
ஜன.,28 பிறந்த நாள்
பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூர் மாவட்டத்தில், தோடி கிராமத்தில், ஜன., 28, 1865ல் பிறந்தார், லாலா லஜபத் ராய். முக்தாரி என்ற சட்டப் படிப்புக்கான தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றார்.
'என் தாயாருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன். அவருடைய உதவும் குணமும், விருந்தோம்பலும், பெருந்தன்மையும், எனக்கு சிறந்த படிப்பினைகள் தந்தன. சக்திக்கு இயன்ற அளவுக்கு, தானம் செய்யும்படி துாண்டுவார்...' என்று கூறியுள்ளார், லஜபத் ராய்.
இவரை, சமூக மற்றும் தேச சேவையில் திருப்பி விட்டவர், மகரிஷி தயானந்த சரஸ்வதி. அதன்பின், ஆரிய சமாஜத்தில் ஈடுபாடு கொண்டார், லஜபத் ராய்.
கடந்த, 1886ல் ஆரிய சமாஜத்தின் ஸ்தாபகர், சுவாமி தயானந்தர் காலமானார். அவர் நினைவாக, தயானந்த ஆங்கிலோ வைதிக் - டி.ஏ.வி., கல்லுாரி துவக்கப்பட்டது. பிறகு, பஞ்சாபின் பல இடங்களில், டி.ஏ.வி., உயர்நிலை பள்ளி துவங்கப்பட்டது.
கல்வி வளர்ச்சிக்கான இந்த முயற்சியில், முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார், லஜபத் ராய்.
அத்துடன், லாகூர் உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து, சம்பாதித்த பணத்தை, சிக்கனமாய் செலவு செய்து, மீதமுள்ள பெரும்பகுதியை தானமாக வழங்கினார்.
கடந்த, 1896 - 97ல், வட மாநிலத்தில், கொடிய பஞ்சம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உணவின்றி தவித்தன. தங்கள் குழந்தைகளை விற்றும், ஆங்காங்கு விட்டும் சென்றனர், பலர். சிறுவர்களை அழைத்துச் சென்று, பசி தீர்த்து, காப்பாற்றி, கிறிஸ்துவ மதத்தில் சேர்த்தன, கிறிஸ்துவ மிஷினரிகள். பஞ்சாபில் மட்டும், 70 ஆயிரம் ஹிந்து குழந்தைகளை, கிறிஸ்துவ மதத்தில் சேர்த்தனர்.
ஆரிய சமாஜமும், குழந்தைகளை காப்பாற்றுவதில் ஈடுபட்டது. ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அனாதை இல்லங்களை துவக்கி, காப்பாற்றியது. இதற்கான பெருமுயற்சி எடுத்தவர், லஜபத் ராய்.
மீண்டும், 1907, 1908ல் பஞ்சம் ஏற்பட, ஒரிசா, மத்திய மாகாணம், ஐக்கிய மாகாணம் ஆகிய மூன்று மாகாணங்களில், பட்டினியில் தவித்தனர், மக்கள்.
இங்கெல்லாம் சென்று தொண்டர் படை அமைத்து, அரிய சேவை செய்தார், லஜபத் ராய்.ஐக்கிய மாகாணத்து அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், ஆங்கிலேய அதிகாரி ஒருவர், குறிப்பிட்டிருந்ததாவது:
நான், பஞ்சத்தால் பீடிக்கப்பட்டு ஒரு கிராமத்தில் முகாமிட்டிருந்தேன். அப்போது, கிராம மக்களுக்கு உதவி செய்ய, ஆரிய சமாஜ் தலைவர், அங்கு வந்து சேர்ந்தார். அவருடைய உதவி மிக தாராளமாய் இருந்தது.
'அரசாங்கத்திடம் உதவி பெறுவோர், தனிப்பட்டவர்களிடம் உதவி பெறாலாமா?' என்று, மக்களுக்கு ஐயம் வந்து விட்டது. என்னிடம் வந்து கேட்டனர்.
எவ்வளவு கிடைத்தாலும், யார் கொடுத்தாலும் ஏற்கும்படி, அவர்களிடம் கூறினேன். 'இவ்வாறு அள்ளிக் கொடுக்கும் கனவான் யார்?' என்று, கிராம மக்களையே கேட்டேன்.
'ஏழைப் பங்காளன் லாலா லஜபத் ராய் தான்...' என்றனர், மக்கள்.
இப்படி குறிப்பிட்டிருந்தார், ஆங்கிலேய அதிகாரி.
தேவைப்படுகிற இடங்களுக்கெல்லாம் உதவி செய்ய விரையும் அந்த பெருமகனை, 'பஞ்சாப் சிங்கம்' என அழைத்தனர், மக்கள்.
பின்னர், திலகருடன், காங்கிரசில் சேர்ந்தார், லஜபத் ராய். இரண்டு முறை ஜெயிலுக்கு சென்றார். இதில், ஒருமுறை கடுங்காவல் தண்டனையாக, பர்மா, ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்.
ஜெயிலில் இருந்தபோது, காச நோய் பாதிப்பு, தடியடி என, பல துன்பங்களை அனுபவித்து, நவ., 17, 1928ல் காலமானார்.