sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குற்றம் குற்றமே! (9)

/

குற்றம் குற்றமே! (9)

குற்றம் குற்றமே! (9)

குற்றம் குற்றமே! (9)


PUBLISHED ON : ஜன 28, 2024

Google News

PUBLISHED ON : ஜன 28, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை சுருக்கம்: தனக்கு கொடுக்கப்பட்ட, புது வீட்டுக்கு தங்கைகளை அழைத்துச் சென்று காண்பித்தான், தனஞ்ஜெயன். புது காரில், 'டிப் - டாப்' ஆக, உடை அணிந்து சென்று, கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் கிருஷ்ணராஜை சந்தித்தான், தனா. தன்னை ஒருவன் கண்காணித்ததை சொல்ல, இனி அவன் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினாள், கார்த்திகா.

அடுத்த, 'அசைன்மென்ட்' குறித்து கேட்டான், தனஞ்ஜெயன். தமிழகத்தில் வெவ்வெறு ஊர்களின் கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்ட புராதன சிலைகளை, ரகசிய அறையில் பாதுகாக்கப் பட்டிருந்ததை காட்டி, அவற்றை அந்தந்த கோவில்களில் சேர்க்க வேண்டும் என்றாள், கார்த்திகா.


அந்த நடராஜர் சிலையை எப்படி கீழனுார் கோவிலில் கொண்டு சேர்ப்பது என்று யோசிக்கத் துவங்கியவனோடு, அந்த அறையை விட்டு வெளியே வந்தாள், கார்த்திகா.

''என்ன தனா... இப்பவே எப்படி சேர்க்கறதுன்னு யோசிக்க துவங்கிட்டீங்களா?'' என்றாள்.

''ஆமாம் மேடம், அந்த விவேக்குக்கு தெரியாம எப்படி சேர்க்கறதுன்னும் யோசிக்கிறேன்,'' என்றான், தனஞ்ஜெயன்.

''பகிரங்கமா இதை அப்பாவால செய்ய முடியாதுங்கிறது அவனுக்கு நல்லா தெரியும். 'பார்சலா' யாருக்கும் தெரியாம போய் இறக்கிட்டு வந்தாலோ, அங்க இருக்குறவங்களே இந்த சிலையை, விவேக்கிட்ட திரும்ப கொண்டு வந்து தந்துருவாங்க. பலரை அவன், அங்க விலைக்கு வாங்கி வெச்சிருக்கான்.

''ஒருமுறை அப்பா, முருகன் சிலையை மூட்டையில கட்டி, கோவிலுக்கு அரிசி மூட்டை தானம் தர மாதிரி, கூலிக்காரன் மூலமா இறக்கிட்டு வரச் சொன்னார். ஆனா, அந்த மூட்டையில இருந்த முருகன் சிலை, திரும்ப கிடைச்சதா செய்தியே வரலை.

''பிறகு தான் அந்த தாமோதரன், 'குரூப்' போட ஆட்கள், கோவில்ல இருக்கறது தெரிய வந்தது. அந்த முருகன் சிலைக்கு நேர்ந்தது தான், இந்த நடராஜருக்கும் நேரும்,'' என்று சற்று விளக்கமாகவே நடந்ததை கூறினாள், கார்த்திகா.

''மேடம், சிலையை அந்த கோவிலுக்கு தான் அனுப்பணுமா? போலீஸ் கமிஷனருக்கோ, இல்லை மாவட்ட கலெக்டருக்கோ அனுப்பினா?'' என்றான், தனா.

''எல்லா இடத்துலயும், சி.சி.டி.வி., கேமரா இருக்கு, தனா. இதை யார், 'பார்சல்' பண்ணி கொண்டு போனாலும், அந்த நபரை, 'ட்ரேஸ்' பண்ணி பிடிச்சு, கடைசியில அது அப்பா வரை வந்துடும். 'கொரியர் பார்சலும்' அனுப்ப முடியாது.

''இப்பல்லாம் அனுப்பறவங்க முகவரி மட்டுமில்ல, மொபைல் எண்ணையும் கேட்கறாங்க. அதை வைத்து மோப்பம் பிடிச்சு வந்துடுவாங்க,'' என, எல்லா கோணங்களையும் சுட்டிக்காட்டிப் பேசினாள், கார்த்திகா.

''அப்படின்னா, திருடப் போற மாதிரியே போய், இதை வெச்சுட்டு, அதை மீடியாவுக்கும் தெரியப்படுத்துறது தான் வழியா,'' என்றான், தனா.

