sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 28, 2024

Google News

PUBLISHED ON : ஜன 28, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 39 வயது பெண். திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். கணவர், சொந்த தொழில் செய்கிறார். மாமனார் - மாமியாருடன் கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம். ஓரளவு வசதி வாய்ப்புகளுடன் உள்ளோம்.

நான், கல்லுாரியில் படிக்கும் போது, ஒருவரை காதலித்தேன். பல ஏற்றத்தாழ்வுகளால், காதல் கைக்கூடவில்லை. என் பெற்றோரும், உறவினர்களும் அவரை பலவிதங்களில் கேவலப்படுத்தினர். எனக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில், எதுவும் செய்ய முடியாமல், ஊரை விட்டே சென்று விட்டார்.

காலப்போக்கில், நானும் என் மனதை தேற்றி, சிறிது சிறிதாக அவரை மறக்க ஆரம்பித்தேன்.

சில ஆண்டுகளுக்கு பின், நல்ல வரன் வரவே, என்னை திருமணம் செய்து வைத்து விட்டனர். இப்போது, மகன், மகளுடன் சந்தோஷமாக இருக்கிறேன்.

கணவரது உறவினர் வீட்டு திருமணம் ஒன்றுக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கு, என் பழைய காதலரை சந்திக்க நேர்ந்தது. அவருக்கு திருமணமாகி, ஒரு மகன் இருப்பதாக தெரிவித்தார்.

'அந்த அவமதிப்புக்கு பின், வெளியூர் சென்று, வேலை தேடிக் கொண்டேன். மேற்படிப்பு படித்து, இன்று கம்பெனி ஒன்றில் பெரிய பதவியில் இருக்கிறேன். அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணையே திருமணம் செய்து கொண்டுள்ளேன்...' எனக் கூறினார்.

அவருக்கு நல்ல வாழ்க்கை அமைந்து விட்டது என்று, மன நிம்மதி அடைந்தேன்.

மொபைல் எண்ணை கேட்டார். முதலில் மறுத்து, இனி அவரால் எந்த தொந்தரவும் வராது என்று நம்பி, நம்பர் கொடுத்தேன்.

திருமணம் முடிந்து, வீடு திரும்பிய இரண்டாம் நாள், பழைய காதலரிடமிருந்து போன் அழைப்பு வந்தது.

சாதாரணமாக நலம் விசாரித்து, வைத்து விட்டார். ஆனால், அடுத்தமுறை அவரிடமிருந்து போன் வரவும், பேசுவதை தவிர்த்தேன்.

அவரோ, கல்லுாரியில் நடந்த பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி, பேச்சை வளர்க்க ஆரம்பித்தார்.

'இது, இருவரது குடும்ப வாழ்க்கையையுமே பாதிக்கும். இனி, போன் செய்ய வேண்டாம்...' என்று கூறியும், போன் செய்து, தொந்தரவு கொடுக்கிறார்.

இதிலிருந்து எப்படி மீள்வது அம்மா.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.



அன்பு மகளுக்கு —

ராஜ விருந்தை சாப்பிட்டு விட்டு ஏப்பம் விடும் ஒருவர், பழைய கஞ்சியில் கெட்டித் தயிரை பிசைந்து, பச்சை மிளகாயை கடித்து, உருட்டி உருட்டி வாய்க்குள் தள்ளுபவரை பார்த்து, வாய் ஊறுவதை போல இருக்கிறது, உன் நடவடிக்கை.

காதலித்தாய் காதல் கை கூடவில்லை; வேறொருவரை மணந்து இரு குழந்தைகள் பெற்று, நிறைவான வாழ்க்கை வாழ்கிறாய். உன் காதலனுக்கும் புதிய வாழ்க்கைத்துணை அமைந்து மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்கிறான்; அதுபோதும். கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டியது தானே!

நீ, மன உறுதி மிக்கவள், தற்போதைய குடும்ப வாழ்க்கையில் முழு திருப்தி கொண்டவள் என்றால், என்ன செய்திருக்க வேண்டும்?

உறவினர் வீட்டு திருமணத்தில் சந்தித்த காதலனை வெறுமை பார்வை பார்த்து, விலகி இருக்க வேண்டும். உன் உதாசீனம் கண்டு, அவனும் விலகி போயிருப்பான்.

நீ, அவனை குசலம் விசாரிக்க, இரு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி கவிழ்ந்து விட்டன. அவன் மொபைல் எண்ணை கேட்ட போதாவது கொடுக்காமல் மறுத்திருக்க வேண்டும்.

திருமண பந்தம் மீறிய உறவுக்கு விதை போட்டு விட்டாய்.

இனி நீ செய்ய வேண்டியவை-...

* உடனடியாக உன் மொபைல் எண்ணை மாற்று. புதிய எண்ணைரகசியமாக வைத்துக் கொள்.

* மனதை அலைபாய விடாதே. உன் காதல் கை கூடாமல் போனதற்கு, இறைவன் எதாவது காரணம் வைத்திருப்பான். கிடைத்த வாழ்க்கையில், மகிழ்ச்சியும், திருப்தியும் கொள்.

* இனி, உன் காதலனை நேருக்கு நேர் சந்தித்தாலும், ஒரு வார்த்தை கூட பேசாதே. வாழ்க்கையில் சந்திக்க விரும்பாத நபராக, காதலனை பாவி.

* மகளின் எதிர்காலத்தை யோசிக்க வேண்டிய வயதில், பழைய காதலனின் மொபைல் பேச்சை பற்றி அசைபோட்டுக் கொண்டு இருக்கலாமா?

* நீ, நல்லவனை தான் காதலித்து இருந்திருக்கிறாய் என்றால், உன் புறக்கணிப்பை உணர்ந்து, உன்னை விட்டு விலகி வெகுதுாரம் போய் விடுவான், அவன்.

* உறவினர் திருமணத்தில் பழைய காதலனை சந்தித்ததை, 'செலக்டிவ் அம்னிஷியா'வில் மறந்து, உன் குடும்பத் தலைவி பணியை முன்னை விட அற்புதமாக செய்.

என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us