sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குற்றம் குற்றமே! (8)

/

குற்றம் குற்றமே! (8)

குற்றம் குற்றமே! (8)

குற்றம் குற்றமே! (8)


PUBLISHED ON : ஜன 21, 2024

Google News

PUBLISHED ON : ஜன 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை சுருக்கம்: 'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ்'  நிறுவனர், கிருஷ்ணராஜ் கொடுத்த முதல், 'அசைன்மென்ட்'டை வெற்றிகரமாக முடித்தான், தனஞ்ஜெயன். அவனது திறமையை பாராட்டினார், கிருஷ்ணராஜ். அவனது பணி உத்தரவையும், வீடு மற்றும் கார் சாவியையும், தனஞ்ஜெயனிடம் ஒப்படைத்தார், நிறுவன ஹெச்.ஆர்., சாம்பசிவம்.

புது அப்பார்ட்மென்ட்டைப் பார்க்க, தன் தங்கைகளுடன் வந்தான், தனஞ்ஜெயன். எதேச்சையாக, ஜன்னல் வழியாக பார்க்க, எதிர் பில்டிங் மாடியில், ஒருவன், 'பைனாகுலர்' மூலம், தன்னை பார்ப்பதை அறிந்து திடுக்கிட்டான், தனஞ்ஜெயன்.

எதிரில் தெரிந்த அந்த, 'பைனாகுலர்' மனிதனும், தனஞ்ஜெயன் தன்னை நேருக்கு நேராக பார்ப்பது தெரியவும், அப்படியே திரும்பி, சென்னை நகரின் அழகைப் பார்ப்பது போல நடிக்கத் துவங்கினான்.

தனஞ்ஜெயன் முகத்தில் பலத்த மாற்றங்கள். அதற்குள்ளாக, தங்கைகள் இருவரும் வீடு முழுவதையும் பார்த்துவிட்டு, முகத்தில் மகிழ்ச்சி பொங்க, 'அண்ணே, வீடு பிரமாதமா இருக்குண்ணே...' என்றனர்.

'எல்லா அறையிலும், 'ஏசி' எல்லா, 'பாத்ரூம்'லேயும், 'ஷவர்' எல்லா இடத்துலயும் கண்ணாடி, கடல் காத்து வீசற பால்கனி. அண்ணே, நிஜமா நாம இந்த வீட்டுக்கு தான் குடிவரப் போறோமா?' என, அப்போதும் நம்பிக்கையின்றி கேட்டனர்.

தங்கைகளிடம் தெரியும் சந்தோஷம் ஒருபுறம், எதிரிலேயே தெரியும் ஆபத்து ஒருபுறம், தற்காலிகமாய் சிரித்து சமாளிக்க துவங்கினான், தனஞ்ஜெயன்.

''இந்த வீடு நம்ம அம்மாவுக்கும், சாந்தி அக்காவுக்கும் கூட ரொம்ப பிடிக்கும். நாம இங்க வந்துட்டா அக்கா கல்யாணமும், அவ ஆசைப்படற மாதிரியே நடந்துடும்,'' என்று சாந்தியின் கல்யாணத்தை ஞாபகப்படுத்தினாள், ஸ்ருதி.

ஒரு நல்ல வரன், சாந்தியை தேடி வந்தது. மாப்பிள்ளைக்கு, சாந்தியை மிக பிடித்துவிட்டது. ஆனால், 10 பவுன் கூட போட முடியாத நிலை, அதை தடுத்துவிட்டது. இப்போது அந்த வரனுக்கு உயிர் வந்துவிட்டதைப் போல பேசினாள், ஸ்ருதி.

அதை எல்லாமும் நினைத்தபடியே, ''அப்புறமா அம்மாவையும், அக்காவையும் கூட்டி வந்து காட்டிடுங்க. எனக்கு இப்ப ஒரு அவசரமான வேலை இருக்கு புறப்படுங்க,'' என்றான், தனஞ்ஜெயன்.

மீண்டும் எதிரே பார்க்க, அந்த, 'பைனாகுலர்' மனிதன் பார்த்தபடியே தான் இருந்தான்.

முதல் தடவையாக, தனக்கான காரில், 'டை' கட்டி, 'இன்' செய்த நிலையில் மிக மிடுக்காக, கிருஷ்ணராஜின் பங்களாவுக்குள் நுழைந்தான், தனஞ்ஜெயன்.