''வேற வழி எதாவது இருந்தா, நீங்க தான் சொல்லுங்களேன்,'' என, அவனைத் துாண்டினாள், கார்த்திகா.

''சரிங்க மேடம், எனக்கு ஒருநாள், 'டைம்' கொடுங்க. நான், கீழனுார் போய், கோவிலை ஒரு தடவை பார்த்துட்டு வந்துடறேன். நிச்சயம் சரியான, 'ஐடியா'வோட தான் வருவேன்,'' என்றவனை நம்பிக்கையோடு பார்த்தாள், கார்த்திகா.

பளபளப்பான காரில், கோட், சூட், டை தோரணையில் இறங்கி வந்த தனஞ்ஜெயனை பக்கத்து வீட்டுக்காரரில் இருந்து, எதிர் வீட்டுக்காரர் வரை எல்லாரும் வெகு ஆச்சரியமாக பார்த்தனர்.

ஒரே நாளில், ஒரு மலை உச்சிக்கு அவன் போய் விட்டது போலவும் உணர்ந்தனர்.

''என்ன தனா, கோட், சூட்டு, காருன்னு அமர்க்களமா இருக்கே. பெரிய வேலையோ?'' என்ற கேள்வியோடு தனஞ்ஜெயனிடம் நெருங்கி வந்தார், பக்கத்து வீட்டுக்காரர்.

''ஆமாம், 'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ்'ல, எம்.டி.,க்கு செகரட்டரியா வேலை கிடைச்சிருக்குங்க,'' என்றான், தனா.

''கேட்டா தான் சொல்வியா எங்களுக்கு, 'ட்ரீட்' கிடையாதா?''

''அதுக்கென்ன கொடுத்துட்டா போச்சு. வீட்டையும் காலி பண்ணப் போறேன். ஆபீஸ்ல குவாட்டர்ஸ் கொடுத்துட்டாங்க.''

''அடி சக்கை. இந்த சனிப் பெயர்ச்சி உனக்கு தான் போல,'' என்றவரை, புன்னகையோடு கத்தரித்துவிட்டு உள்ளே நுழைந்தான், தனஞ்ஜெயன்.

வீட்டில் அம்மா சுசீலாவும், அக்கா சாந்தியும் மட்டும் இருந்தனர்.

''என்னம்மா சாமானை எல்லாம் மூட்டை கட்டச் சொல்லி இருந்தேனே. எதுவும் பண்ணாம உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க?''

''காலையில வெளியே போன கீர்த்தியையும், ஸ்ருதியையும் காணலை. அதான் கையும் ஓடலை, காலும் ஓடலை,'' அம்மா சுசீலா ஈன சுரத்தில் சொல்லவும், கொஞ்சம், 'பக்'கென்றது தனாவுக்கு.

இருந்தும் சுதாரித்தபடி, ''அவங்க என்ன சின்ன குழந்தைகளா? வந்துடுவாங்கம்மா. நீங்க மூட்டை முடிச்ச கட்டுங்க. லாரிக்காரங்க வந்துட்டா எல்லாத்தையும் அவங்களே பார்த்துப்பாங்க. நீங்க பக்கத்துல இருந்து, 'கைட்' பண்ணினா போதும்,'' என்றான், தனஞ்ஜெயன்.

''இதுக்கு தான் ஒரு, 'செகன்ட் ஹேண்ட்' மொபைலாவது வாங்கணும்னேன். இருந்ததும் கீழ விழுந்து வீணாப் போச்சு. அதுக்கப்புறம் வாங்காமலேயே காலத்தை கடத்திட்டோம்.''

''அம்மா, புலம்பாத. தனா, இனி ஆப்பிள் மொபைலே வாங்கித் தருவான். அதான் விடிஞ்சிடிச்சுல்ல?'' என, சமாதானம் செய்வது போல பேசினாள், சாந்தி.

தனாவின் மனமோ, விவேக்கை எண்ணத் துவங்கியது.

ஒரு வேளை, அவன் கீர்த்தி, ஸ்ருதி விஷயத்தில் உள் புகுந்திருப்பானோ என்று அச்சப்படவும் செய்தது. அப்போது, வாசலில் கார் ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து கீர்த்தியும், ஸ்ருதியும் இறங்கினர்.

''இதோ ரெண்டு பேரும் வந்துட்டாங்க,'' என்று பரபரப்பானாள், சாந்தி. அதுவரை நிலவிய இறுக்கமும் விலகத் துவங்கியது.

