
நேர்மைக்கு கிடைத்த பரிசு!
நண்பரை காண, அவரின் இல்லம் சென்றிருந்தேன். அந்த ஊரில், அஞ்சல்துறை ஊழியரான, தபால்காரருக்கு, பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெறுவதை அறிந்து, நண்பருடன் நானும் விழாவிற்கு சென்றேன்.
அங்குள்ள அனைவரும் தபால்காரரை வாழ்த்தி, பேசிக் கொண்டிருந்தனர்.
இறுதியில், அந்த தபால்காரருக்கு, ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, வீட்டு மனை பட்டாவை, பரிசாக கொடுத்தனர்.
ஆனந்த கண்ணீரில் நனைந்து, அந்த பட்டாவை ஏற்றுக் கொண்டார், தபால்காரர்.
'ஒரு தபால்காரருக்கு, இவ்வளவு பெரிய கவுரவமா?' என்று, நண்பரிடம் கேட்டேன்.
'இந்த தபால்காரர், எங்கள் ஊரில், 10 ஆண்டுகளாக பணியில் இருந்தார். ஒவ்வொரு நாளும் வரும் தபால்களை, அன்றே பட்டுவாடா செய்து விடுவார். முதியோர் ஓய்வு தொகையை, அவரவர் வீட்டுக்கே சென்று கொடுப்பார்.
'வங்கிகளுக்கு நேரில் சென்று பணம் எடுக்க முடியாத முதியோர்களுக்கு, இவரே, பணத்தை எடுத்து வந்து கொடுப்பார். இதுவரை யாரிடமும், ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியது இல்லை.
'மக்களே மனம் உவந்து பணத்தை கொடுத்தாலும், 'இது என் கடமை. இதை செய்ய தான், அரசு எனக்கு சம்பளம் கொடுக்கிறது. அதுவே எனக்கு போதும்...' என்பார். மக்களிடம் எப்போதும் அன்போடும், சிரித்த முகத்துடனும் பேசுவார்.
'இவரின் நல்ல செயலை பாராட்டி தான், ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, அவரவர்களால் முடிந்த தொகையை சேர்த்து, அவர் பெயரில், வீட்டு மனையை வாங்கி பரிசளிக்கிறோம்...' என்றார்.
லஞ்சம் வாங்குபவர்கள் மத்தியில், சேவை ஒன்றே குறிக்கோளாகவும், கடமையாகவும், செய்யும் தொழிலை தெய்வமாய் போற்றும் அஞ்சல்துறை ஊழியரை நினைத்து, பெருமையாக இருந்தது.
எந்த தொழில் செய்தாலும், அதில் நேர்மை மட்டும் இருந்தால், செல்லும் இடத்தில் எல்லாம் சிறப்பு வந்து சேரும் என்பதற்கு, இதுவே சாட்சி.
வெ. சென்னப்பன், உதகை, நீலகிரி.
'பைனான்ஸ்' நண்பரின் அணுகுமுறை!
முறைப்படி பதிவு செய்து, 'பைனான்ஸ்' கம்பெனி நடத்தி வருகிறார், நண்பர். 'செக்யூரிட்டி'க்காக, அவரிடம் கடன் கேட்டு வரும் நபர்களுக்கு, கண்டிப்பாக கைத்தொழில் ஏதாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதே, அவர் விதிக்கும் நிபந்தனை. அவர்களுக்கு தான் கடன் வழங்க, முன்னுரிமை அளிப்பார்.
இதுபற்றி அவரிடம் கேட்டேன்.
'என்னிடம் கடன் பெறுபவர்கள், அதை வைத்து அவர்களின் அவசர செலவை சமாளித்துக் கொண்டாலும், கடன் தவணைகளை திருப்பிச் செலுத்தும்போது, அதை சமாளிக்கும் திறனுடையவர்களாக இருப்பது அவசியம்.
'எந்த தொழில் செய்தாலும், கூடுதலாக ஏதாவது ஒரு கைத்தொழிலையும் செய்யும் திறன் பெற்றவராக இருக்கணும்.
'செய்யும் தொழில் நஷ்டமடைந்து, கடனை அடைக்க முடியாத நிலை ஏற்படும்போது, மன உளைச்சலுக்கு ஆளாகி, தவறான முடிவு எடுக்காமல், தன்னம்பிக்கையோடு கைத்தொழில் செய்து, கடனை அடைக்க முயல்வார், நம்பிக்கையோடு வாழவும் செய்வார்...' என்றார்.
நண்பரின் அணுகுமுறை, இன்றளவும் அவர் தொழிலை முன்னேற்றி வருகிறது என்பதை, மறுப்பதற்கில்லை.
மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.
வித்தியாசமான அழைப்பிதழ்!
மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்தார், உறவினர்.
அழைப்பிதழில், மணமகன், மணமகளுடைய, 'பாஸ்போர்ட் சைஸ்' புகைப்படங்களுடன், திருமண மண்டபத்தின் படமும், 'மேக்ஸி சைஸ் போட்டோ பிரின்ட்'டில் இருந்தது.
மணமக்கள் மற்றும் பெற்றோர் பெயர்களோடு, திருமண நாள், இடம், நேரம் உள்ளிட்டவற்றை, கணினியில் அழகாக வடிவமைத்து, 'பிரண்ட்ஸ் கார்டு' போல, எளிமையாக வழங்கி இருந்தார்.
அவரிடம் இதுபற்றி கேட்டேன்.
'விவரங்களைப் பார்த்துவிட்டு துாக்கி எறிந்துவிடக் கூடிய அழைப்பிதழ்களில், அதிக பணத்தை விரயமாக்க வேண்டாமென்பது, இரு வீட்டாரின் முடிவு. அதேபோல், மண்டபத்தின் முன், 'பிளெக்ஸ்' வைக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறோம்.
'அதனால் தான், திருமணத்திற்கு வருவோர், மணமக்களையும், மண்டபத்தின் படத்தைப் பார்த்தே சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளும் வகையில், ஐந்து ரூபாய்க்கும் குறைவான தொகையில், 'போட்டோ பிரின்ட்'டில் வடிவமைத்து இருக்கிறோம்...' என்றார்.
வசதி இருக்கிறது என்பதற்காக, பணத்தை விரயமாக்காமல், 'பிளெக்ஸ்' கலாசாரத்தை ஒழிக்க ஒத்துழைத்து, பொறுப்புடன் செயலாற்றிய உறவினருக்கு, 'சபாஷ்' போட்டேன்.
ஆர்.ஜெயசங்கரன், விழுப்புரம்.