
தைப்பூசம் என்றதும், நினைவுக்கு வருவது, வடலுார் மற்றும் பழனி. வடலுாரில், தைப்பூச ஜோதி தரிசனக் காட்சியும், பழனியில், தைப்பூசக் காவடி சிறப்பும் பெருமைக்குரியன.
சிவனுக்கு, சூரியனும், சந்திரனும் இரு கண்களாயினும், அக்னியை நெற்றிக் கண்ணாக பெற்றிருக்கிறார். ஒளிமயமான இம்மூன்றும் இருளை நீக்கி வெளிச்சத்தைத் தரத்தக்கது.
இவ்வெளிச்சத்தைப் போல், அறியாமையாகிய அக இருளிலிருந்து ஆன்மா, இறைவனாகிய வெளிச்சத்தில் ஐக்கியமாகும் போது, உய்வு பெறும் என்பது, வள்ளலாரின் தத்துவம்.
இந்த அடிப்படையில் தான், அருட்பா அருள் விளக்க மாலையில் ஆண்டவனை, 'அருள் விளக்கே, அருட்சுடரே, அருட்ஜோதிச் சிவமே...' என்று வழிபடுகிறார், வள்ளலார். 'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி...' என்பதே, வள்ளலாரின் தாரக மந்திரம்.
'ஜோதியே, சுடரே சூழ் ஒளி விளக்கே...' என பாடி, இறைவனைக் கண்டார், மாணிக்கவாசகர். தில்லையம்பலச் ஜோதியில் ஐக்கியமானாலும், முதன் முதலில் அவர், இறைவனைத் திருப்பெருந்துறையில் ஜோதி மயமாகப் பார்த்தார்.
ஜோதிப் பிழம்பான சிவபெருமான், தன் நெற்றியின் அக்னி சுடரிலிருந்து முருகனாகிய தீப்பொறியை உண்டாக்கினார். இந்த முருகனாகிய பொறி தான் அடியார் உள்ளத்தில், 'மருவாய், மலராய், மணியாய், ஒளியாய்...' உள்ளான்.
இங்கே கூறிய ஒளியை மணியின் ஒளியாகவும், விளக்கின் ஒளியாகவும் கொள்ளலாம். இப்படி ஜோதிக்கும், முருகனுக்கும் தொடர்பிருப்பதால் தான், உத்ராயணத் துவக்கமாகிய தைத் திங்கள் கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டது.
தைப்பூசத்தன்று தான், அன்னை உமாதேவி, முருகனுக்கு வேல் தந்து, தாரகனைக் கொன்று வர அனுப்பினார். மேலும், தேவலோக ஞானாசிரியனாகிய வியாழ பகவானிடம் (பிரகஸ்பதி), முருகன் ஞானோபதேசம் பெற்று, ஞான பண்டிதனாக ஆனான் என்றும், பழனி தல புராணம் கூறுகிறது.
இதையே, 'ஞான பண்டிதசாமீ நமோ நம...' என்றார், அருணகிரிநாதர். அறிவுத் தெளிவே ஞானம். அதன் விளக்கமே நிறைமதி நன்னாள். அதைப் பெற முயலும் கொண்டாட்டமே தைப்பூசப் பெரு விழா.
தைப்பூசத் திருநாளில் கந்தன் காலடி பணிவோம். எண்ணியன யாவும் ஈடேறப் பெற்று இன்புறுவோம்!
தொகுப்பு: ரா. அருண்குமார்