sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

துபாய்காரன் பொண்டாட்டி!

/

துபாய்காரன் பொண்டாட்டி!

துபாய்காரன் பொண்டாட்டி!

துபாய்காரன் பொண்டாட்டி!


PUBLISHED ON : ஜன 21, 2024

Google News

PUBLISHED ON : ஜன 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுகன்யாவின் மொபைல் போன், வெகுநேரமாக அடித்துக் கொண்டிருந்தது. கொல்லைப் பக்கம், மாடுகளுக்கு தீவனம் கரைத்துக் கொண்டிருந்த, அம்மா தெய்வாம்பிகையிடம் வந்தாள், கோமதி.

தன் மொபைல் போனிலிருந்து கண்களை எடுக்காமலே, ''அம்மா... அண்ணி எங்க போச்சு? அதோட போன் ரொம்ப நேரமா அடிச்சுக்கிட்டே இருக்கு,'' என்றாள்.

''கோவிலுக்கு போறதா சொன்னா. அதிசயமாயிருக்கு, போனை வச்சுட்டுப் போயிருக்காளா... கர்ணன் கவச குண்டலத்தோட பொறந்த மாதிரி எந்நேரமும் கையிலத்தானே வச்சுக்கிட்டிருப்பா? போய் யாருன்னு பாரு,'' என்றாள், அம்மா.

மாட்டு கொட்டகை பக்கத்திலிருந்த சிமென்ட் தீவனத்தொட்டி ஓரம் அமர்ந்தவாறே, ''நான் முக்கியமான வேலையில் இருக்கேன். நீ போய் பார்,'' என்றாள், கோமதி.

''கண்றாவி... இந்த மொபைல் போனால ஒரு நாயும் உருப்படப் போறதில்லை,'' திட்டியபடியே கையை கழுவி, உள்ளே வந்தாள், தெய்வாம்பிகை. தொடர்ந்து ஒலித்த மொபைல் போன் அழைப்பில், எரிச்சலானாள்.

யார் அழைப்பது என்பதை கூட பார்க்காமல் எடுத்து, ''ஹலோ...'' என்றாள், தெய்வாம்பிகை.

''அம்மா...'' ஆனந்தனின் குரல் கேட்டதுமே, அடி வயிறு உருக ஆரம்பித்தது.

''அப்பா... நல்லாயிருக்கியா?'' கேட்கும்போதே கண்களில் கண்ணீர் பொங்கியது.

துபாயில் இருக்கும் மகனின் குரலை கேட்கும் ஒவ்வொரு முறையும், அவளுடைய கண்கள் குளம் கட்டிக் கொள்வது வழக்கம் தான்.

''ராத்திரியிலதானேப்பா போன் பண்ணுவ? அதான், யாரோன்னு நினைச்சுட்டேன்.''

''உடம்பு சரியில்லைம்மா. இன்னைக்கு லீவு போட்டுட்டேன்,'' என்றான்.

''ஐய்யய்யோ... என்னப்பா ஆச்சு?''

''அம்மா... லேசா தலைவலி, வேற ஒண்ணுமில்லை. ஆமா, சுகன்யா எங்கே?''

''அவ, கோவிலுக்கு போயிருக்கா. எங்க போனாலும், செருப்பு போட மறந்தாலும் மறப்பாளே தவிர, மொபைல் போனை மறக்க மாட்டா. என்னமோ அதிசயமா வெச்சுட்டுப் போயிருக்கா.''

''சாமி கும்பிடும் போது, தொந்தரவா இருக்க வேணாம்ன்னு வச்சுட்டுப் போனாளோ என்னமோ?''

தோள் பட்டையில் முகவாயை இடித்தபடி, ''ஆமா... உன் பொண்டாட்டியை விட்டுத் தரமாட்டியே,'' என்றாள், தெய்வாம்பிகை.

''அம்மா, கோமதியை வந்து பார்த்துட்டுப் போனதா சொன்னியே... அந்த வீட்டுலேர்ந்து சேதி ஏதாவது வந்ததா?'' என்றான், ஆனந்தன்.

''அந்த இடம் சரிப்பட்டு வராது,'' திடீரென வெறுப்பை வெளிப்படுத்தினாள், அம்மா.

''ஏம்மா...''

''அவன் குடிகாரப் பயலாம். பொண்டாட்டி வந்தா, திருந்திடுவான்னு தரகன் சொல்றான். பெண்ணை சமைக்க சொல்லிக் கொடுத்துத்தான் வளர்த்துருக்கோம். சமுக சீர்திருத்தம் பண்ணவா, நாம பிள்ளையை வளர்த்து வச்சிருக்கோம்? அதே கவலையாத்தான் இருக்கு. இவளை நல்லவன் ஒருத்தன் கையில் புடிச்சுக் கொடுத்துட்டா, ஒரு பாரம் குறைஞ்சுடும்.''