தாடியும், மீசையுமாய், தளர்வாய் பார்த்தவனை, புதிய பொலிவில் பார்த்த, கார்த்திகா, ''ஹீரோ மாதிரியே இருக்கீங்க, தனா,'' என்றாள்.

அவளிடம், பணி நியமன உத்தரவை நீட்டி, ''ஆசிர்வாதம் பண்ணுங்க,'' என்றான், தனஞ்ஜெயன்.

''நானா, நோ நோ...'' என்று சற்று பதைத்தவள், ''இந்த சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம், தனா. அப்பார்ட்மென்ட் பிடிச்சிருக்கா. உங்க தங்கைகள் என்ன சொன்னாங்க?'' என்றாள்.

''அவங்களுக்கு இன்னும் கூட நம்பிக்கை வரல, மேடம். 'சினிமாவுல ஒரு பாட்டுல கதாநாயகன் கோடீஸ்வரனாகற மாதிரி காட்டுவாங்க. அப்படி இருக்கு அண்ணே. இது நிரந்தரமா நீடிக்குமா'ன்னும் கேட்டுட்டாங்க,'' என்றான், தனஞ்ஜெயன்.

''அப்ப அவ்வளவு துாரம் நம்பாம இருந்திருக்காங்க. அப்படி தானே?''

''ஆமா, ஒரே ஒரு நல்ல சுடிதார் தான் இருக்கு. அதை ஏதாவது விசேஷம்ன்னா ஒருத்தர் தான் போட்டுக்க முடியும். மாறி மாறி போட்டுகிட்டு சமாளிப்பாங்க. தினமும், 10 ரவிக்கையாவது தைப்பா, சாந்தி அக்கா. ஆனா, அவளுக்கிருக்கறது ரெண்டோ, மூணோ தான். எங்கம்மா கை, எப்பவும் வெள்ளை வெளேர்ன்னு இருக்கும். காரணம், எலுமிச்சம் பழம் நறுக்கி நறுக்கி அந்த சாறு பட்டதால...'' என, உருக்கமாக கூறினான், தனஞ்ஜெயன்.

''இப்ப தான் எனக்கு நல்லா புரியுது, மிஸ்டர் தனா. நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாம இந்த வேலைல ஏன் சேர்ந்தீங்கன்னு,'' என்றாள், கார்த்திகா.

''எங்க வறுமை மட்டும் நிச்சயம் காரணமில்லை, மேடம்.''

''வேறென்ன காரணம்?''

''தப்பு செஞ்ச ஒருத்தர் திருந்த நினைக்கறார். அதுக்கு நான் உதவப் போறேன். இது ஒரு நல்ல விஷயம் தானே?'' என்றதும், அவனை ஆழமாக பார்த்தாள், கார்த்திகா.

''மேடம், அந்த இரண்டாவது அசைன்மென்ட்?'' மெல்ல அவளிடம் வினவினான், தனஞ்ஜெயன்.

''சொல்றேன், தனா. அந்த விவேக் அப்புறமா போன் பண்ணானா?''

''இல்லை, மேடம். ஆனா, ஒருத்தன் என்னை, 'பாலோ' பண்ண ஆரம்பிச்சுட்டான்.''

''அப்படியா, அதை எப்படி கண்டுபிடிச்சீங்க?'' என்றாள்.

அப்பார்ட்மென்ட் ஜன்னல் வழியே பார்த்த, 'பைனாகுலர்' மனிதன் பற்றி சொல்லி முடித்தான், தனா. அடுத்த வினாடியே சிந்திக்கத் துவங்கினாள், கார்த்திகா.

''என்ன மேடம். அவங்க அடுத்து என்ன செய்வாங்கன்னு யோசனையா?''

''ஆமாம். திருப்பதி விஷயத்துல தோத்துட்டதால, ரெண்டாவது விஷயத்துல ரொம்பவே ஆக்ரோஷமா இருப்பாங்க.''

''அது என்னன்னே சொல்ல மாட்டேங்கிறீங்களே?''

''சொல்றதை விட, காட்றது தான் முதல்ல சிறப்பு. கொஞ்சம் என் கூட வாங்க'' என்று, தனஞ்ஜெயனை அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்றாள், கார்த்திகா.

தரையில் காஷ்மீர் கார்ப்பெட் விரிக்கப்பட்டு, ரம்மியமாக இருந்தது, அறை. நடுநாயகமாக நடராஜர் சிலை இருக்க, இருபுறமும் விளக்கெரிந்து கொண்டிருந்தது.

