
ஒடிசா மாநிலத்தின், மயூர் பஞ்ச், கான்சர் மற்றும் சுந்தர் கர் மாவட்டத்தில் உள்ள மக்களின் விருப்பமான, 'ஸ்நாக்ஸ்' என்ன தெரியுமா?
சமோசாவும், எறும்பு சட்னியும் தான். இதை அறிமுகப்படுத்தியது, ஒடிசாவின் சிமிலிபால் காட்டுப் பகுதியில் உள்ள பழங்குடி இன மக்கள்.
ஒடிசாவில் உள்ள மயூர் பஞ்ச் மாவட்டத்தில், 'சிவப்பு எறும்பு சட்னி அல்லது காய் சட்னி' என்று, இதை அழைக்கின்றனர். நம்மூர் தேங்காய் சட்னி போன்றது. இந்த சட்னி செய்ய, சிவப்பு நிற தையல் எறும்புகள் பயன்படுத்தப்படுகிறது.
சிமிலிபாலின் உள் காடுகளில், இவை ஏராளமாக காணப்படுகின்றன. மா, பலா மற்றும் பப்பாளி மரங்களில் பல கூடுகளை அமைத்து வாழ்கின்றன, சிவப்பு தையல் எறும்புகள்.
ஒவ்வொரு கூடும் அவற்றின் லார்வாக்களால் உற்பத்தி செய்யப்படும் நுால்களைப் பயன்படுத்தி, ஒன்றாக தைக்கப்பட்ட இலைகளால் ஆனது. மேலும், பலத்த காற்றைத் தாங்கும்படியாகவும் இருக்கும்.
இந்த சட்னி, இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களிலும், பிரபலமான உணவாக உள்ளது.
இந்த சிவப்பு நிற எறும்புகளை, பழங்குடி மக்கள், அதிகாலை வேளையில் சேகரிப்பர். இந்த எறும்புகளை சேகரிப்பது, சுலபம் இல்லை. காரணம், இந்த எறும்புகளின் ஆண் வகை எறும்புகள் கூடுகளை எடுக்கும்போது, கூடுகளிலிருந்து மொத்தமாக வெளி வந்து கடித்து, குதறி விடுமாம். இந்த எறும்புகளின் கடி, மிகவும் வேதனையை தரும் என்கின்றனர்.
கூடுகளிலிருந்து சிவப்பு எறும்புகளை நேரடியாக தண்ணீர் உள்ள வாளிகளில் சேகரித்து, பின்னர் கழுவி, காய வைத்து பயன்படுத்துகின்றனர்.
எறும்பு சட்னியை தயாரிக்க, முதலில் எறும்புகள் மற்றும் அதன் முட்டைகள் உலர்த்தப்படுகின்றன. பிறகு, அதனுடன் பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, ஏலக்காய், புளி, உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து அரைத்து பக்குவப்படுத்துவர்.
கண்ணாடி பாட்டிலில் அடைத்து, ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு வரை வைத்திருந்து, பயன்படுத்துவர். சில பகுதிகளில், சுவைக்காக, லேசாக எண்ணெயில் வறுத்தும் தயாரிக்கப்படுகிறது.
சிவப்பு எறும்பு சட்னி, சுவையான உணவாக மட்டுமின்றி, மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்துகின்றனர். மஞ்சள் காமாலை, ஜலதோஷம், மூட்டு வலி, இருமல் மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த சட்னி, அரு மருந்தாக பயன்படுகிறது.
கீல் வாதம் மற்றும் ரிங்வோர்ம் என்ற பூங்சை தொற்று போன்ற தோல் பிரச்னைகளுக்கு, இந்த எறும்புகளை ஊற வைத்து எண்ணெய் தயாரிக்கின்றனர்.
இதில், புரதங்கள், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் பி-12, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம், நார்ச்சத்து மற்றும் 18 அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன, இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
எறும்பு சட்னியின் சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக, அதன் புவிசார் குறியீடு பெற, அப்பகுதி வேளாண் துறை விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
குளிர் காலத்தில், மயூர் பஞ்ச் லோக்கல் மார்க்கெட்டில் சிவப்பு தையல் எறும்புகளை, கருங்காலி மர இலையில் கூறு கட்டி, ஒரு கூறு, 10 முதல் 20 ரூபாய் வரை விற்கின்றனர்.
ஞானதேவ்ராஜ்