அம்மாவின் பெருமூச்சு வெப்பம் அங்கே அவனை சுட்டிருக்க வேண்டும்.

''கவலைப்படாதம்மா, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லத்தான், போன் பண்ணினேன். இங்க என் கூட, ஒரு பையன் வேலை செய்யறான். பேர், சுரேஷ். சொந்த ஊர், தஞ்சாவூர். ரொம்ப நல்ல குணம். பொறுப்பானவன்; உழைப்பாளி.

''என்னை விட அதிக சம்பளம் வாங்குறான். பார்க்க சேட்டு வீட்டு பிள்ளை மாதிரி செவசெவன்னு இருப்பான். நம் ஊருக்கு தான் வர்றான். அவன்கிட்ட துணிமணியும், பணமும் கொடுத்து விட்டுருக்கேன். நம் வீட்டுக்கு வருவான்.

''சாடை மாடையா பார்த்து வச்சுக்க. இங்க வந்ததும், அவனை நம் கோமதிக்கு பேசலாம்ன்னு இருக்கேன். கோமதியை, காபி கொடுக்க சொல்லி, அவன் பார்வையில படற மாதிரி பார்த்துக்க. என்ன சொல்ற?'' என்றான்.

அந்த கணமே சம்பந்தியாகி, தட்டு மாற்றும் நிலைக்கு தடுமாறத் துவங்கினாள், தெய்வாம்பிகை.

''கேட்கவே ரொம்ப சந்தோஷமாய் இருக்குப்பா.''

''தங்கச்சியைக் கட்டிக் கொடுத்தாலும், என் பக்கத்திலயே இருந்து, வேலை பார்க்கப் போறான். எதுன்னாலும் நான் பார்த்துப்பேன்.''

''அப்பா... பாலை வார்த்துட்ட. இந்த கோமதி பிள்ளையும் ரொம்ப வெகுளியா இருக்கு. கல்யாணத்துக்குப் பிறகு, நம் வீட்லயே வச்சுக்கலாம். எனக்கும் பிள்ளையை பிரிஞ்சி இருக்க முடியாது.''

''ஆமாம்மா... அதையும் யோசிச்சுத்தான் நான் முடிவு பண்ணினேன்.''

''சரிப்பா!''

''சரிம்மா... அப்புறமா, சுகன்யாகிட்ட பேசிக்கிறேன்.''

''அப்பா... நீ பேசும்போது, கொஞ்சம் ஜாக்கிரதையா பேசு.''

''ஏம்மா?''

''அந்த பையனை பற்றி, சாதாரணமா சொல்லி வை. அப்படி இப்படின்னு உளறிடாத. உன் பொண்டாட்டி வாய், மாரியாத்தா கோவில்ல கட்டியிருக்கற, 'ஸ்பீக்கர்' மாதிரி. கொசு கூட்டம் மாதிரி அவ சொந்தக்காரக் கூட்டம். ஊர் பூரா காலரா மாதிரி பரப்பிட்டுத்தான் மறு வேலை பார்க்கும்.''

''சரிம்மா....'' அக்கம் பக்கத்தை அலசி, ஊர் உலகத்தை விசாரித்தவனிடம் பேசி முடித்து மொபைல் போன் இணைப்பை துண்டித்தாள்.

புது தெம்புடன் பின்கட்டுக்கு வந்து, ''இந்தாடி... அந்த மொபைல் போனை துாக்கிப் போட்டுட்டு இங்க வா,'' என்றாள், அம்மா.

''வர்றேம்மா... அதுக்காக பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை துாக்கியெல்லாம் போட முடியாது,'' என்றபடியே எழுந்து வந்தாள்.

''ஆமா, பத்தாயிரம்! இனிமே நீ, 50 ஆயிரத்துக்கு கூட வாங்கிக்கலாம்டி.''

''ஏம்மா... உன்கிட்ட அவ்வளவு காசு இருக்கா?''

''உன்கிட்டயே காசு வரப்போவுது.''

''அதெப்படிம்மா...'' என, ஆச்சரியமானாள்.

மகள் அருகே வந்ததும், ஆசையுடன் கன்னத்தை தடவி, விஷயத்தை சொன்னாள், அம்மா.

கோமதியின் கண்களில் கோடி நட்சத்திரங்கள் ஜொலித்தன.

