PUBLISHED ON : ஜன 21, 2024

அடிமை சங்கிலி தகர்த்து
விடுதலைக்கு வித்திட்டு
குடியுரிமை பெற்று தந்த
வீரத் தலைவர்களின்
பாதம் பணிவோம்!
சீர்மிகு இளைஞர்கள்
கல்விதனில் சிறந்து
நன்னெறிகள் காத்து
வாழையடி வாழையாக
தலைமுறை காக்கட்டும்!
நாட்டை சீரழிக்கும்
பிரிவினைவாதிகளின்
தீய சக்திகளை வீழ்த்தி
சமத்துவம் வித்திட்டு
சம உரிமை பெறட்டும்!
இயற்கை வளம்
சூறையாடும் தேச விரோத
ஒட்டுண்ணிகளை
மண்ணில் சாய்த்து
மண் வளம் சிறக்க
சட்டம் வலுப்பெறட்டும்!
புரையோடி கிடக்கும்
ஊழலின் ஊற்றுக்கண்
அடைத்து, மக்கள் நலன்
காக்கும் நிர்வாகம்
அமைய ஒன்றுபட்டு
எழுச்சி காணட்டும்!
நரம்புகள் புடைத்து
வார்த்தைகள் தடித்து
இன ஒற்றுமையை
சீர்குலைக்கும்
மத தீவிரவாதத்தை
வேரோடு சாய்த்து
இந்திய பேரரசின்
மகத்துவம் போற்றட்டும்!
அகிம்சை வென்றது
குடியுரிமை கிடைத்தது
தனி சட்டம் உருவானது
ஒற்றுமை கனிந்தது
காலத்தை வென்று
தலைமுறை காக்கும்
பண்பாடு சிறக்கட்டும்!
ஒற்றுமை நிலைக்கட்டும்
மக்கள் நலன் சிறக்கட்டும்
தேசிய கொடி பறக்கட்டும்
தேச பக்தி ஒளிரட்டும்
தேசியம் ஓங்கட்டும்!
குடியரசு தின நன்நாளில்
நாம் சபதம் ஏற்போம்!
— வி. சுவாமிநாதன், சென்னை.