''என்னடி இது, கார்ல வர்றீங்க. யார் கார் அது?'' பதைப்போடு கேட்டாள், அம்மா.

''பதட்டப்படாதம்மா. காலேஜ் அட்மிஷனுக்கு விண்ணப்பம் வாங்கப் போனோம். பயங்கர கூட்டம். அப்ப, விவேக்குங்கிற ஒருத்தர் வந்து, விண்ணப்பம் வாங்கித் தந்தது மட்டுமில்ல, அவர் கார்லயே, எங்களை அனுப்பி வெச்சாரு.

''அவரை அண்ணனுக்கு நல்லா தெரியுமாமே? அண்ணன் வேலைக்கு சேர்ந்ததுல இருந்து, புது, 'அப்பார்ட்மென்டு'க்கு குடிபோகப் போறது வரை, எல்லாத்தையும் சொன்னாரு. அண்ணனோட நண்பர் என்றதால தான், சரின்னு கார்ல ஏறினோம்.

''முதல்ல மறுத்தோம். அவர் தான், 'நானும், உங்க அண்ணன் மாதிரி தான். கூச்சப்படாதீங்க. நீங்க, இனி பெரிய செகரட்டரியோட தங்கைங்க. அதுக்கு தகுந்த கெத்தோட நடந்துக்குங்க'ன்னு சொல்லி அனுப்பி வெச்சாரு,'' என்றாள், ஸ்ருதி.

'அண்ணா, அந்த விவேக்குக்கு ஒரு நன்றி சொல்லிடுண்ணே. அவர் இல்லேன்னா விண்ணப்பம் கிடைச்சிருக்கும்மா என்பதே சந்தேகம்...' என்றனர்.

கச்சிதமாய் அப்போது, அவன் மொபைலும் ஒலித்தது. அவனும், சற்று படபடப்போடு ஒதுங்கினான்.

''என்ன தனஞ்ஜெயன், தங்கச்சிங்க வந்துட்டாங்களா. என்னை பற்றி சொன்னாங்களா?'' விவேக்கின் குரல், தனஞ்ஜெயனை சிலிர்ப்போடு நிமிர்த்தியது.

''இது, 'ஜஸ்ட் சாம்பிள்' தான். உன் தங்கைகளோ, இல்ல அக்காவோ, அம்மாவோ, சுதந்திரமா வெளிய நடமாடறது, இனி, நீ நடந்துக்கப் போறதுல தான் இருக்கு.

''அந்த கார்த்திகாவுக்கும், கிருஷ்ணராஜுக்கும், இனி, ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடக் கூடாது. எழுதிக் கொடுத்துட்டு எங்க பக்கம் வந்துரு. இதே கார், பங்களா, சம்பளம் எல்லாத்தையும் நாங்க தர்றோம்.

''உனக்கு, நான் திரும்பவும் ஒரு வாய்ப்பு தந்திருக்கேன். புத்திசாலிதனமா நடந்துக்கோ. இல்ல, என்னோட ஒவ்வொரு அடியும், மரண அடியா தான் இருக்கும். இப்ப, 'ஸ்மூத்தா' திரும்பி வந்த உன் தங்கைங்க, அப்புறம் வராமலே போகலாம். யோசிச்சு நட,'' என்று கூறி, மறுமுனையில் முடித்துக் கொண்டான், விவேக்.

தனாவுக்கு வியர்த்துக் கொட்டியது.

''என்னப்பா, யார் போன்ல? ஏன் உன் முகம் ஒரு மாதிரி மாறிடிச்சு,'' கேட்டாள், அம்மா.

''ஒண்ணுமில்லம்மா... இது, ஆபிஸ் விஷயம்.''

''என்னமோப்பா, இப்ப நடக்கற எல்லாமே, என் மனசுக்கு ஒட்டவே மாட்டேங்குது,'' என்று, தன் உணர்ச்சிகளை சுருக்கமாக சொன்னாள், அம்மா.

''இந்த வேலை நிரந்தரமாயிடும் தானே? என்னடா இப்படி கேட்கறேனேன்னு தப்பா நினைக்காத. நாளைக்கு, வேலை போயிட்டா இந்த கார், பங்களா எல்லாம் போயிடும்.

''அதுக்கு பிறகு, திரும்ப இந்த மாதிரி வீட்டுக்கு வரும்படியானா, அக்கம்பக்கமெல்லாம், 'அல்பத்துக்கு குடை பிடிச்சான். இப்ப திரும்ப வந்துட்டா'ன்னு இஷ்டத்துக்கு பேச ஆரம்பிச்சுடுவாங்க,'' என, கூறினாள், சாந்தி.

