது. தனஞ்ஜெயனை ஊன்றிப் பார்த்தாள், கார்த்திகா.

“என்ன மேடம், நான் இப்ப என்ன செய்யப் போறேன்னு தானே பார்க்கறீங்க?”

“என்னால இப்ப அதை தானே செய்ய முடியும், தனா?”

“கவலைப்படாதீங்க. அவனோட மிரட்டலுக்கு பயந்து நான் போக மாட்டேன். நல்லதோ, கெட்டதோ உங்க கூட மட்டுமே நிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.”

அந்த பதிலோடு காரின், ஆக்சிலேட்டரையும் அழுத்தி மிதித்தான், தனஞ்ஜெயன்.

லட்டு பிரசாதத்துடன் வீட்டுக்குள் நுழைந்த, தனஞ்ஜெயனை, ஊறுகாய்க்கென எலுமிச்சம் பழங்களை நறுக்கிக் கொண்டிருந்த அவன் அம்மா, திரும்பி பார்த்தாள்.

ஈரத்துணிகளை கொடியில் காயப் போட்டு திரும்பிய அக்கா சாந்தியிடம், பிரசாத பையை தந்தவன், “திருப்பதி தரிசனம் நல்லபடியா முடிஞ்சிச்சும்மா...” என்றான்.

“கோவிலுக்கெல்லாம் போய்ட்டு வர்ற அளவுக்கு நீ அவ்வளவு பக்திமான் ஆயிட்டியாண்ணே?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள், தங்கை ஸ்ருதி.

“வேலை கிடைச்சா நடந்தே வரேன்னு வேண்டிகிட்டிருந்தேன் அதான்,” சமாளித்தான், தனா.

“அப்ப நடந்தா மலை ஏறுனே?” நம்ப முடியாமல் கேட்டாள், இன்னொரு தங்கையான, கீர்த்தி.

“ஆமா.”

“எங்களையும் கூட்டிகிட்டு போயிருக்கலாம்ல?” என, கீர்த்தி கேட்கவும், ஒரு சின்ன தடுமாற்றம், தனஞ்ஜெயனிடம்.

“ஆமாம்ப்பா... எல்லாரும் போயிருந்திருக்கலாம். பொசுக்குன்னு நீ மட்டும் போய்ட்டு வந்துட்டே,” என்றாள், அம்மா.

“அதுக்கென்னம்மா... அதான் கார் வரப்போகுதே, எப்பன்னாலும் இனி போய்ட்டு வந்துட்டா போச்சு,” எனக் கூற, அதை நம்ப முடியாதவள் போல பார்த்தாள், ஸ்ருதி.

“என்னப் பாக்கறே... எனக்கு அந்த வேலை கிடைச்சதை, இன்னும் உன்னால நம்ப முடியலியா?”

“ஆமாண்ணே, நேத்துல இருந்து நீ சொல்ற எதையுமே எங்களால நம்ப முடியல. பங்களா, கார், திருப்பதி... அப்படி இப்படின்னு நீ சொல்ற எல்லாமே, நீ எங்களை ஏமாத்த சொல்றியான்னு கூட தோணுது,” என்றபடி காலண்டரை பார்த்தாள், ஸ்ருதி. அதில் அன்றைய தேதி மார்ச், 31 என்றிருந்தது.

திருப்பதி லட்டின் ஒரு சிறு துளியை, கிருஷ்ணராஜின் வாய்க்குள் போட்டு, “அவ்வளவு தான் உங்க கோட்டா. நீங்க சர்க்கரைங்கற வார்த்தையை கூட சொல்லக் கூடாதுன்னு, டாக்டர் சொன்னது ஞாபகமிருக்கட்டும்,” என்றாள், கார்த்திகா.

அப்போது அவர் எதிரில், ''குட்மார்னிங் சார்...'' என்றபடியே வந்து நின்றான், தனஞ்ஜெயன்.

அவனை சற்று கண் கலங்க பார்த்தார், கிருஷ்ணராஜ்.

“எதுக்கு சார், கலங்கறீங்க. அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடிச்சே?”

“வாஸ்தவம் தான். ஆனா, அந்த, விவேக் விடாம உன்னை மிரட்டிகிட்டே இருக்கானே?”

“ஆமாம், சார். ஆனா, அதுக்கு நான் பயப்படறதா இல்லை.”

“உன் தைரியத்தை நான் பாராட்டறேன். இந்த தைரியம் தொடர்ந்து நீடிக்கறதுல தான் எல்லாம் இருக்கு.”

