PUBLISHED ON : ஜன 14, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுப்பானை போல
கவனமாக கையாளுங்கள்
கிடைத்திருக்கும் வாழ்க்கையை!
புதுமஞ்சள் போல
துாய்மையான எண்ணங்களால்
நிரப்புங்கள் மனதை!
கரும்பை போல
இனிப்பான நினைவுகளை
சக மனிதருக்கு வழங்கிடுங்கள்!
பொங்கும் சோற்றைப் போல
நிபந்தனை ஏதுமற்று
எல்லார் வாழ்விலும்
மகிழ்ச்சியை நிறையுங்கள்!
விரல்களுக்குள் பேதம் பாராமல்
கை என்றழைப்பது போல்
சுற்றத்தார், நண்பர்கள்
சுற்றியுள்ளோர் அனைவரையும்
நேசத்தில் அரவணையுங்கள்!
கதிரவனின் சேவைக்கு
நன்றி கூறிடும்
பண்பட்ட இனத்தோர் என்ற
பெருமிதத்தோடு படையலிட்டு
பங்கிட்டு பசியாற்றுங்கள்!
மனித குல வரலாற்றின்
ஆதிசடங்கை நிறைவேற்றிய
ஆனந்தத்தோடு ஒன்றிணைந்து
பொங்கலோ பொங்கல் என்று
பூரிப்போடு கூவிக் களித்திடுங்கள்!
— மு.நந்தனா, பனையபுரம், விழுப்புரம்.