''நெசமாவா?''

''ஆமாம்டி... இப்ப உன் அண்ணிக்காரி வருவா. லுாசு மாதிரி எல்லாத்தையும் அவகிட்ட சொல்லிடாத.''

''எல்லாத்தையும்ன்னா...''

''அந்த சுரேஷ் பையன், அண்ணனை விட டபுள் பங்கு சம்பாதிக்கறதைத்தான். அவ்வளவு தான், இவ அப்படியே வயிறு எரிய ஆரம்பிச்சுடுவா. அந்த எரிச்சல்ல எல்லாமே கருகிடும். நம்மை விட, நம் நாத்தனார் பணக்காரியா ஆயிடுவாள்ன்னு நினைச்சு, இந்த கல்யாணத்தை தடுக்க கூட நினைப்பா.

''ஊர்ல, தான் மட்டும்தான் துபாய்க்காரன் பொண்டாட்டின்னு, கர்வமா நடக்கணும்ன்னு நினைப்பா. அப்புறம், உன்னையும் துபாய்காரன் பொண்டாட்டின்னு சொல்லிட்டா, அவளுக்கு பொறுக்குமா? அதுக்குன்னே கலகம் பண்ணுவா. அதனால, வாயை வச்சுக்கிட்டு சும்மா இரு,'' என்றாள், அம்மா.

''அம்மா, நீ என் வாயை அடைக்கலாம். ஆனா, ராத்திரியில போன் பண்ணி பொண்டாட்டிக்கிட்ட விடிய விடிய அண்ணன் பேசுமே. அது சொல்லாதா?''

''சொல்லக் கூடாதுன்னு கண்டிச்சிருக்கேன்டி.''

''பொண்டாட்டியை பற்றி பொறாமைப்படுவாள்ன்னு சொன்னா, உன்னைப் பற்றி என்ன நினைக்கும்?''

''நான் என்ன, உன்னை மாதிரி லுாசா? அவ ஒரு ஓட்டை வாய். அம்மா வீட்ல சொன்னா, அவ ஜாதி சனமெல்லாம் ஆவேசப்படும்ன்னு சொன்னேன்டி.''

''ஓ... அண்ணியோட சொந்தக்காரங்க தலையில போட்டுட்டியா? பலே ஆளுதாம்மா நீ!''

ஆனந்தன் சொன்னது போலவே, அடுத்து வந்த வெள்ளிக்கிழமை அன்று, போன் செய்து, வீட்டுக்கு வந்தான், சுரேஷ்.

தோற்றம் சுந்தரமாக இருந்தது. பார்வை பளிங்கின் சுத்தமாக இருந்தது. சொற்கள் கற்புடையவையாக இருந்தன.

காபி கொண்டு வந்த கோமதியை பாய்ந்து பார்வையால் விழுங்காமல், பெயர், படிப்பு என கேட்டது, பண்பாடாக இருந்தது.

அவனுடைய அந்தஸ்தில் அம்மா மயங்க... அவனுடைய அழகில் மகள் மயங்க... விடைப்பெற்றான், சுரேஷ்.

இரவு, ஆனந்தன் போன் செய்தபோது, தன் பரவசத்தையெல்லாம் பானை உடைந்த பாலாய் வழிய விட்டாள், அம்மா.

''தம்பி... ரொம்ப நல்லாயிருக்காம்பா. என்னா அடக்கம், என்னா பண்பு... பார்த்தாலே தெரியுதுப்பா, நல்ல குடும்பம்ன்னு. எனக்கு ரொம்ப பிடிச்சுடுச்சு. எப்படியாவது பேசி முடிச்சுடுப்பா.''

''உனக்கு பிடிச்சா போதுமா, கோமதி என்ன சொல்றா?''

''சொக்கிப் போயிட்டாள்ன்னு வச்சுக்கயேன்.''

''சரி... சுகன்யாகிட்ட கொடு!''

''தர்றேன், சொன்னது ஞாபகம் இருக்கட்டும். எல்லாத்தையும் உளறிக் கொட்டிடாத. கொசு கூட்டத்தை ஞாபகம் வச்சுக்க.''

''தெரியும்மா, கொடுங்க.''

''இந்தா சுகன்யா...'' என்றாள்.

அவள் மொபைல்போனை எடுத்துக் கொண்டு, தன் அறைக்கு சென்று கதவை சாத்திக் கொள்ள, தெய்வாம்பிகைக்கு திக்கென்றது.

''என்னடி... இவ, இங்க பேசாம அறைக்கு போறா?''

