
அழகர்கோவில் சாலையில் பயணம் செய்வது இனிமை. 'சுள்' என்று வெயிலடித்தாலும், 'சோ' என்று மழையடித்தாலும், இதமான காற்று, உடலை தழுவிச் செல்லும். சர்வேயர் காலனியிலிருந்து சூர்யா நகர் வருவதற்குள் எத்தனை கண்மாய்கள், குளங்கள்.
மழைக்காலங்களில் நிரம்பி நிற்கும் தண்ணீர், வெண்மையைப் பரப்பி வசீகரிக்கும். மாலை நேரத்தில் மொட்டை மாடிக்கு வந்தால், அடர்ந்த பூங்காவில் காலாற நடப்பது போல் மனம் குதுாகலிக்கும்.
நம் மக்கள், நீர்நிலைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளனர் என்பதை நினைத்தால், மலைப்பான சந்தோஷம் மனசுக்குள் வந்து போகும். அந்தச் சாலையில் தான் கணவருடன், ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தாள், மாதுளா.
மாதுளாவிற்கு, இன்று மருத்துவரைப் பார்க்க வேண்டிய கட்டாயம். திடீரென்று தலைசுற்றல், தடுமாற்றம்.
அடுக்களையில் நின்றிருந்தவள் அடுப்பை நிறுத்திவிட்டு, அங்கேயே தரையில் படுத்து விட்டாள். இரண்டு நிமிடம் கடந்து, மெதுவாகக் கண்களைத் திறந்து எழுந்ததும், பயங்கரமான களைப்பை உணர்ந்தாள்.
'என்ன இப்படி?' என்று, கணவரிடம் கூறினாள். வழக்கமாய் பார்க்கக்கூடிய மருத்துவரைப் பார்த்தாள். மருத்துவரிடம் பேசிவிட்டு, கையில் மருந்து சீட்டுடன் வெளியில் வர எத்தனித்த போது, 'மாலையில், கட்டாயம் வந்து என்னைப் பாருங்கள்...' என்றார், மருத்துவர்.
எழுதித் தந்த மாத்திரையை சாப்பிட்டும், மாலைக்குள் மூன்று, நான்கு தடவை தலைசுற்றல் வந்து விட்டது, மாதுளாவுக்கு. ஒவ்வொரு முறையும் தீவிரமாக இருந்தது.
கட்டில், தலையணை, காற்றாடி என, அனைத்தும் தனித்தனியாக சுற்ற, இவளும், 'கிர்'ரென்று சுற்றுவதாய் உணர்ந்தாள். துயரம் தாங்க முடியாமல், கணவரின் கரங்களைப் பிடித்து அழுத்தினாள்.
கடுமையான களைப்புடன் ஓய்ந்து கிடந்த மாதுளா, மாலையில் மருத்துவரை சந்தித்தாள். அப்போது, மருந்து எதுவும் பரிந்துரைக்காமல், 'நீங்க, ஒரு காது டாக்டரைப் பார்ப்பது தான் நல்லது...' என்றார்.
காது மருத்துவரைப் பார்க்கத்தான், கணவருடன் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தாள், மாதுளா.
மருத்துவமனை வாசலில் ஆட்டோ நின்றவுடன், இறங்கி, உள்ளே வந்தனர். வந்தவர்கள் அமர, ஹாலில் வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதன் முகப்பில் பதிவு செய்யும் இடம் இருந்தது.
ரிசப்ஷனில் ஒரே வயதுள்ள ஏழெட்டுப் பெண்கள் இருந்தனர்.
பெயர், முகவரி, வயது கேட்டு, பதிவு செய்து, 'உட்காருங்க... கூப்பிடுறோம்...' என்றாள், ஒரு பெண்.
பெயர் பதிவு செய்தவர்களை அழைத்து, ரத்த அழுத்தம் பார்த்தாள், ஒரு பெண். இன்னொருத்தி உயரம், மற்றுமொருத்தி எடை பார்த்து பதிவு செய்தாள்.
எல்லாமே ரிசப்ஷன் மேசைக்கு அருகில் தான் நடக்கும்.
ஒருத்தி, மடமடன்னு மாடிக்கு ஓடினாள், மீண்டும் கீழே வந்தாள்.
ஒருத்தி, அட்டையில் பதிந்து கொண்டே, ஏதோ சொன்னாள்.
'குப்'பென சிரிப்பலை எழுந்தது.
ஒருத்தி உரக்கச் சத்தமிட்டு, இன்னொருத்தியைக் கேலி செய்ய, ஓடி வந்து அடிக்க வந்தாள்.
இப்படி அந்த இடம், கலகலன்னு, ஒரே சமயத்தில் கிளிக்கூட்டம் குரல் எழுப்புவது போல இருந்தது.
வேலையை செய்து கொண்டே இத்தனையும் நடைபெற்றது.
ஒருத்தி, நோயாளியை வரிசைப்படி மருத்துவர் அறைக்குள் அனுப்பிக் கொண்டே, தன் தோழியரிடம் சிரித்துப் பேசினாள். மருத்துவர் அறையிலிருந்து வெளி வருபவர்களை மருந்து வாங்கும் மேசைக்கு வழி நடத்தியபடி பேசி, சிரித்தாள்.
