
அன்புள்ள அம்மாவுக்கு -
என் வயது: 35. கணவர் வயது: 41. நான், பட்டப் படிப்பு படித்துள்ளேன். இல்லத்தரசி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார், கணவர்.
எங்களுக்கு, 12 வயதில் ஒரு மகள், ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். வீட்டில் இருக்கும் நேரத்தில், 6 வயது குழந்தை போல் நடந்து கொள்கிறாள். தானாக எந்த வேலையும் செய்து கொள்ள மாட்டாள்.
நான் தான் குளிப்பாட்டி, டிரஸ் போட்டு விடணும். சாப்பாடு கூட நான் ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவாள். துாங்கும் போதும், நான் கதை சொல்லி துாங்க வைக்க வேண்டியுள்ளது.
பள்ளியில், நார்மலாக இருக்கிறாள். மதிய உணவை, தோழியருடன் அமர்ந்து சாப்பிடுவாளாம். புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்துக் கொள்வாளாம். இறகு பந்து விளையாட்டில் அவளுக்கு ஆர்வம் இருப்பதால், தினமும் மாலையில், பள்ளியில் விளையாடி விட்டு தான் வருகிறாள். முதல் ரேங்க் எடுக்கா விட்டாலும், 10 ரேங்குக்குள் வந்து விடுவாள்.
வீட்டுக்கு வந்ததுமே, குழந்தை போல் மாறி விடுகிறாள். கணவரிடம் கூறினால், 'போக போக சரியாகி விடும்...' என்கிறார்.
கடைக்கோ, சுற்றுலா தலங்களுக்கோ அழைத்துச் செல்லும்போதும், குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறாள். மற்றவர்களின் ஏளன பார்வைக்கும் ஆளாக வேண்டியுள்ளது.
இது, அவளது எதிர்காலத்தை பாதிக்குமோ என்று பயப்படுகிறேன். மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாமா? இப்பிரச்னையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.
தக்க ஆலோசனை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு -
உன் 12 வயது மகள் 6 வயது குழந்தை போல வீட்டிலும், கடையிலும் சுற்றுலா தளங்களிலும் நடந்து கொள்வதற்கான காரணங்களை வரிசைபடுத்துவோம்.
* பனிரெண்டு வயதுக்குரிய யதார்த்தங்களையும், பொறுப்புகளையும் தட்டிகழிக்க, உன் மகள் 6 வயது குழந்தை போல பாசாங்கு செய்கிறாளோ என்று தோன்றுகிறது.
* குட்டி பாப்பாவாக இருந்தபோது, ஆறாத ரண நிகழ்ச்சியும், பிரச்னைகளின் எதிரொலியே குழந்தை நடத்தைக்கான அடிப்படை.
* உலகில் எல்லாருமே ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமான குரலில் பேசுகிறோம். பெற்றோரிடம் ஒரு மாதிரி, மனைவியிடம் ஒரு மாதிரி, முதலாளியிடம் ஒரு மாதிரி, மகன் மகளிடம் ஒரு மாதிரி. ஆகவே, மகளின் குழந்தை நடத்தை இயல்பான விஷயம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
* உன் மகள் உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிறிது சிறிதாக பக்குவமடைய திணறுகிறாள் என, அர்த்தம்.
* இளமை பருவ சவால்களை நேர்கொள்ள கடுமையாக போராடுகிறாள் மகள்.
* வயதுக்குரிய சுதந்திரத்துக்கு உன் மகள் தவிக்கிறாள் என்பது கூட ஒரு காரணம்.
* சக தோழிகள் நடத்தையை, உன் மகள் நகலெடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.
* நடத்தை கோளாறு, எதிர்ப்பு பற்றாக்குறை கோளாறு, அவதானக்குறை மிகை இயக்கக் குறைபாடு போன்று இதுவும் ஒரு மன நல கோளாறாய் கூட இருக்கலாம்.
இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்.
* மகளிடம் ஹிட்லர் போல கண்டிப்பு காட்டாதே. இப்படி நட, அப்படி நட, இப்படி படி, அப்படி படி என்று, அவளை பலவந்தப்படுத்தாதே. அம்மா என்ற விதத்தில், உன் மேல் அவளுக்கு அன்பும், மரியாதையும் இருக்கலாம், பயம் வேண்டாம்.
* மகளிடம் தினம் ஒரு மணிநேரம் மனம் விட்டு பேசு. அம்மா ஸ்தானத்திலிருந்து இறங்கி தோழி ஸ்தானத்தில் பேசு. அவளுடைய ஆவலாதிகளை நிவர்த்தி செய்.
* உனக்கும், மகளுக்கும் இடையே கண்களால் பேசும் தகவல் தொடர்பு இருக்கட்டும். வெளியில் மகள் சிறு குழந்தை போல நடக்க முயற்சிக்கும் போது கண்களால் பேசி இதமாய் அதை சரி செய்.
* மனநல பெண் மருத்துவரிடம் மகளை அழைத்து போய் காட்டு. மன நல பிரச்னை எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யலாம்.
* மகளின் தோழியரை தணிக்கை செய். யாராவது குறும்பன் அல்லது குறும்பி மகளுக்கு துர் நடத்தை கற்றுத் தந்தால் அவர்களை கத்தரி.
* மகள் விரும்பும் வளர்ப்பு பிராணியை, வளர்க்க அனுமதி.
* மகள் பூப்படைய போகிறாளா என்பதையும் கவனி. அது ஒரு வெறும் உயிரியல் நிகழ்வு என்பதை விளக்கு. உன் மகளுக்கு தார்மீக ஆதரவு கொடு.
* மகளை மகளாக பார். உன் நிறைவேறாத கனவுகளை ஆசைகளை நிறைவேற்றப் போகும் இயந்திரப் பெண்ணாக பாவிக்காதே.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.