PUBLISHED ON : ஜன 14, 2024

ரத சப்தமி, சூல விரதம், தைப்பூசம், பொங்கல் பண்டிகை என்று, சிறப்புமிக்க பல பண்டிகைகள் வருவது, தை மாதத்தில் தான்... பொங்கல் திருநாள் பற்றிய, சில விஷயங்கள் இதோ...
ஆதவன் தெற்கிலிருந்து வடக்கு திசை நோக்கி நகரத் துவங்கும் தினம் தான் தை முதல் நாள். உலகத்தில், 365 நாட்கள், ஓர் ஆண்டு என்றால், தேவலோகத்தில், நம்முடைய ஓர் ஆண்டு என்பது, ஒரு நாள்.
அந்த, ஒரு நாளின் இரவு காலம், 'தட்சிணாயணம்' எனப்படும். அங்கு பகல் பொழுதை 'உத்ராயணம்' என்றால், தை மாதம் துவங்கி ஆனி வரை. தட்சிணாயணம், என்றால் ஆடி மாதம் துவங்கி மார்கழி வரை.
இந்த உத்ராயணம் தொடங்கும், முதல் நாளை தான், பொங்கல் என, சிறப்பாக கொண்டாடுகிறோம்.
இதற்கு முதல் நாள், போகி. இந்திரனுக்குரிய நாளைத்தான், போகியாக நாம், கொண்டாடுகிறோம்.
வீட்டை சுத்தம் செய்து வேப்பிலை, ஆவாரம்பூ, பூளைப்பூ, தும்பைப்பூ இவற்றை வாசலில் செருகி வைப்பதால், வீடு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
பொங்கலுக்கு மறுநாள், மாட்டுப் பொங்கல். வாயில்லா ஜீவன்களுக்கு, நன்றி சொல்லும் இந்த நாளில், கால்நடைகளுக்கு ஓய்வு கொடுத்து, அவற்றுக்கும் பூஜை செய்வர்.
இந்த மூன்று தினங்களையும் சிறப்பாக கொண்டாடுவது, தமிழர்களின் தனிச் சிறப்பு.