அப்பப்பா என்ன தான் பேசுவரோ... சிரிப்பு, பேச்சொலி, ஒருவருக்கொருவர் அடித்தல், விளையாடுதல் என, கொண்டாட்ட நாளில் பள்ளிச் சிறுமிகள் கூச்சலிட்டுக் கூடிக்களிப்பது போல் இருந்தது.
'வேலை செய்ற இடத்தில், இப்படியா கூத்தடிப்பது?' மனதுக்குள் நினைத்துக் கொண்டாள், மாதுளா.
ஆனால், வேலை தொய்வின்றி நடைபெற்றது.
எல்லாரும், 18லிருந்து 21 வயதுக்குள் தான் இருந்தனர். உயரம், எடை கூட ஒரே மாதிரி இருப்பது போல புலப்பட்டது, மாதுளாவிற்கு.
சரியா தான் வேலை செய்றாங்க. ஆனா, வேலை செய்ற இடத்துல இத்தனைப் பேச்சா! இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் பொறுப்புங்கிறது கிடையாது, எல்லாமே, 'அசால்ட், டேக் இட் ஈஸி பாலிசி'தான், என்றும் நினைத்துக் கொண்டாள்.
'மாதுளா மேம்... மாதுளா மேம்...' இரண்டு முறை அவளின் பெயரை ஒரு சின்னக் குயில் கூவவும், எழுந்து, மருத்துவர் அறைக்குள் நுழைந்தாள்.
மருத்துவரிடம், தனக்குத் தலை சுற்றுவதை பற்றி நீட்டி முழக்கினாள், மாதுளா. மருத்துவருக்கே தலை சுற்றியிருக்கும்; அந்தளவு சுற்றினாள்.
எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்ட மருத்துவர் நெற்றியில், வளையத்தில் பொருத்தப்பட்ட விளக்குடன் அவளைப் பரிசோதித்தார். நீளமான கம்பியில் பொருத்தப்பட்ட எரியும் வெளிச்சத்தைச் செவிக்குள் நுழைத்தார்.
கம்ப்யூட்டர் திரையில் கூர்ந்து பார்த்தார். பின், கருவிகளைக் கழற்றிவிட்டு, தலைச் சுற்றலுக்கான காரணங்களை விளக்கினார்.
''சரி செய்து விடலாம்...'' என்று, உத்தரவாதம் கொடுத்தார்.
''ஆனால், இது சரியாக, குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். ஒவ்வொரு, 15 நாள் இடைவெளியில் நீங்கள் வரவேண்டி இருக்கும்,'' என்றார்.
''எப்படியும் சரியாயிடும்ல, டாக்டர்?''
''அதெல்லாம் கவலைப்பட வேண்டாம்!''
மருந்துகளை எழுதிய சீட்டை உதவியாளரிடம் கொடுத்து, அனுப்பி வைத்தார்.
மருத்துவர் அறிவுரைப்படி, மருத்துவமனைக்கு வந்து போனாள், மாதுளா.
பலமுறை மருத்துவமனை வந்து போனதில், மருத்துவரிடம் நல்ல நட்பு ஏற்பட்டது, மாதுளாவுக்கு.
ஒருநாள்... மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தாள், மாதுளா. நோய், சிகிச்சை, மருந்து மாத்திரை தாண்டி, பேச்சு நீண்டது.
''நீங்க சொன்ன மாதிரியே எனக்கு தலைச்சுற்றல் சரியாயிடுச்சு, டாக்டர். ரொம்ப நன்றி!'' என்றாள், மாதுளா.
''நீங்களும் என்னோடு ஒத்துழைச்சதும் ஒரு காரணம் மேடம்.''
இப்படி ஆரம்பித்த பேச்சு மருத்துவமனை பற்றி வந்தது.
''எல்லாம் சரிதான் டாக்டர்... உங்க உதவியாளர்கள் தான் கொஞ்சம் சரியாகணும்,'' என்றாள்.
''அப்படியா!'' என்றார், மருத்துவர்.
''டாக்டர்... நீங்க, ஒருநாள், 'சர்ப்ரைஸா' வந்து, 'ரிசப்ஷனை' பாருங்க. ஒரே அரட்டை, கிண்டல்!''
சிரித்தபடியே, சற்றுத் தள்ளி நின்றிருந்த உதவியாளர்களை, ''கொஞ்சம் வெளியே இருங்கள்,'' என்று, அனுப்பி வைத்தார், டாக்டர்.
இன்டர்காமை அழுத்தி, இரண்டு கப் காபி கொண்டு வரச் சொன்னார்.
தன் மேசையில் இருந்த கண்காணிப்புக் கணினியை மாதுளாவின் பக்கம் திருப்பி வைத்தார், மருத்துவர்.
திரையைப் பார்த்தாள், மாதுளா.
ரிசப்ஷன் பகுதியைக் காட்டியது திரை. மாதுளா கூறியது போல, பேச்சு, அரட்டை, சிரிப்பு என, அமர்க்களப்பட்டது, அந்த இடம்.