“நீடிக்கும் சார், நம்புங்க.”

“அது இருக்கட்டும், என்னை, உன்னால இப்ப நேசிக்க முடியுதா?” என கேட்டார், கிருஷ்ணராஜ்.

“ஏன் சார், இப்படி கேக்கறீங்க?”

“அவ்வளவு பெரிய பாவியாச்சே நான்!”

“சொல்லப் போனா இப்ப தான் சார், நான் உங்களை ரொம்பவே மதிக்கறேன்.”

“நான் கொடுக்கப் போற சம்பளமும், பங்களாவும் இப்படி உன்னை சொல்ல வைக்குதா, தனஞ்ஜெயன்?”

“சத்தியமா இல்லை, சார்.”

“தனஞ்ஜெயன், என்னைப் பத்தி இன்னும் முழுசா கார்த்திகா உன்கிட்ட சொல்லலை. அதெல்லாம் தெரிஞ்சா நீ இல்லை, யாருமே என்னை ஒரு மனிஷனாவே நினைக்க மாட்டாங்க.”

“அப்படி இல்லை சார்... தவறு செய்யறதை விட, அதுக்கெல்லாம் பரிகாரம் செய்ய ஆசைப்படறது ஒரு நல்ல விஷயம், சார். அதுக்கு தைரியமும், நல்ல புத்தியும் வேணும். அது, உங்க கிட்ட இருக்கும்போது, வேற எதைப் பத்தியும் யோசிக்க தேவையே இல்லை சார்.”

“தேங்க்யூ ஜென்டில் மேன். அந்த கடவுள் தான், உன்னை என்கிட்ட அனுப்பி வெச்சிருக்கார்ன்னு நம்பறேன்.”

“எனக்கும் எல்லாரும் பாக்கற வழக்கமான வேலைகளில் விருப்பம் இல்ல, சார். சவாலான வேலையை தான், நானும் விரும்பறேன்.”

“ரொம்ப சந்தோஷம். உனக்கான பணி நியமன உத்தரவு கடிதம், பங்களா மற்றும் கார் சாவி எல்லாமே ரெடியா இருக்கு. நியமன உத்தரவில் கையெழுத்து போட்டு, வேலையில் முதல்ல சேர்.”

“யெஸ் சார்... அந்த இரண்டாவது, 'அசைன்மென்ட்' என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“அதுவும் ஒரு கோவில் சம்பந்தப்பட்டது தான்.”

“அது என்னன்னு சொல்லுங்க சார்.”

“கார்த்திகா சொல்வா. முதல்ல வேலையில் சேர். ஹெச்.ஆர்., ஹெட், சாம்பசிவத்தை போய் பார். எப்ப என்கிட்ட ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டதோ, அப்ப இருந்தே எல்லாமே, முறைப்படி தான் நடக்கணும்ன்னு, நான் சொல்லிட்டேன். அதை மீறி எந்த ஒரு காரியத்தையும் யாரும் செய்யக் கூடாது என்பதிலும் உறுதியா இருக்கேன். உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்...”

“எனக்கும் அப்படித்தான், சார்.”

“அதுபோதும் எனக்கு... இனி, என் வாழ்க்கைல தெரிஞ்சு ஒரு சிறு தப்பு கூட நடக்கக் கூடாதுன்னு நான் விரும்பறேன். என் ஆயுளும், ஆண்டுக்கணக்கில் இல்ல... மாதங்கள்லதான்னு டாக்டர் சொல்லிட்டார். அது, மூணு மாசமோ இல்லை, ஆறு மாசமோ? அவனுக்கு தான் தெரியும்.”

ஒரு பெருமூச்சுடன் கையிரண்டையும் உயர்த்தி மேலே காண்பித்தார், கிருஷ்ணராஜ். அதைக் கேட்ட வினாடியில், கார்த்திகா விழிகளில் கண்ணீர்.

“நான் கொஞ்சம் போல புண்ணியமும் செய்திருக்கேன். அந்த புண்ணியம் தான், எனக்கொரு மகளா வந்து பிறந்திருக்கு. இவளை தனியா விட்டுட்டு போகப் போறதை நினைக்கும் போது தான், நான் ரொம்பவே நொறுங்கிடறேன்...” என்றார்.

“சார், தைரியமா இருங்க. நெகட்டிவா எதையும் நினைக்காதீங்க,” என்று அவருக்கு சற்று தைரியத்தை தந்தான், தனஞ்ஜெயன்.