''புருஷன்கிட்ட பேசறவ, என்ன பொது மேடையில ஏறிக்கிட்டா பேசுவா?''

''கூறு கெட்டவளே... அவ ஒண்ணும் கொஞ்சி பேச அறைக்குள்ள போவலை. குடும்பம் கலைக்கப் போறாடி.''

''உளறாதம்மா...''

''அந்த பையனை பற்றி தப்பு தப்பா பேசி, இந்த சம்பந்தத்தை கெடுக்கப் போறாடி. அந்த பையனைப் பார்த்ததுலேர்தே அவ மொகரை நல்லா இல்லடி. வா ஜன்னல் பக்கம் போய், அவ என்னா பேசறாள்னு கேட்போம்,'' என, கோமதியை இழுத்து வந்தாள். தோட்டத்துப் பக்கம் சுகன்யாவின் அறையின் ஜன்னலருகே நின்று, காதைக் கொடுத்தாள், தெய்வாம்பிகை.

''என்னங்க... இந்த சம்பந்தத்துல, எனக்கு இஷ்டம் இல்லை,'' தெளிவாகக் கேட்டது சுகன்யாவின் குரல்.

''பார்த்தியாடி, நான் சொல்லலை. பொறாமைப் புடிச்சவ...'' என, திட்டியவள், தெளிவாக கேட்டாலும், இன்னும் காதை கூர்மையாக்கினாள்.

''என்ன சுகன்யா இப்படி சொல்ற... அந்த பையனுக்கு என்ன குறைச்சல், என்னை விட டபுள் பங்கு சம்பாதிக்கிறான்.''

''சம்பாத்தியமாம் சம்பாத்தியம். யாருக்கு வேணுங்க பணம். பணம் பணம்ன்னு நீங்க வெளிநாட்ல போயி உட்கார்ந்துட்டு, ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை வர்றீங்க. ஒரு மாசம் தங்கறீங்க.

''வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய காலத்துல, இப்படி கண்காணாத தேசத்துல போய் கஷ்டப்படறீங்க. ஒரு பொண்ணா நான் படற கஷ்டம், கொடுமைங்க. எத்தனை நாள் நடுராத்திரியில நான், பச்சைத் தண்ணியில குளிக்கிறேன் தெரியுமா?

''கோவிலுக்குப் போனா, 'அடுத்த வருஷம் புள்ளையோட வா தாயி'ன்னு குங்குமம் தர்றார், குருக்கள். ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை வர்ற புருஷனை கட்டிக்கிட்டவ எப்படி புள்ளையோட வர முடியும்?

''அது மட்டும் இல்லைங்க, அதை விட பெரிய கொடுமை என்ன தெரியுமா? ஒரு போஸ்ட்மென்கிட்ட கூட ரெண்டு நிமிஷம் கூடுதலா நின்னு பேச முடியலை. 'புருஷன் பக்கத்துல இல்ல பாரு... அதான் சிரிச்சு பேசறாள்'ன்னு கெட்ட பேரு.

''சீவி சிங்காரிச்சு வெளியே போனா, பார்க்கற கண்கள்ல எத்தனை சந்தேகம் தெரியுமா? ஒழுக்கமாயிருந்தா கூட, எப்ப கட்டுக் கதைக் கட்டி, குடும்பத்தை கலைக்கலாம்ன்னு ஒரு கூட்டம் ஊர்ல இருக்குங்க. துபாய்காரன் பொண்டாட்டின்னு ஊரு சொல்றது போயி, துப்புக் கெட்டவன் பொண்டாட்டின்னு பேர் வந்துடும் போலிருக்கு.

''கஞ்சியோ, கூழோ குடிச்சுட்டு, நிம்மதியா புருஷன் - பொண்டாட்டியா வாழறதுதாங்க வாழ்க்கை. நான் படற வேதனையும், பயந்து பயந்து வாழற வாழ்க்கையும், உங்க தங்கிச்சிக்கு வேண்டாங்க. அவ வயசுக்கேற்ற வாழ்க்கையை வாழணும்ங்க,'' என, கதறி அழுதாள், சுகன்யா.

வாயில் முந்தானையை வைத்து அடக்கி, மகளை அணைத்துக் கொண்டாள், தெய்வாம்பிகை.

''அம்மா, வேண்டாம்மா... துபாய்க்காரன் பொண்டாட்டிங்கற பேரு எனக்கு வேண்டாம்மா...'' என சொல்லி, கோமதியும் விசும்பினாள்.

ஆர். சுமதி






      Dinamalar
      Follow us