PUBLISHED ON : பிப் 04, 2024

பிப்., 9 - உலக பீட்சா தினம்
இத்தாலி நாட்டின் நேபிள்ஸில், 8ம் நுாற்றாண்டில், முதன் முதலாக, பீட்சா தயாரிக்கப்பட்டது. ஏழை தொழிலாளர்களின் பசியாற்ற வந்த எளிய உணவாக முதன் முதலில் அறிமுகமானது.
பீட்சா வரலாற்றில், நேபிள்ஸ் பெரும் பங்கு வகிக்கிறது. விரைவாகச் செய்வது மட்டுமின்றி, மலிவாகவும் இருந்தது. அதன்பின், பிரபலமான தெரு உணவாக மாறியது. அந்த தட்டை ரொட்டிகளை, பெரிய பெட்டிகளில் துாக்கி வந்து விற்றனர், தெரு ஓர வியாபாரிகள். தொழிலாளிகளின் காலை உணவை அவை பூர்த்தி செய்தன.
கடந்த, 1800க்கு பிறகு, பிரபலமாக மாறத் துவங்கியது, பீட்சா. அச்சமயம், இத்தாலிய ராணி மார்கெரிட்டா மற்றும் மன்னர் உம்பர்டோ, தங்களின் ராஜ்யத்தை சுற்றி வந்தனர்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, விவசாய கிராமங்களில் தயாரிக்கப்படும் பீட்சாக்களை சுவைத்தார், ராணி. அந்த சுவை பிடித்துப் போகவே, சமையல்காரர்களிடம், பீட்சா குறித்து கூறி, தயாரிக்க சொன்னார்.
மென்மையான வெள்ளை சீஸ், தக்காளி ஆகியவற்றால், இந்த பீட்சா தயாரிக்கப்பட்டது. இதன் காரணமாகவே, பீட்சாவுக்கு, மார்கெரிட்டா என, அவரது பெயர் சூட்டப்பட்டது. 19ம் நுாற்றாண்டில், இத்தாலி முழுவதும், பீட்சா, பிரபலமான உணவானது.
இத்தாலியர்கள், அமெரிக்காவிற்கு செல்லத் துவங்கியதும், பீட்சா மற்ற நாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்கள் வேலை செய்யும் உணவகங்கள் மற்றும் கடைகளில் விற்கப்பட்டது. அப்படியே உலகம் முழுவதும் பிரபலமானது.
அண்மையில், 1001 வகையான சீஸ்களால் பீட்சாவை உருவாக்கி, கின்னஸ் சாதனை படைத்துள்ளனர், பிரான்ஸை சேர்ந்த சமையல் நிபுணர்களான, பெனாய்ட் மற்றும் மாண்டெலானிக்கோ. இந்த பீட்சாவில், 940 வகையான பிரெஞ்சு சீஸ்களும், 61 வகையான மற்ற நாட்டு சீஸ்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கன்வென்ஷன் ஹாலில், 'யுடியூபர் ஏர்ராக்' உடன் இணைந்து, மிகப்பெரிய பீட்சாவை தயாரித்தது, பிரபல பீட்சா ரெஸ்டாரன்டான, 'பீட்சா ஹட்!'
பீட்சா ஹட் ஊழியர்கள் பலர் இணைந்து, மாவை திரட்டி, அதன் மேல் தாக்காளி சாஸ், சீஸ் போன்ற சுவை கூட்டும் உணவு பொருட்களை சேர்த்து, 14 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பீட்சாவை தயாரித்து, கின்னஸ் உலக சாதனையைப் படைத்தனர்.
இதற்கு முன், 2021ல், 834 சீஸ் வகைகள் கொண்டு உருவாக்கப்பட்ட பீட்சா தான், உலக சாதனையாக இருந்தது.
- கோவீ ராஜேந்திரன்