PUBLISHED ON : பிப் 04, 2024

பிப்., 9 தை அமாவாசை
'எதை வேண்டுமானாலும் மாற்ற முடியும், ஆனால், உன் விதியை மாற்றவே முடியாது...' இந்த வார்த்தைகளை உதிர்க்காதவர்களே உலகில் இல்லை. ஆனால், விதியை மாற்றும் சக்தி ஒரே ஒரு ஆயுதத்துக்கு இருக்கிறது. அது தான் நிஜபக்தி என்னும் சரணாகதி. அவ்வாறு, சரணாகதி அடையவும் ஒரு நல்ல நாள் வர வேண்டுமே. அந்த நன்னாள் தான், தை அமாவாசை.
இந்த நாளில் இருவரின் தலையெழுத்தை, சிவ - பார்வதி மாற்றினர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த இருவரும், அதிலிருந்து மீண்ட நன்னாள் இது.
மார்க்கண்டேயன் என்பவர், 16 வயதிலேயே உயிர் துறப்பார் என, எழுதி விட்டார், பிரம்மா.
மிருகண்ட முனிவர் - மருத்துவவதியின் பிள்ளை அவர்; தீவிர சிவபக்தர். அந்தப் பெற்றோர் தன் மகனுக்கு, 16 வயதானதும், மனம் துடிக்க, தீர்க்காயுள் அளிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டினர்.
தன் மகனிடம், 'பூலோகத்தில் கடவூர் என்ற திருக்கடையூர் தலம் இருக்கிறது. அவர், உயிர் காப்பவர் என்பதால், சாகா மருந்தான அமிர்தத்தின் பெயரால், அவரை அமிர்தகடேஸ்வரர் என்பர். அவரைச் சரணடை...' என்றார், மிருகண்ட முனிவர்.
விதிப்படி, மார்க்கண்டேயரை விரட்டினான், எமன். அமிர்தகடேஸ்வரர் சன்னிதிக்குள் புகுந்து, லிங்கத்தைக் கட்டிக் கொண்டார், மார்க்கண்டேயர். லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவனின் திருவடி, எமனை மிதித்து தள்ளியது.
'என்றும், 16 வயதுள்ளவனாக நீ இருப்பாய்...' என ஆசிர்வதித்தார், சிவன். இந்த லீலை நடந்த நாள், தை அமாவாசை.
அங்குள்ள அம்பாள், அபிராமி எனப்படுவாள். 'அபி' என்றால், பயத்தைப் போக்குபவள். 'ராமி' என்றால், புத்திசாலித்தனமான செயல்களைச் செய்பவள்.
சுப்பிரமணிய பட்டர் என்ற பக்தர், தினமும் அபிராமியை வழிபட வருவார். ஒரு தை அமாவாசையன்று, அவர், அம்பாள் முன் நின்று, முழுநிலா போன்ற அவளது முகத்தை தரிசித்துக் கொண்டிருந்தார். அந்த பரவசத்தில், தன்னை மறந்து விட்டார்.
அந்நேரத்தில், அங்கு வந்த மன்னர், 'இன்று என்ன திதி?' எனக் கேட்க, பவுர்ணமி என, சொல்லி விட்டார், அவர்.
'இது கூட தெரியாத ஒருவனை, உறியில் கட்டி, கயிறுகளை அறுத்து, கீழே நெருப்பு மூட்டி கொல்லுங்கள்...' என்றார், மன்னர்.
பரவசம் கலைந்த பக்தர், தனக்கு ஏற்பட்ட நிலையை அம்பாளிடம் முறையிட்டு. 100 பாடல்கள் கொண்ட அந்தாதி பாடினார். அந்தாதி என்றால், எந்த வார்த்தையில் ஒரு பாடல் முடிகிறதோ, அந்த வார்த்தையை கொண்டு அடுத்த பாடலை ஆரம்பிக்கும் வகை.
அந்தம் என்றால் கடைசி. ஆதி என்றால் முதலாவது. அந்தமும், ஆதியும் சேர்ந்ததே, அந்தாதி. ஒரு பாட்டுக்கு, ஒரு கயிறு வீதம் அறுக்கப்பட்டது. 79ம் பாடல் பாடும் போது, அம்பாள், தன் காதணியைக் கழற்றி வானில் வீச, அது பவுர்ணமி நிலவாக ஒளி வீசியது. மன்னரும், மற்றவர்களும், பட்டரின் காலில் விழுந்தனர்.
இவ்வாறு பக்தர்களின் விதியை மாற்றும் நாளாக அமைந்தது, தை அமாவாசை.
நமக்கும் பல பிரச்னைகள் இருக்கும். விதியே என இருக்காமல், இறைவனை சரணடைந்தால், நம் விதியும் மாறும். பிப்., 9 தை அமாவாசையன்று, திருக்கடையூர் சென்று, அம்பாளையும், அமிர்தகடேஸ்வரரையும் வணங்கி வாருங்கள்; விதியை வெல்லுங்கள்.
- தி. செல்லப்பா