''தனா, நான் இங்க தான், பரதம் கத்துப்பேன். இந்த பங்காளாவுலேயே ரொம்ப புனிதமான இடம் இது,'' என்றவள், அந்த அறையில், சுவரை ஒட்டியிருந்த ஒரு மர பீரோவின் கதவை சாவி கொண்டு திறந்தாள்.

அது திறந்து கொண்ட நிலையில், உட்புறத்தில் சுவரோடு சுவராக ஒரு கதவு. தன்வசம் இருந்த, 'ரிமோட் பட்டனை' அழுத்தவும், அந்த கதவு திறந்து கொள்ள, அதற்கு பின் ஒரு அறை தெரிந்தது!

அதனுள் நுழைந்து கார்த்திகா, காலை வைக்கவும், பளிச்சென்று விளக்குகள் எரியத் துவங்கியது. இதை பார்த்தபடி இருந்த, தனஞ்ஜெயனுக்கு திகைப்பாக இருந்தது. அவளை பின் தொடர்ந்து அவன் உள்நுழைந்த மறு வினாடியே, அந்த கதவு மூடிக் கொண்டது.

உள்ளே மியூசியம் போல் ஒரு அமைப்பு, சுவரை ஒட்டி மேஜைகளும், அவற்றின் மேல் தெய்வ விக்ரகங்களும் இருந்தன. நடராஜர், நர்த்தன கிருஷ்ணர், மரகத லிங்கம், துர்க்கை மற்றும் விநாயகர் என, அறை முழுக்க சிலைகள்.

''என்ன மேடம் இதெல்லாம்?'' என்றான், தனஞ்ஜெயன்.

''அவ்வளவும் ஐம்பொன்னாலான சிலைகள், தனா. எல்லா சிலைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தினவை,'' என்றாள், கார்த்திகா.

''அப்ப இதெல்லாம்?''

''எங்கப்பாவும், அந்த விவேக்கோட அப்பா தாமோதரனும் திட்டம் போட்டு திருடிய சிலைகள்.''

''மைகாட் இவ்வளவு சிலைகளா?''

''இது கொஞ்சம் தான். இதைப் போல பல மடங்கு அந்த, தாமோதரனிடம் இருக்கு. சரிபாதிக்கும் அதிகமாக, வெளிநாட்டுக்கு வித்தாச்சு.''

''அப்ப இதை?''

''இதை எந்த கோவில்ல இருந்து திருடினாங்களோ, அந்த கோவில்லயே வெச்சுடணும்.''

''ஓ, இதான் அந்த இரண்டாவது அசைன்மென்ட்டா?''

''ஆமாம், வைக்கறது தெரியாம வைக்கணும்.''

''வைக்கறது தெரியாமல்ன்னா?''

''திருடப் போகற மாதிரியே போகணும். ஆனா, திருட இல்ல, வைக்க.''

''புரியுது, மேடம். இதை நேர்ல ஒப்படைச்சா, போலீஸ் கைது செய்து தண்டனை கிடைக்கும். அதனால யார் திருடினதுங்கறதே தெரியக் கூடாது. அப்படிதானே?''

''அப்படியே தான். அப்பா தண்டனைக்கு பயப்படலை. சிறைக்கு போயிட்டா மேற்கொண்டு செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்ய முடியாம போயிடும்கறதால அவர் தயங்கறார்.''

''அப்ப இதைத் தொடர்ந்து இன்னும் நிறைய, 'அசைன்மென்ட்ஸ்' இருக்கா?''

''ஆமாம், எனக்கொரு அண்ணன் இருக்கான். ஆனா, அவன் எங்க இருக்கான்னு தெரியாது. அவனை கண்டுபிடிக்கணும்.''

''வீட்டை விட்டு சின்ன வயசுலயே ஓடிட்டாரா?''

''இல்லை. பிறந்த குழந்தையா குப்பைத் தொட்டியில போடப் பட்டார்.''

''என்ன மேடம் சொல்றீங்க?''