''பாருங்க டாக்டர், எவ்வளவு கூத்தடிக்கிறாங்கன்னு,'' என்றாள், மாதுளா.
''நீங்க, சொல்றது உண்மை தான் மேடம்.''
''இதெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கிட்டா நல்லது இல்லையா... நான் ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டேனா, டாக்டர்?''
''நோ நோ மேடம், ஒண்ணு கவனிச்சீங்களா... ரிசப்ஷனில் இருக்கற அத்தனை பேரும் பெண்கள். அவங்களுக்கு என்ன வயசு இருக்கும்ன்னு நினைக்கிறீங்க?''
''பத்தொன்பது அல்லது இருபது!''
''இவங்களாம் யாரு, எங்கிருந்தெல்லாம் வர்றாங்கன்னு தெரியுமா மேடம்? எல்லாருக்கும் வயசு அதிகபட்சம், 20 தான். பக்கத்து கிராமங்களில் தான் வசிக்கிறாங்க.
''பிளஸ் 2 முடிச்சவுடனே, கடனை வாங்கி, சின்னதா ஏதாவது மருத்துவ சம்பந்தப்பட்ட படிப்பைப் படிச்சுட்டு, இது மாதிரி மருத்துவமனைக்கு வேலைக்கு வந்துடறாங்க. மருத்துவமனையில கிடைக்கிற சம்பளம் அப்படியே அவங்க குடும்பத்துக்குத் தேவைப்படுது.
''அப்பா, குடிகாரனா இருப்பார். அம்மா, நோயாளி. இவங்களுக்கு கீழே ஒரு தம்பியோ, தங்கையோ இருப்பாங்க. விவசாயத்தை நம்பிய குடும்பங்கள். அது கை கொடுக்காத போது, இது மாதிரியான பெண் பிள்ளைகள் தான், அந்தக் குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரமா இருக்காங்க.
''பொறுப்பான பையன்களும் இருக்கத்தான் செய்றாங்க. ஆனா, பெண் பிள்ளைகளுக்கு அப்பா, அம்மா மீதும், குடும்பத்தின் மீதும் கொள்ளை ஆசை. நினைச்சுப் பாருங்க... நீங்களும், நானும் நம்மளோட, 'டீன் - ஏஜ்'ல எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்போம்.
''ஆனா, இந்தப் பிள்ளைங்க தோளில் இப்பவே குடும்ப சுமை. வேலை முடிந்து வீட்டுக்குப் போனா, பெரும்பாலும், உப்பு இல்லை, புளி இல்லைன்ற பஞ்சப்பாட்டு தான் இருக்கு. சிரிப்போ, கேலியோ அவங்களிடமிருந்து துாரப் போயிடும்.
''விடிஞ்சவுடனே, பையத் துாக்கிக்கிட்டு வேலைக்கு ஓடி வந்துடுவாங்க. இந்த இடம் தான் அவங்களுக்குச் சொர்க்கம். ஒவ்வொரு பெண்ணும், ஒரு குட்டி தேவதையா நினைச்சுக்கிட்டு சிரிச்சு, கும்மாளமிட்டு வேலையைப் பார்க்கறாங்க.
''அதுமட்டுமில்ல, இங்க வர்றவங்க எல்லாரும், உடம்புல நோயையும், மனசுல பாரத்தையும் துாக்கிக்கிட்டு வர்றவங்க தான் அதிகம்.
''இது மாதிரி வர்றவங்களோட முகத்துல தெரியுற வேதனை, இவங்களையும் ஒட்டிக்கத்தான் செய்யும். அதையும் வழித்துத் துடைத்துவிட்டு, சிரிப்பும், புன்னகையுமா வலம் வர, இந்த மருத்துவமனை அவங்களுக்கு ஒரு களமா இருக்கட்டும்ன்னு நினைப்பேன்.
''இன்னொன்னு கவனிச்சீங்களா மேடம்... ஒவ்வொரு பெண்ணும் பத்து நிமிஷத்துல, நாலு முறையாவது மருத்துவமனையின் மாடி, கீழே மருந்தகம், என் அறைன்னு சுற்றி சுற்றி வந்து வேலை பார்ப்பாங்க.
''அதுக்கு அவ உடம்புல எவ்வளவு சக்தி வேணும். அவ்வளவு சக்தியையும் ஒவ்வொரு பெண்ணும் இந்தக் கூட்டத்தில இருந்து தான் எடுத்துக்கறாங்க.''
மேலே தொடர இருந்த மருத்துவரை இடைமறித்த மாதுளா, அவரைப் பார்த்து, இரு கரம் கூப்பி, ''புரியுது டாக்டர்...'' என்றாள்.
அவள் விழியிலிருந்து நீர்த்தாரைகள் வழிந்தன.
மருத்துவரின் அறையிலிருந்து வெளிவந்த மாதுளாவின் செவிகளில், அந்தக் கிளிக்கூட்டச் சத்தம், தேனாக இனித்தது.
உ. அனார்கலி