அப்போது, அவர் உடலை சுத்தம் செய்து மருந்து போடுவதற்காக, கைகளில், 'கிளவுஸ்' முகத்தில், 'மாஸ்க்' உடம்பில், 'டிஸ்போசபிள்' உடையுடன் வந்து கதவருகே நின்றார், மருத்துவ உதவியாளர்.

அவரைப் பார்க்கவும், இருவரும் அந்த அறையை விட்டு வெளியேறினர். அவர், உள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டார்.

“மேடம், அந்த ரெண்டாவது அசைன்மென்ட்?” என்று ஆரம்பித்தான், தனஞ்ஜெயன்.

“சொல்றேன், முதல்ல போய் ஹெச். ஆரை பாருங்க... ஹெச்.ஆர்., ஹெட், சாம்பசிவம் உங்களுக்காக காத்திருக்கார்,” என்றாள், கார்த்திகா.

“நல்லது மேடம், அப்ப நான் கிளம்பறேன்,” என, சிறிது துாரம் சென்றவனை, “தனா ஒரு நிமிஷம்,'' என, தடுத்தாள். அவனும் திரும்பி பார்த்தான்.

“உங்க அப்பா, அம்மாவுக்கு நீங்க ஒரே பையனா?” என்றாள்.

முன் புருவத்தை சுருக்கியவன், ''அப்பா இல்லை இறந்துட்டாரு. அம்மா, அக்கா, ரெண்டு தங்கைகள், நான்.”

“ஓ, அப்ப நீங்க மட்டும் தான், இல்ல?”

“ஏன் மேடம், எதுக்கு கேட்கறீங்க?”

“சும்மா தான் கேட்டேன்.”

“இல்ல மேடம், அப்படி தெரியல எனக்கு.''

அவன் மெல்லத் திரும்பி வரத் தொடங்கினான். அவளிடமும் ஒரு கனத்த மவுனம்.

“என்ன மேடம், மவுனமாகிட்டீங்க?”

“இல்ல... உங்க வறுமையை நாங்க பயன்படுத்தி கொள்கிறோமோன்னு எனக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி,” என்றாள்.

“ஏன், இப்படி எல்லாம் நினைக்கிறீங்க. நான் விரும்பித்தானே வேலைல சேர்ந்திருக்கேன்.”

“சரி சரி, நீங்க கிளம்புங்க.”

ஆழமாய் ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு புறப்பட்டான், தனஞ்ஜெயன்.

புதிய அப்பார்ட்மென்ட் வீடு, சலவைக்கல்லால் இழைக்கப்பட்டிருந்தது. அது இருக்கும் கேட் காம்பவுன்டிற்குள் நுழையும் போதே, ஸ்ருதிக்கும், கீர்த்திக்கும் ஒரே பரவசம்.

சென்னை நகரின் நடுவில், அடர்வான அதன் நெருக்கடிகளுக்கு இடையே இப்படிக் கூட ஒரு இடமா என்று இருவரிடமும் ஒரே ஆச்சரியம்!

“என்ன குட்டிங்களா... எப்படி இருக்கு? இப்ப நான் சொன்னதெல்லாம் உண்மைன்னு நம்பறீங்களா?” என்று கேட்டு சிரித்தான், தனஞ்ஜெயன்.

“அண்ணே, இந்த வீடு இனி நமக்குத்தானா?” சந்தேகம் குறையாமல், மெல்லிய குரலில் கேட்டாள், கீர்த்தி.

“நான், இந்த வேலைல இருக்கறவரை இந்த வீடு நமக்குத் தான். புரியுதா?”

'வேலைன்னா சம்பளம் தான் கொடுப்பாங்க. இப்படி வீடு, காருமா தருவாங்க?' என, கீர்த்தியும், ஸ்ருதியும் வீட்டை பார்த்துக் கொண்டே தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

ஜன்னலை திறந்து வெளியே பார்த்தான், தனஞ்ஜெயன்.

எதிரில், பல அடுக்கு மாடிகளை கொண்ட வீடுகளும், மேல் தளத்தில், சின்டெக்ஸ் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளும் தெரிந்தன. அந்த தொட்டிகளில் ஒன்றின் மேல் சாய்ந்தபடி யாரோ ஒருவன், 'பைனாகுலர்' வழியாக தனஞ்ஜெயனைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது!

சற்று பகீரென்றது, தனஞ்ஜெயனுக்கு.



— தொடரும்.இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us