ஒருபுறம் விவேக், மறுபுறம் இவர்கள். தன் முன்னேற்றத்திற்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சிக்கல் என்றபடியே, சுவரில் மாட்டியிருந்த காலண்டரை பார்த்தான். அதில், முருகன், வள்ளி - தெய்வானையோடு இருந்தார். அவர்களின் குல தெய்வமும், பழனி முருகன் தான்.

'என்ன சாமி நீ... எல்லாத்தையும் படைச்ச நீயே, நுாறு பவுனுக்கு குறையாத நகையோட தான் எப்பவும் இருக்க. இதுல, ரெண்டு பொண்டாட்டி வேற. எங்களுக்கெல்லாம், 'டூ - வீலர்'னா உனக்கு மயில். தினமும் பூஜை வேற...' காலண்டரைப் பார்த்து, மன ஓட்டத்துடன் நின்றவனை, வந்து கலைத்தாள், தங்கை ஸ்ருதி.

''அண்ணா, அந்த விவேக்குக்கு ஒரு நன்றி சொல்லிடு. இப்படி எல்லாம் நண்பர்கள் கிடைக்க கொடுத்து வெச்சுருக்கணும்,'' என்றாள்.

திரும்பவும் அவன், மொபைல் ஒலிக்கத் துவங்கியது. திரையைப் பார்த்தான். அவன் நண்பன், குமார்.

''டேய் மாப்ள, பெரிய வேலையில சேர்ந்துட்டேன்னு கேள்விப்பட்டேன், நிஜமாவா?''

''ஆமாம்டா.''

''என்ன ஆமாம்ன்னு செத்த குரல்ல பேசற. எவ்வளவு சந்தோஷமான விஷயம் இது.''

''அது சரி, உனக்கு யார் சொன்னா?''

''உன் தெருவே பேசுதேடா. காரெல்லாம் கொடுத்திருக்காங்களாமே. எப்படிடா!''

''ஏன்டா, எனக்கு தகுதி இல்லேன்னு நீயும் நினைக்கறியா?''

''யாருடா இந்த காலத்துல தகுதியெல்லாம் பார்க்கறா. அப்படி பார்த்தா நான், 'போஸ்ட் கிராஜுவேட்!' கம்ப்யூட்டர் சம்பந்தமா எல்லா, 'டிகிரி'யையும் வாங்கிட்டேன். ''இதுவரை, 30 நேர்காணலுக்கு போயிருக்கேன். '20 ஆயிரம் சம்பளம், ஐந்தாண்டு கழிச்சு தான், 'கன்பார்ம்' பண்ணுவோம் சம்மதமா'ன்னு கேட்கறாங்க... சுண்ணாம்பு அடிக்கிறவன் மாசம், 30 ஆயிரம் சம்பாதிக்கற போது, இந்த நாட்டுல படிச்சவன் நிலை உனக்கு தெரியாதா?'' என்றான், குமார்.

''சாரி, குமார். இப்ப உன் கூட மனம் விட்டு பேசற நிலையில, நான் இல்லை. அலுவலக வேலையா கீழனுார் வரை போக வேண்டியிருக்கு. கார்ல டிராவல் பண்ணும்போது உன்கிட்ட பேசறேன். இப்ப, 'கட்' பண்ணு.''

''இருடா, இப்ப எதுக்கு கீழனுாருக்கு போற?''

''அதான் அலுவலக வேலைன்னு சொன்னேன்ல?''

''அதான்டா, என் மாமா ஊர். அவர் தான் அங்க வி.ஏ.ஓ.,''

''அப்படியா!''

''ஆமான்டா. நீ, சரின்னா உன் கூட நானும் வரேன். நானும் இப்ப ஒரு வி.ஏ.ஓ., தானே?''

''என்னடா சொல்ற?''

''வெட்டியா அலையற ஆபிசரை தான், சுருக்கமா அப்படி சொன்னேன்.''

குமாரின் கலகலப்பான பேச்சுக்குள், தனக்கு அவன் உதவுவதற்கு நிறைய சாத்தியங்கள் இருப்பதை உணர்ந்து, ''சரிடா, ரெடியா இரு. நான் வந்து உன்னை, 'பிக் - அப்' பண்ணிக்கிறேன்,'' என்றான், தனஞ்ஜெயன்.

— தொடரும்.

இந்திரா சவுந்தர்ராஜன்







      Dinamalar
      Follow us