
அ. சிவா, சிவகாசி: கோபமும், பிரிவும் ஏற்புடையதா?
கோபமும், பிரிவும் ஒருவரை மறப்பதற்கல்ல; அவர்களை அதிகமாக நினைப்பதற்கே!
* அ. மணி, நெல்லை: என் மகனுக்கு உண்டியல் வாங்கிக் கொடுத்தும், அதில் சேமிக்க மாட்டேன் என்று இருக்கிறானே...
அவர் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. எப்படி உழைப்பதென்று, பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். ஏன் சேமிக்க வேண்டும் என்பதை, அவர்கள், தாமாகவே கற்றுக் கொள்வர்!
பி. நாதன், நெய்வேலி: பிறருக்கு துன்பம் ஏதும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...
'வெரி குட்!' முற்பகலில் பிறருக்கு நீங்கள் இழைக்கும் துன்பம், பிற்பகலில், தானாகவே உங்களைத் தேடி வரும். அதனால், உங்களது எண்ணத்தை பாராட்டுகிறேன்!
ப. ராகவன், நாகர்கோவில்: வாழ்வில் உயர்வு வரவேண்டும் என்று நினைக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?
ரொம்ப, 'சிம்பிள்!' உங்களின் எண்ணமும், செயலும் உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தீர்கள் என்றால், உயர்வுகள், தாமே வந்து விடும்!
என். உஷாதேவி, மதுரை: உங்களுக்கு, வெளிநாட்டு வாசகர்கள் உண்டா?
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் நியூசிலாந்து உட்பட, பல வெளிநாடுகளில் இருந்தும், 'இ - மெயில்' மூலம் கேள்வி கேட்கும் வாசகர்களும் உண்டு!
* க. சித்தார்த், சென்னை: தமிழகத்தில் நேர்மையாக ஆட்சி செய்த முதல்வர், காமராஜரையே, பதவியை விட்டு இறக்கிய மக்கள், ஏன், ஊழல் திராவிட கட்சிகளை மாற்றி மாற்றி, ஆட்சியில் அமர்த்துகின்றனர்?
காமராஜர், ஓட்டுக்கு, லஞ்சம் கொடுக்கவில்லை. அதனால், ஆட்சியை இழந்தார். ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாகி விட்டதே! அதனால், இரு திராவிட கட்சிகளும், ஆட்சியில் அமர்கின்றன!
ஜி. நாகராஜன், சிதம்பரம்: 'இண்டியா' கூட்டணியில் உள்ள கட்சிகளும், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளனவே...
இதனால், சிறுபான்மையினரின் ஓட்டுகளை கவர்ந்து விடலாம் என, நினைக்கின்றனர். வரும் லோக்சபா தேர்தலில், பெரும்பான்மையினர், இவர்களை, 'கவனித்து' கொள்வர் என்பதில், சந்தேகமே இல்லை!