''எங்கப்பா தன்னிடம் வேலை பார்த்த ஸ்டெனோ கிராபரோடு தொடர்பு இருந்தது. அதுல உண்டானவன் தான், அந்த ஆண் குழந்தை. அந்த ஸ்டெனோவை அடிச்சு துரத்திட்டார், அப்பா. அவளோ, தான் பெத்த குழந்தையை, குப்பை தொட்டில போட்டுட்டு, ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகிட்டா,'' ஈன சுரத்தில் தான் பேசினாள், கார்த்திகா. அவள் தொண்டையை அடைத்தது.

''ஓ, இப்படி எல்லாம் கூட நடந்திருக்கா?''

''ஆமாம். இந்த உண்மைகளை அப்பா என்கிட்ட சொல்லி அழுதப்ப என்னால ஜீரணிக்கவே முடியல. 'என்ன மட்டும் ஏம்ப்பா விட்டு வெச்சீங்க?'ன்னு கேட்டேன். அவரால பதில் சொல்ல முடியல.''

கார்த்திகாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. ஒரு வித ஸ்தம்பிப்பு, தனஞ்ஜெயனிடம்.

''என்ன தனா, ஏன்டா இந்த வேலைல சேர்ந்தோம்ன்னு இருக்கா?'' என கேட்க, அவனால் எதுவுமே பேச முடியவில்லை.

''ஒண்ணும் பிரச்னையில்லை. இப்ப கூட நீங்க விலகிக்கலாம். ஒரே ஒரு வேண்டுகோள் தான். என் அப்பா பற்றிய இந்த உண்மைகளை மட்டும் நீங்க யார் கிட்டயும் சொல்லாம இருந்தா அதுவே போதும் எனக்கு,'' பரிதாபமாக கூறினாள், கார்த்திகா.

சில வினாடிகள் மவுனமாக இருந்தவன், ''மேடம், நான் முன்வெச்ச காலை இனி எதற்காகவும் பின் வைக்கப் போவது இல்லை.

''நாம இப்ப நம்ம அடுத்த, 'அசைன்மென்ட்'டை எப்படி செய்யறதுன்னு முடிவு செய்யப் போறோம். அதைப் பத்தி பேசுவோமா?'' என, தீர்க்கமாக பேசினான், தனஞ்ஜெயன்.

கார்த்திகாவுக்கும் அது சற்று ஆறுதலாக இருந்தது.

அப்படியே திரும்பி அருகில் இருந்த நடராஜர் சிலையிடம் சென்றவள், ''இது பழமையான கீழனுார் சிவன் கோவில்ல திருடின சிலை. திரும்ப அங்க வைக்கணும்'' என்றாள், கார்த்திகா.

''ஒரு அட்டைப் பெட்டியில வெச்சு, பார்சல் மாதிரி கொண்டு போய் இறக்கிட்டு வந்துட முடியாதா?'' என்றான், தனஞ்ஜெயன்.

''ஒரு செகன்ட் கூட யோசிக்காம பதில் சொல்லிட்டீங்களே... இதை நான் யோசிச்சிருக்க மாட்டேனா?'' என்று திரும்பிக் கேட்டாள், கார்த்திகா.

''ஏன், அதுல என்ன கஷ்டம்?''

''விவேக்குங்கற வில்லனை மறந்துட்டீங்களா?''

''ஓ, அவன் குறுக்க வருவானா?''

''வருவானாவா? இதுக்கு பல கோடி ரூபாய் விலை பேசி, வெளிநாட்டுக்கு கடத்த அவன் துடிச்சிகிட்டிருக்கான். இங்க என் வீட்டுக்குள்ள இப்படியொரு, 'செட்-அப்'ல சிலைகள் இருக்கறது எனக்கும், அப்பாவுக்கும், இப்ப உங்களுக்கும் தவிர, யாருக்கும் தெரியாது.

''இதை அப்பா எப்படியும் கோவிலுக்கு திரும்ப கொடுத்துருவார்ன்னு அவனுக்கும் தெரியும். அப்படி கொடுத்தா அதை வெளியே தெரியாதபடி விவேக்கிட்ட கொண்டு போய் கொடுத்திட கோவில்லயே பலர் இருக்காங்க.

''அதனால இது யாருக்கும் தெரியாத மாதிரி, கோவிலுக்கு போய் சேரணும். அதேசமயம் இதை நாம தான் செய்தோம்கறது தெரியக் கூடாது,'' என்று பிரச்னையின் காரணங்களை சொல்லி முடித்தாள், கார்த்திகா.

தனஞ்ஜெயனும் யோசிக்க துவங்கினான்.



- தொடரும்.

- இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us